பண்ருட்டியாருடன் அடுத்தடுத்த சந்திப்பு.. அப்படி ஓபிஎஸ் என்னதான் பேசினார்? இபிஎஸ்ஸை எதிர்க்க உதவுமா?
சென்னை: எல்லாவற்றையும் பொறுத்திருந்து பாருங்கள் என பண்ருட்டி ராமசந்திரனை சந்தித்த பின்னர் ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான பிரச்சினை நடந்து வரும் நிலையில் இரு தலைமைகளும் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் புதிய பதவிகளை கொடுப்பதுமாக இருக்கிறார்கள். இதனாலேயே ஓபிஎஸ் தரும் புதிய பதவிகளை ஏற்பதா வேண்டாமா என்ற குழப்பமும் அவர்களிடையே நீடித்து வருகிறது.
மேலும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஓபிஎஸ் கட்சியின் மூத்த முன்னோடிகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமசந்திரனை நேரில் சந்தித்து ஓபிஎஸ் பேசியிருந்தார்.

அதிமுகவின் அரசியல் ஆலோசகர்
இதையடுத்து நேற்று முன் தினம் அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமசந்திரனை நியமித்தார் ஓபிஎஸ். அவருடன் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். இதையடுத்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக அவரை கட்சியிலிருந்தே நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த சூழலில் சென்னை அசோக் நகரில் உள்ள பண்ருட்டியார் வீட்டில் ஓபிஎஸ் நேரில் போய் சந்தித்தார்.

ஓபிஎஸ்
இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறுகையில் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டியாரை நேரில் சந்தித்து அவரிடம் நல்ல ஆலோசனைகளை பெறுவதற்காக வந்திருந்தோம். எம்ஜிஆர். ஜெயலலிதா காலத்திலிருந்து தற்போது வரை எங்களுக்கு நல்ல ஆலோசனைகளையே வழங்கி வருகிறார்.

தமிழக மக்கள்
மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் தமிழக மக்களிடம் நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லி வருகிறார். எம்ஜிஆர் இந்தக் கட்சியை எதற்காக தோற்றுவித்தார். ஜெயலலிதா இதை எதற்காக கட்டி காத்தார், உள்ளிட்டவைகளை பண்ருட்டியார் சுவாரஸ்யமாக சொல்லும் போது அதை பொதுமக்கள் கேட்கிறார்கள்.

பொறுத்திருந்து பாருங்கள்
அவரது பேச்சுக்கு தனித்துவம் இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள், கடந்த காலங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் இருந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய ஆசிகளையும் பெறுவேன் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இதையடுத்து பண்ருட்டி ராமசந்திரனை எடப்பாடி பழனிசாமி நீக்கிவிட்டாரே என்பது குறித்து ஓபிஎஸ்ஸிடம் கேட்ட போது அதை எடப்பாடி பழனிசாமியிடம்தான் கேட்க வேண்டும் என கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு புறப்பட்டார் ஓபிஎஸ்.

எப்படி சாத்தியம்
மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்பதாக ஓபிஎஸ் சொல்கிறார். ஆனால் அவரது நியமனங்களே சில மணி நேரங்களில் தவிடுபொடியாகி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியை அவரால் எப்படி எதிர்கொள்ள முடியும் என்ற கேள்வி எழுகிறது. 95 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடிக்கு இருக்கிறது. அது போல் நீதிமன்ற தீர்ப்பும் அவருக்கு சாதகமாகவே இருக்கிறது. இந்த சூழலில் ஓபிஎஸ் எப்படி எடப்பாடி பழனிசாமியை எதிர்கொள்வார், கட்சியை கையில் எடுத்து கொள்வார் என்பது புரியாத புதிராக உள்ளது.












Click it and Unblock the Notifications