"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு"! பிடிவாதம் கூடாது! EPS-யிடம் சொல்லுங்கள்! வேலுமணியிடம் அமித்ஷா மெசேஜ்
சென்னை: திருச்சி ஹோட்டலில் தங்கியிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்த போது அவர் சொன்னது என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அதிமுக கூட்டணியும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என திமுக கூட்டணியும் போராடி வருகிறது.

இந்த முறை எப்படியாவது அதிக அளவிலான எம்எல்ஏக்களை சட்டசபைக்கு அனுப்ப பாஜக திட்டமிட்டுள்ளது. அதே வேளையில் அதிமுக ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது.
இதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக எதிர்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்து வரும் நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் சில வியூகங்களை வகுத்து வருகிறார். அந்த வகையில் அவர் இரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
அப்போது புதுக்கோட்டை நடந்த ஒரு நிகழ்ச்சியில் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். மேலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை அமித்ஷா சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.
இரு நாட்கள் அமித்ஷாவுடன் வேலுமணி ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் விஷயம்- வரும் தேர்தலில் அதிமுக தோற்கக் கூடாது. இல்லாவிட்டால் 12 தேர்தல்களில் தோல்வியடைந்த நிலை வந்துவிடும். எனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி இணக்கமாக இருக்க வேண்டும்.
அதாவது ஒருங்கிணைப்பு என்பதை விட தற்போது ஒற்றுமைதான் முக்கியம் என அமித்ஷா வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தன் பிடியில் உறுதியாக இருப்பதாக வேலுமணி தெரிவித்தாராம். "இந்த ஒற்றுமை ஏற்பட்டால்தான் நாம் திமுகவை தோற்கடிக்க முடியும்" என அமித்ஷா தெரிவித்துவிட்டாராம்.
இரண்டாவது விஷயம்- அன்புமணியையும் ராமதாஸையும் ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த பாமகவை கூட்டணிக்குள் இழுக்க வேண்டும் என்ற அசைமென்ட்டும் வேலுமணிக்கு தரப்பட்டதாம். இது எந்தளவுக்கு சாத்தியம் என தனக்கு தெரியவில்லை, எனினும் தன்னால் முடிந்தவரை செய்வதாக வேலுமணி உறுதி அளித்தாராம்.
மூன்றாவது விஷயம்- தேமுதிகவையும் என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என அமிஷ்தா தெரிவித்துள்ளாராம். அதற்கு எஸ்பி வேலுமணி, " தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுக்கள் நடத்தப்பட்டன. ஆனால் அவர்கள் 20 தொகுதிகளை கேட்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி 8 முதல் 10 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்படும்" என சொல்லிவிட்டதால் தேமுதிக கூட்டணிக்கு வருமா இல்லையா என்பது தெரியவில்லை.
தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளை கூட்டணிக்குள் இழுப்பதை காட்டிலும் ஓபிஎஸ், டிடிவி தினகரனின் தென் மண்டல வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அதிமுக கூட்டணிக்கு கிடைக்க வேண்டும் என அமித்ஷா தெரிவித்துள்ளாராம். இதை எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லுமாறு அறிவுறுத்தியுள்ளாராம்.












Click it and Unblock the Notifications