சென்னையில் திடீரென பறக்கும் ட்ரோன்கள்.. கீழே இருந்து வரும் ஸ்ப்ரே புகை வேறு .. என்ன மேட்டர் தெரியுமா
சென்னை: தலைநகர் சென்னையில் அடையாறு, கூவம் பகுதிகளில் திடீரென ட்ரோன்கள் பறக்கத் தொடங்கியுள்ளது. இது அங்கிருப்பவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணத்தை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதமே நிறைவடைந்துவிட்டது. இப்போது மழை எங்கும் இல்லையென்றாலும் கூட சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது.
மிதமான ஒரு வெப்பமே நிலவி வரும் நிலையில், இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் கொசு பிரச்சினை அதிகரித்துள்ளது. இதனால் நகரில் மர்மக் காய்ச்சல் பாதிப்பும் அதிகமாகவே உள்ளது.

காய்ச்சல்
தினசரி ப்ளு காய்ச்சல் காரணமாகச் சென்னையில் பலரும் மருத்துவமனைகளை நோக்கிப் படையெடுக்கிறார்கள்.. இதுபோல மர்மக் காய்ச்சல் அதிகரிக்கக் கொசுக்களும் ஒரு முக்கிய காரணமாகும். சென்னைவாசிகளும் கொசு பிரச்சினை குறித்துத் தொடர்ந்து புகாரளித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் என நீர் நிலை அருகே உள்ள பகுதிகளில் கொசுத் தொல்லை தாங்கவே முடியாத அளவுக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேயர் பிரியா
இதன் காரணமாகவே நகரில் காய்ச்சல் பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது. கொசுக்களை ஒழிக்கச் சென்னை மாநகராட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்தச் சூழலில், சென்னை ரிப்பன் கட்டிடத்தில் கொசு ஒழிப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் துணை மேயர் மகேஸ்குமார், ஆணையர் ககன்தீப்சிங் பேடி உட்பட ஏராளமான அதிகாரிகளும் பங்கேற்றனர்.

புகைப்பரப்பும் இயந்திரங்கள்
நகரில் 229 புகைப்பரப்பும் இயந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள், கையால் இயக்கப்படும் 412 கொசுக் கொல்லி மருந்து தெளிக்கும் இயந்திரங்கள், 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொடு ஒழிக்கும் பணிகளில் பயன்படுத்தப்படுகிறது.. அப்போது கொசு ஒழிப்பு பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டார்.. உடனடியாக மருந்து தெளிக்கும் பணிகளை 2 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

அடுத்த 15 நாட்கள்
மேலும், மழைநீர் வடிகால்களில் தேங்கியுள்ள நீரை உடனடியாக அகற்றவும் மழைநீர் வடிகால்களில் கொசு ஒழிப்பு புகை, கொசுப்புழு மருந்து தெளித்தல் பணிகளை வேகப்படுத்தவும் அவர் அறிவுறுத்தினார்.. தினசரி காலை மற்றும் மாலை 5 முதல் 7 மணி வரை கொசு ஒழிப்பு பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 15 நாட்கள் கொசு ஒழிப்பு பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ட்ரோன்கள்
அதேபோல நீர்நிலைகளில் ட்ரோன்கள் மூலம் கொசு மருந்தைத் தெளிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது நீர்நிலைகளில் மனிதர்கள் செல்ல சிரமமாக இருக்கும் இடங்களில் ட்ரோன்கள் மூலம் கொசு மருந்தைத் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் குறைவான நேரத்தில் அதிகப்படியான இடங்களில் மருந்தைத் தெளிக்க முடியும். மேலும், கொசு முட்டைகள் அதிகம் உள்ள பகுதிகளில் முதலில் கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது.

படகுகள்
படகுகள் மூலமும் கொசு மருந்தைத் தெளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாளை முதல் படகுகள் மூலம் மருந்து தெளிக்கும் பணிகள் தொடங்கவுள்ளன. இப்படி கொசு ஒழிப்பு நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. அடுத்த 15 நாட்களில் நகரில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளது. இது ஒரு பக்கம் நடந்தாலும் கூட பொதுமக்களும் தங்களின் வீடு, மொட்டை மாடிகள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications