ஓ இதுதான் மேட்டரா! சென்னை- பெங்களூர் 2.30 மணி நேரத்தில்! எக்ஸ்பிரஸ் சாலையில் மட்டும் எப்படி சாத்தியம்
சென்னை: சென்னை- பெங்களூர் இடையேயான எக்ஸ்பிரஸ் சாலை கட்டுமான பணிகள் படுவேகமாக நடக்கும் நிலையில், இதில் இருக்கும் சிறப்புகள் குறித்து நாம் பார்க்கலாம்.
தென்னிந்தியாவின் இரு முக்கிய நகரங்கள் என்றால் அது சென்னையும் பெங்களூரும் தான். இதனால் இரு நகரங்களுக்கும் இடையே பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. தற்போதைய சூழல் இரு நகரங்களுக்கும் இடையே விமானம் மற்றும் ரயில் சேவை இருக்கிறது.

அதேபோல சாலை மார்க்கமாகச் செல்லவும் இரண்டு வழி இருக்கிறது. ஒன்று 335-கிமீ நீளமுள்ள பழைய மெட்ராஸ் நெடுஞ்சாலை. மற்றொரு வழி 372 கிமீ நீளத்தில் எலக்ட்ரானிக் சிட்டி, ஓசூர், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் வழியாகச் சென்ன செல்லும்.
எக்ஸ்பிரஸ் சாலை: இந்த இரு ரூட்களில் சென்றால் 5 முதல் 6 மணி நேரம் வரை ஆகும். இந்த பயண நேரத்தைக் குறைக்கும் வகையில் சென்னை மற்றும் பெங்களூர் இடையே புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது. 1990களிலேயே அப்போது ஒரு பட்ஜெட் உரையில் சென்னை- பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை குறித்த அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. இருப்பினும், அப்போது அதைச் செயல்படுத்த முடியவில்லை. பல ஆண்டுகள் கழித்து 2018இல் தான் இந்தத் திட்டம் இறுதியானது.
அதன் பிறகு நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2022ஆம் ஆண்டு இந்த சாலைப் பணிகளுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார். அதன் பிறகு பணிகள் தொடங்கிய நிலையில், மளமளவென சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை அடுத்தாண்டு மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் எனத் தெரிகிறது. இது பயன்பாட்டிற்கு வந்தால் பயண நேரம் என்பது 2.5 மணி நேரமாகக் குறைந்துவிடும்.
ரூ.1150 கோடி: இதற்கிடையே இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ரூ.1160 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த சாலையில் கர்நாடக மாநிலத்தில் அமையும் பெங்களூரு-மாலூர் பகுதி சில தனிச்சிறப்புகளைக் கொண்டிருக்கும். பாரத்மாலா திட்டத்தின் கீழ் இது கட்டப்பட்டு வரும் நிலையில், இதன் சாலைகள் தனித்துவமானதாக இருக்கும். அதிக எடையைத் தாங்கவும் நீண்ட காலம் உழைக்கும் வகையிலும் வலிமையாக இருக்க 3 லேயர்களில் இந்த சாலை அமைக்கப்படுகிறது.
பொதுவாக நெடுஞ்சாலைக்கும் எக்ஸ்பிரஸ் சாலைக்கும் என்ன வித்தியாசம் என்பது பலருக்கும் தெரியாது. எங்கு இருந்ததெல்லாம் அந்த சாலையை அணுக முடியும் என்பதே இரண்டு டைப் சாலைகளுக்கும் இடையே இருக்கும் முக்கிய வேறுபாடாகும். நெடுஞ்சாலைகளில் பொதுவாக உள்ளே வரவும் வெளியேறவும் பல இடங்களில் பாதை இருக்கும். இது மக்களுக்கு உதவியாக இருந்தாலும் இதைச் சாலையை நெரிசல் மிக்கதாக மாற்றுகிறது.

என்ன வித்தியாசம்: ஆனால், எக்ஸ்பிரஸ் சாலைகளில் அப்படி இருக்காது. உள்ளே வரவும் சரி வெளியேறவும் சரி ஓரிரு இடங்கள் மட்டுமே இருக்கும். இதனால் விபத்துகளைக் குறைக்க முடியும். மேலும், டிராபிக்கும் ஏற்படாது. இதனால் நாம் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகச் செல்ல முடியும். இதன் காரணமாகவே வெறும் 2.15 முதல் 2.30 மணி நேரத்தில் இந்த சாலையில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்ல முடிகிறது.
எக்ஸ்பிரஸ் சாலை 7 என்று அழைக்கப்படும் இது தென்னிந்தியாவின் முதல் எக்ஸ்பிரஸ் சாலையாக இருக்கும். 262 கிமீ நீளமுள்ள இந்த சாலை பெங்களூர் ஹோஸ்கோட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை இருக்கும். இதில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து மதுரவாயல் வரையிலான 22.6-கிமீ சாலை உயர்த்தப்பட்டு இருக்கும். இந்த சாலை மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இரு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரத்தை 6 மணி நேரத்தில் இருந்து வெறும் 2.15 மணி நேரமாகக் குறைக்கும். இது தற்போதுள்ள நெடுஞ்சாலையை விட 50 கிமீ குறைவாகும்..












Click it and Unblock the Notifications