Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக ஏன் நூலகங்களைத் திறக்கிறது? - கலைஞர் நூலகத்திற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாநகரில் கலைஞர் நூலகம் தடபுடலாகத் தயாராகிவருகிறது. வரும் ஜூன் மாதம் அதற்கான திறப்பு விழாவை நடத்த அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் சென்னையில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முன்மாதிரியாக வைத்து தற்போது மதுரை நூலகத்தை உருவாக்கிவருகிறார்கள்.

 கலைஞர் நூலகத்தின் வசதிகள்:

கலைஞர் நூலகத்தின் வசதிகள்:

மதுரை புது நத்தம் சாலையில், கட்டப்பட்டுவரும் இந்நூலகம் அதிநவீன வடிவில் ஆறு மாடி அடுக்கில் அமைந்துள்ளது.

சுமார் 2.73 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாகிவரும் இதற்குக் கடந்த ஆண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஏறக்குறைய மின்னல் வேலத்தில் வேலைகள் முடிக்கப்பட்டு 98% பணி தற்போது நிறைவடைந்துள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் திறக்கப்படும் என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நூலகக் கட்டிடத்திற்காக ரூ 99 கோடி செலவிடப்பட்டுள்ளது. புத்தகங்களுக்கு ரூ 10 கோடி செலவிடப்பட உள்ளது. மேலும் இது தகவல்தொழில்நுட்ப காலம். ஆகவே இந்நூலகத்தில் அமைய உள்ள கணினிகளுக்காக ரூ 5 கோடி செலவிட உள்ளனர்.

அறைகலன்கள் கொள்முதல் செய்வதற்காகக் கூடுதலாக ரூ 16.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ 114 கோடி செலவு செய்துள்ளது தமிழ்நாடு அரசு.

இந்த மதுரை முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூலகம் முழுமையாகக் குளிரூட்டப்படும் பாணியில் கட்டிவருகிறார்கள். ஆகவே எல்லா பகுதிகளும் தரமான தரை விரிப்புகள், இருக்கைகள், உட்புற சுவர்கள் எனப் பார்த்துப் பார்த்துக் கட்டிவருகிறார்கள். பொதுமக்கள் உட்கார்ந்து நிதானமாகப் படிப்பதற்காக 3வது மாடியில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

அங்கே வைஃபை வசதிகளும் செய்து தரப்படுகின்றன. மேலும் இங்கு அமைய உள்ள அரங்கத்தில் சுமார் 506 பேர்வரை அமரக்கூடிய அளவுக்கு மிக விஸ்தாரமாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 6வது மாடியில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிதான புத்தகங்கள் அடங்கிய பிரிவு ஒன்றும் செயல்பட உள்ளது. குழந்தைகளுக்காகத் தயாராகும் அறிவியல் அரங்கில் பல நவீன உபகரணங்கள் அமைக்கப்பட உள்ளன.

மேற்கொண்டு ரூ 28 லட்சம் செலவில் ஒரு சிற்றுண்டிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட கார்களும் 200 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நூலகக் கட்டிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்காகத் தரை தளத்தில் ஒரு பிரத்தியேக பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கழிப்பறைகளும் உள்ளன. பார்வையற்றவர்களுக்காகத் தொட்டு உணரக்கூடிய டைல்ஸ் போடப்பட்டுள்ளன. ஆகவே அவர்களுக்கு இந்த வசதிகள் பயன்படுத்துவதற்கான எளிதாக இருக்கும்.

குழந்தைகளை ஈர்க்கும் வகையில், முதல் தளத்தில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பிரிவில் சுமார் 20,000 புத்தகங்களை அடுக்கி வைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

"நான்கு முதல் பன்னிரெண்டு வயது வரையான குழந்தைகள் இதனை அதிகம் விரும்புவார்கள். டிஜிட்டல் அம்சங்களுடன் கூடிய வண்ணமயமான சுவர்களை அமைத்துள்ளனர். இங்குள்ள கிட்ஸ் தியேட்டர் பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும்" என்றார் இங்கு பணிசெய்துவரும் அதிகாரி ஒருவர்.

 திமுகவும் நூலக கலாச்சாரமும்:

திமுகவும் நூலக கலாச்சாரமும்:

மேலும் இங்கு வரும் பார்வையாளர்கள் தமிழ் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும்விதமாக ஒரு கலைக்கூடம் 3,000 சதுர அடி பரப்பளவில் அமைத்துள்ளார்கள். அமைதியாக அமர்ந்து தங்களின் சொந்த புத்தகங்களைப் படிக்க விரும்பும் வாசகர்களுக்காக இரண்டு தளங்களில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவைப் போற்றும்விதமாக, நூலக வளாகத்தில் அவரது உருவச் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. 5,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடங்கிய தனிப் பிரிவில் அவரது உருவப்படம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.

இந்த நூலகத்தில் மொத்தம் 4.5 லட்சம் புத்தகங்களை அடுக்கி வைக்கும் அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 1.4 லட்சம் புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டு, அதற்காகக் கொள்முதல் நடந்துள்ளது என்கிறார் மற்றொரு அதிகாரி. முன்னணி சர்வதேச மற்றும் தேசிய பல்கலைக்கழகங்களின் பருவ இதழ்கள், பத்திரிகைகள், வெளியீடுகள் அனைத்தையும் இங்கே பார்க்கலாம் என்கிறார் அவர்.

இந்தளவுக்கு ஒரு பிரம்மாண்டமான நூலகம் தமிழகத்தில் உருவாவது முதன்முறை அல்ல. திமுக என்றாலே உடனடியாக நினைவுக்கு வருபவை 'படிப்பகங்கள்' தான். அந்தளவுக்கு அறிவையும் கற்றலையும் கவனப்படுத்திய இயக்கம் தமிழ்நாட்டில் வேறில்லை.

ஆகவே நூலகத்திற்கும் திமுகவிற்குமான உறவுநிலை குறித்து ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர். சீனிவாசனிடம் பேசினோம், "எனக்கு முந்தையை தலைமுறைகளிடம் இது தொடர்பாக நான் அதிகம் பேசி இருக்கிறேன். அவர்கள் பல தகவல்களைச் சொல்லி இருக்கிறார்கள்.

அதாவது திமுக இயக்கத்தை வளர்ப்பதற்குப் பிரதானமாக சில விஷயங்களை அவர்கள் நம்பி இருக்கிறார்கள். உலக அளவில் உள்ள நடக்கும் அரசியல் மாற்றங்களை உள்ளூர் மேடைகளில் பேசுவது. அப்படி உலக அளவில் நடக்கும் அரசியல் மாற்றங்களை உடனுக்குடன் எடுத்துப்பேச வேண்டும் என்றால், அதற்கான தகவல்கள் முக்கியம். அப்படி தகவல்களைப் பெறும் இடமாகப் பத்திரிகைகள்தான் இருந்தன. அடுத்ததாகப் புத்தகங்கள். அவை நூலகங்களில்தான் இருந்தன.

ஒவ்வொரு ஊரிலும் கட்சி சார்ந்த படிப்பகங்களை உருவாக்குவதே அண்ணாவின் முதல் நோக்கமாக இருந்துள்ளது. அதைச் செய்தும் உள்ளனர். ஆனால், இன்றைக்கு அந்தக் கட்சி சார்ந்த படிப்பகங்கள் அரிதாகிவிட்டன அது வேறு. ஒவ்வொரு ஊரிலிருந்தும் கட்சிக்காகப் பத்திரிகைகளை, பருவ இதழ்களை நடத்துவது.

அதன் மூலம் இயக்க கொள்கைகளை மக்களிடம் கொண்டுசேர்ப்பது. அப்படித்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது ஊரிலிருந்து முரசொலியைத் தொடங்கி நடத்துகிறார். இப்படிப் பல தலைவர்கள் பத்திரிகை நடத்தினார்கள். திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசே இப்படி நடத்தப்பட்ட பத்திரிகைகள் 450க்கும் மேலாக இருக்கும் என ஒரு பட்டியலைத் தந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் புத்தகங்களை மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்று தெருத் தெருவாக வெறுமனே காட்சிப் படுத்துவதை மட்டுமேகூட செய்திருக்கிறார்கள். இவை எல்லாம் படிப்பு சார்ந்தவை. அதாவது கல்வி படிப்பைத்தாண்டிய ஒரு அறிவை உருவாக்கப் பல முயற்சிகளைச் செய்துள்ளார்கள்.

 வாளின் முனையைவிடப் பேனா முனை வலியது:

வாளின் முனையைவிடப் பேனா முனை வலியது:

அதன் அடையாளமாகத்தான் இன்றுவரை திமுக நூலகங்களைத் தனது இயக்கப் பணியில் ஒன்றாக எடுத்துச் செய்துவருகிறது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நூலகம் என்று அண்ணா கண்ட கனவைத்தான் மு. கருணாநிதி, நிறைவேற்றினார்.

அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட போது அந்த அறிவியக்கத்தின் தலைவரான அண்ணாவின் அடையாளமாகச் சிங்கப்பூரில் உள்ளதைப்போன்ற மிகப் பிரம்மாண்டமான நூலகத்தை உருவாக்கினார். இன்றே அதேபணியை முதல்வர் ஸ்டாலின் செய்கிறார்" என்கிறார்

எழுத்தாளர் ந.முருகேச பாண்டியன், "இன்றைக்குப் போல் அல்ல; அன்றைக்குப் பத்திரிகையைப் பணம் போட்டு வாங்கவே தயங்குவார்கள். அது ஆடம்பரமான செலவு என நினைப்பார்கள். ஊர்களில் செய்தித்தாள் வாங்குகின்ற வீடு எனக் கணக்குப் போட்டால் இரண்டு வீடுகள் தேராது. டீக்கடைகள், முடிதிருத்தகங்கள் போன்ற இடங்களில்தான் பத்திரிகைகள் இலவசமாகக் கிடைக்கும். அங்குப் போய்தான் பத்திரிகை படிப்பார்கள். இந்தக் கடைகளை நடத்துகின்றவர்கள் பெரும்பாலும் திமுக ஆதரவாளர்களாகவே இருந்தார்கள்.

இவை இல்லாமல் திமுக ஆட்களே வாசக சாலை நடத்துவார்கள். தாளமுத்து பெயரில் பல வாசகசாலைகளை நான் பார்த்திருக்கிறேன். மொழிப்போரில் தீக்குளித்து இறந்த சின்னசாமி பெயரில் படிப்பகம் இருந்தது.

இப்படி கிராமங்களில் கேட்பாரற்று கிடக்கும் பொட்டல் காடுகளில் கட்டாயம் ஒரு படிப்பகத்தை திமுகவினர் நடத்தினார்கள். இன்றைக்கு நிலம் என்பது பணம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது.

ஆனால், அன்றைக்கு அப்படி இல்லை. அரசு பொதுநிலங்களில் நூலகத்தை உருவாக்கிவிடுவார்கள். அவர் பேசும் போதே, 'வாளின் முனையைவிடப் பேனா முனை கூர்மையானது' என்பார்கள். அதன் அர்த்தமே படிப்பை முன்னிறுத்துவதுதானே?

 2600 ஆண்டுகள் முன்பே படித்தவர்கள்:

2600 ஆண்டுகள் முன்பே படித்தவர்கள்:

அப்புறம் ரூசோ, அரிஸ்டாட்டில், காரல்மாக்ஸ், கரிபால்டி, போன்ற தலைவர்களைப் பற்றி பக்கம் பக்கமாக திமுகவினர் நூல்களை அந்தக் காலத்திலேயே எழுதி இருக்கிறார்கள். பிரெஞ்சுப் புரட்சி பற்றி வீதிகளில் பேசுவார்கள்.

இதற்கு எல்லாம் அடிநாதமாக நூலகம் என்ற செயல்பாடு இருந்துள்ளது. அதன் தொடர்ச்சிதான் இன்றைக்கும் அந்தக் கட்சி நூலகங்களைத் தொடர்ந்து ஒரு இயக்கமாகச் செயல்படுத்தி வருகிறது" என்கிறார்.

"இந்த அறிவிப்பு வந்தபோது பெரிதும் மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு. ஏனென்றால் கடந்த காலங்களில் எல்லாம் வளர்ச்சி என்பது பெருநகரங்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தன. ஆனால், இவ்வளவு பெரிய கட்டுமானம் எனது மதுரைக்குக் கிடைத்துள்ளது என்பதே சிறப்புதான்.

மதுரை என்பது 2600 ஆண்டுகளாக அறிவுச் செயல்பாடுகள் நடைபெற்ற நகரம். அதன் அடையாளம்தான் கீழடி. இன்றைக்கு கீழடியில் தமிழ் எழுத்துகளில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அப்படி என்றால் என்ன அர்த்தம்? 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் இங்கே வாழ்ந்துள்ளார்கள். அதன் அடையாளம் தானே இந்தப் பானை ஓட்டு எழுத்துகள்.

இத்தனை ஆண்டுகள் பழமையான மதுரையில், சங்க இலக்கியம் வளர்ந்த மதுரையில் இந்த நூலகம் உருவாகி உள்ளது. இதன்மூலம் மதுரையையும் மதுரை சுற்றுலாவையும் வளர்க்க முடியும் என்றே நம்புகிறேன். இந்த நூலகம் அமைக்க இதைவிடச் சிறப்பான நகரம் வேறு இல்லை" என்கிறார் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+