அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்!
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் உருவான உட்கட்சிப் பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்புகளுக்கு இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னையில் உள்ள அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவரின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படும் நிலையில் கட்சி பிளவுபட்டபோது யார் எந்த பதவியில் இருந்தார்களோ அதை திருப்பி அளிக்க நிபந்தனை விதிகப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்த அதிமுக, வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. மறுபுறம், தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது.
அதிமுக பிளவு
தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் தவெக ஆட்சியை அமைத்தது. இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் அதிருப்தி அதிகரித்தது. தொடர்ந்து தோல்வி, ஒருதலைப்பட்ச முடிவுகள், நிர்வாகிகள் நீக்கம் போன்ற காரணங்களால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்படத் தொடங்கினர். இதன் உச்சமாக, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக கொறடா உத்தரவை மீறி 25 எம்.எல்.ஏக்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் கட்சிக்குள் மோதல் வெளிப்படையான அதிகாரப் போராட்டமாக மாறியது.
எஸ் பி வேலுமணி
அந்த நேரத்தில், வேலுமணி தரப்புக்கு தவெக.அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சித் தாவல் தடைச் சட்டம் உள்ளிட்ட சட்ட சிக்கல்கள் காரணமாக அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்படவில்லை . இதனால் வேலுமணி அணிக்குள் ஏமாற்றம் அதிகரித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
எடப்பாடி பழனிசாமி
இதற்கிடையில், வேலுமணி அணியில் இருந்த சில எம்.எல்.ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ சுகுமார், சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏ திலீபன் ஜெய்சங்கரன், அந்தியூர் தொகுதி எம்.எல்.ஏ ஹரிபாஸ்கர் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், வேலுமணி அணியின் பலம் தற்போது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் தான், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்யும் நோக்கில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை நகரில் உள்ள அ.தி.மு.க. முக்கிய நிர்வாகி ஒருவரின் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில், வேலுமணி தரப்பு சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கட்சி பிளவுபட்டபோது யார் எந்த பொறுப்பில் இருந்தார்களோ அந்த பதவிகளை மீண்டும் அவர்களுக்கே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
வேலுமணி வைத்த டிமாண்ட்
மேலும், அ.தி.மு.க.வில் ஒரு "வழிகாட்டு குழு" அமைக்க வேண்டும் என்றும், அந்த குழு எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில்தான் பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும் என்றும் வேலுமணி தரப்பு வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வழிகாட்டு குழுவில் இருதரப்பினருக்கும் சம அளவில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றும், நீக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மீண்டும் அதே பொறுப்புகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விஜய்க்கு கொண்டாட்டம்
அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பும் இந்த கோரிக்கைகளை உடனடியாக ஏற்க தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டவர்களை முழுமையாக மீண்டும் ஏற்றுக்கொள்வதில் சில மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுகவில் சமாதானம் ஏற்படுமா அல்லது பிளவு மேலும் தீவிரமடையுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அதே நேரத்தில் அதிமுக பிளவு பட பட அது விஜய்க்கு தான் மேலும் சாதகமாக அமையும் என்பதால், பஞ்சாயத்தை விரைவில் முடிக்க வேண்டுமென சில சீனியர்கள் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications