சீட்டை மாத்துவோம்.. ஆட்டத்தை கலைச்சிட்டு ஆடுவோம்.. ஸ்டாலினிடம் ரிப்போர்ட்.. அலறும் கூட்டணிகள்
சென்னை: தீபாவளி பண்டிகை முடிந்ததும் அடுத்த வாரத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளிடத்தில் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதிமுக - பாஜக மோதல் காரணமாக அவர்கள் கூட்டணி முறிந்துள்ளது. 2024 லோக்சபா, 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து தனியாக போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன. கடந்த சில நாட்களாக வரக்கூடிய கருத்து கணிப்பு செய்திகளும் கூட இந்த கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவே வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான பணிகளை திமுக தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு கூட்டணி திமுக;இதில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம்., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கொ.ம.தே.க. உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. இந்த முறை 28-க்கும் குறையாத இடங்களில் திமுக போட்டியிட வேண்டும் என ஸ்டாலின் திட்டமிடுகிறார்.
அதனால் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையை குறைக்கவும், கூட்டணிக் கட்சிகளின் சிட்டிங் தொகுதிகளில் சிலவற்றை மாற்றி அமைக்கவும் ஸ்டாலின் திட்டமிடுவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கூட்டணி கட்சிகளோ, இந்த ஓரிரு சீட்டுகள் அதிகமாக பெற வேண்டும் என்றும், எந்த சூழலிலும் சிட்டிங் தொகுதிகளை விட்டுவிடக்கூடாது என்றும் கங்கணம் கட்டுக்கொண்டிருக்கின்றன.
சிட்டிங் தொகுதி: இதை மையப்படுத்தித்தான் கடந்த மாதத்தில் தங்களின் விருப்பத்தை ஸ்டாலினிடம் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். அப்போது, நீங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளில் உங்கள் கட்சியின் பலம் என்ன? என்பது குறித்த ஒரு ரிப்போர்ட்டை கொடுங்கள் என்று ஸ்டாலின் கேட்டிருக்கிறார். இது குறித்து கூட்டணி கட்சிகள் ரிப்போர்ட் தந்ததாக தெரியவில்லை.
அதேசமயம், கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகளில் அந்த கட்சிகளின் பலம் என்னவென்பதை திமுக தரப்பில் ஒரு ரிப்போர்ட் தயாரிக்கப்பட்டிருக்கிறதாம். அந்த வகையில், கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் மீண்டும் சீட் ஷேரிங் பற்றி பேசும் போது இந்த ரிப்போர்ட்டின் அடிப்படையிலேயே தலைவர் ஸ்டாலின் பேசுவார். ஏனெனில், கூட்டணி கட்சிகள் விரும்பும் தொகுதிகளில் அவர்களின் பலம் குறித்து பல கேள்விகள் ரிப்போர்ட்டில் இருக்கிறதாம்.
சிட்டிங் எம்எல்ஏக்கள்; மேலும் சிட்டிங் தொகுதிகளில் சம்மந்தப்பட்ட எம்.பி.க்களுக்கு எதிராக அதிருப்திகள் அதிகம் இருப்பதாகவும் அந்த ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டுள்ளதாம். இந்த பின்னணியில் தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தவிர, கூட்டணி கட்சிகளின் சிட்டிங் தொகுதிகளில் இந்த முறை திமுக போட்டியிட வேண்டும் என அந்த தொகுதிகள் அடங்கிய மா.செ.க்கள், ஒ.செ.க்கள் ஆகியோர் ஒத்தைக்காலில் நின்று திமுக தலைமையிடம் அடம் பிடிக்கின்றன.
இவர்களின் விருப்பத்துக்கு மாறாக, கூட்டணி கட்சிகளுக்கே சிட்டிங் தொகுதி ஒதுக்கப்பட்டால் திமுகவினர் கூட்டணி கட்சிகளுக்காக சரிவர தேர்தல் பணியாற்றமாட்டார்கள் என்றும் மா.செ.க்கள் வரிந்து கட்டுகிறார்கள். இந்த தகவலும் அறிவாலயத்துக்கு போயிருக்கிறது. இவ்வளவு விசயங்களையும் வைத்துத்தான் கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று சொல்கிறது அறிவாலய வட்டாரம்.












Click it and Unblock the Notifications