விமானப் படை ஹெலிகாப்டர் விபத்து: வெலிங்டனில் ராணுவ அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
சென்னை: குன்னூர் அருகே இந்திய விமானப்படையின் விமானம் நொறுங்கி விழுந்து, ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட, 13 பேர் பலியான சம்பவத்தில் உரிய மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
Recommended Video

இதன் ஒரு பகுதியாக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று மதியம் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இதன்பிறகு மருத்துவர் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் நீலகிரி மாவட்ட கலெக்டர் அமரித்தை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந்தார். எந்த மாதிரி உதவிகள் தேவைப்படும் என்பதை கேட்டறிந்து உரிய ஒத்துழைப்புகளை தமிழக அரசு சார்பில் உடனடியாக எடுக்க வேண்டும் மற்றும் அனைத்து வகை உதவிகளையும் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
மீட்பு பணிகள் மற்றும் விபத்து தொடர்பாக, நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், மாலை 6 மணிக்கு விமானத்தில், கோவை விரைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக அவர் குன்னுர் சென்றார். விபத்து நடந்த பகுதிகளில் மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு சென்றார். விமானப்படை கேப்டன் வருண்சிங் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும், விபத்து தொடர்பாக ராணுவ அதிகாரிகளிடம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக, ராணுவ மீட்பு குழு அந்த பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டில் எடுத்தது. தொடர்ந்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டபோதிலும், பிபின் ராவத் உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண், ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: குன்னூர் அருகே ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் 13 பேருடன் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நான் சம்பவ இடத்திற்கு விரைகிறேன். மீட்புப் பணிகளில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications