ஆட்சிக்கு வந்த 15வது நாளிலேயே.. விஜய்யின் ஆபரேஷன் விசில்! பாஜக ஸ்டைல்! தூக்கப்பட்ட அதிமுக MLAக்கள்
டெல்லி: டெல்லியில் பாஜக எப்படிப் பல மாநிலங்களில் 'ஆபரேஷன் தாமரை' (Operation Lotus) மூலம் ஆட்சிகளைக் கவிழ்த்ததோ அல்லது தனது மெஜாரிட்டியைத் தக்கவைத்துக் கொண்டதோ, அதே பாணியிலான ஒரு பக்கா 'பவர் பாலிடிக்ஸ்' ஆட்டத்தைத் தமிழகத்தில் கையில் எடுத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.
மே 10 அன்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு, ஆட்சிக்கு வந்த வெறும் 15 நாட்களுக்குள் மூன்று அதிமுக எம்.எல்.ஏ-க்களைத் தன்பக்கம் இழுத்து கோட்டை வட்டாரத்தையே அதிரவைத்துள்ளது தவெக தலைமை. அரசியல் வட்டாரத்தில் இதற்கு 'ஆபரேஷன் விசில்' (Operation Whistle) என்று பெயரிட்டு விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் "மைனாரிட்டி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்" என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, தவெக இந்த அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. கே. மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), வி. சத்யபாமா (தாராபுரம்), டி. ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகிய மூன்று அதிமுக எம்.எல்.ஏ-க்களும் சபாநாயகரிடம் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாக தவெக-வில் இணைந்துள்ளனர். இது வெறும் டிரெய்லர் தான், இன்னும் பல அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக-வின் 'ஆபரேஷன் விசில்' ரேடாரில் சிக்கவிருக்கிறார்கள் என்கிறது உளவுத்துறைத் தகவல்.
இந்திய அரசியல் வரலாற்றில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடக்கும் எம்.எல்.ஏ-க்கள் இழுபறி என்பது புதிய விஷயமல்ல. ஆனால், அதை ஒரு கார்ப்பரேட் உத்தியாக, மிக நேர்த்தியான திட்டமிடலுடன் மாற்றி அதற்கு 'ஆபரேஷன் தாமரை' என்று பிராண்டிங் செய்தது பாரதிய ஜனதா கட்சி. தற்போது, அதே பாணியை மிகத் துல்லியமாகத் தமிழ்நாட்டின் பிராந்திய அரசியலுக்கு ஏற்ப மறுவடிவமைப்பு செய்து 'ஆபரேஷன் விசில்' மூலம் அரங்கேற்றி வருகிறார் விஜய். இந்த இரு ஆபரேஷன்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள், வித்தியாசங்கள் மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் சதுரங்க ஆட்டம் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
1. ஆபரேஷன்களின் பின்னணி: எதனால் இந்த அவசரம்?
பாஜக-வின் ஆபரேஷன் தாமரை: கர்நாடகா (குமாரசாமி அரசு வீழ்ச்சி), மத்தியப் பிரதேசம் (கமல்நாத் அரசு வீழ்ச்சி), மகாராஷ்டிரா (உத்தவ் தாக்கரே அரசு வீழ்ச்சி) மற்றும் கோவா போன்ற மாநிலங்களில், தேர்தல் முடிவுகளில் பாஜக நூலிழையில் ஆட்சியை இழந்த போதோ அல்லது எதிர்க்கட்சிகளின் பலவீனத்தைப் பயன்படுத்த நினைத்த போதோ இந்த உத்தி பயன்படுத்தப்பட்டது. எதேச்சதிகார பலத்துடன் ஒரு மாநில ஆட்சியைத் தன்வசப்படுத்துவதே இதன் நோக்கம்.
தவெக-வின் ஆபரேஷன் விசில்: இங்கு சூழல் முற்றிலும் வேறானது. விஜய் 107 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்தாலும், 118 என்ற மேஜிக் நம்பரைத் தொட காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. ஆட்சி அமைந்த 15 நாட்களுக்குள், "கூட்டணிக் கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் முட்டுக் கொடுப்பதை நிறுத்தலாம், தவெக அரசு கவிழும்" என்று மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக எச்சரித்தார். இந்த 'ஆட்சி கவிழ்ப்பு' பயமே விஜய்யை ஆக்ரோஷமான தற்காப்பு அரசியலுக்குத் தள்ளியது. தவெக-வைக் காப்பாற்றிக் கொள்ளவே 'ஆபரேஷன் விசில்' அவசரமாக ஏவப்பட்டுள்ளது.
2. வியூகம்: கட்சித் தாவல் தடைச் சட்டத்தை உடைப்பது எப்படி?
இரு ஆபரேஷன்களும் கையாண்ட மிக முக்கியமான சட்டப் புள்ளி.. எம்பி அல்லது எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படாமல் எப்படிப் பாதுகாப்பது என்பதுதான்.
பாஜக-வின் டெக்னிக்: ஆபரேஷன் தாமரையின் கீழ், மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்கள் மொத்தமாகத் திரட்டப்பட்டு, சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு, சபாநாயகருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்படுவார்கள். அல்லது கட்சியின் 3இல் 2 பங்கு எம்.எல்.ஏ-க்களை உடைத்து ஒட்டுமொத்தக் குழுவையும் பாஜக-வோடு இணைப்பார்கள் (உதாரணம்: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே டீம்).
விஜய்யின் மாஸ்டர் பிளான்: தவெக இங்கு மிக சாதுரியமாக 'தனிநபர் ராஜினாமா' முறையைக் கையாண்டுள்ளது. அதிமுக-வின் கொறடா உத்தரவை (Whip) மீறி கடந்த வாரம் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்த சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி முகாமில் இருந்த 25 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களில் மூன்று பேரை மட்டும் முதற்கட்டமாகத் தேர்ந்தெடுத்தது தவெக. அவர்கள் கட்சித் தாவல் சட்டத்தில் சிக்காமல் இருக்க, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனைச் சந்தித்து நேரடியாகத் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.
பதவி போன அடுத்த பத்தாவது நிமிடம், தலைமைச் செயலகத்தின் முதல் தளத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்து தவெக-வில் இணைந்தனர். சட்டம் தங்களை ஒன்றும் செய்ய முடியாத அளவுக்கு இந்த ஆபரேஷன் மிக நேர்த்தியாகச் செய்யப்பட்டுள்ளது.
3. இறுதி இலக்கு: நோக்கம் ஒன்றா, வேறா?
மேலோட்டமாகப் பார்த்தால் இரு ஆபரேஷன்களும் எம்.எல்.ஏ-க்களை இழுப்பது போலத் தெரிந்தாலும், இவற்றின் இறுதி இலக்கு முற்றிலும் மாறுபட்டது.
ஆபரேஷன் தாமரை (ஆட்சி மாற்றம்): மாற்றுக்கட்சியின் ஆட்சியை வீழ்த்தி, அங்கு பாஜக-வின் ஆட்சியை அரியணையில் அமர்த்துவதே இதன் ஒரே குறிக்கோள்.
ஆபரேஷன் விசில் (சுயராஜ்ய மெஜாரிட்டி): முதல் இலக்கு அதிமுகவை காலி செய்வது. அதிமுகவை இல்லாமல் ஆக்குவது. இன்னொரு பக்கம் தற்போதைய தவெக ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் காங்கிரஸ் (5 இடங்கள்) மற்றும் இடதுசாரிகளின் பிடியில் இருந்து விடுபடுவதுதான் விஜய்யின் பிரதான இலக்கு. இப்போது 3 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இன்னும் சில நாட்களில் இந்த எண்ணிக்கை 10 முதல் 12 ஆக உயரலாம். அப்படி உயரும் போது, தமிழ்நாட்டில் 12 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் (மறுதேர்தல்) வரும். முதலமைச்சர் விஜய் ஏற்கனவே காலியாக வைத்துள்ள திருச்சி கிழக்கு தொகுதியோடு சேர்த்து, இந்த 12 இடங்களிலும் தவெக தனித்துப் போட்டியிட்டு வென்றுவிட்டால், தவெக-வின் சொந்த பலம் 118-ஐத் தாண்டிவிடும். அதன் பிறகு காங்கிரஸ், விசிக போன்ற கூட்டணிக் கட்சிகளை விஜய் மிக சுலபமாக கழற்றிவிட்டுவிடலாம். 'கூட்டணி தயவில்லா ஆட்சி' என்பதே ஆபரேஷன் விசிலின் இறுதி இலக்கு.
4. நிதி மற்றும் அதிகார பலம்
பாஜக: மத்திய அரசு அதிகாரம், அமலாக்கத்துறை (ED), சிபிஐ (CBI) போன்ற அமைப்புகளின் மறைமுக நெருக்கடி மற்றும் பிரம்மாண்ட கார்ப்பரேட் நிதிப் பின்புலம் ஆகியவை ஆபரேஷன் தாமரையின் தூண்களாக இருந்தன என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
தவெக: புதிதாக ஆட்சிக்கு வந்த கட்சி என்பதால் தவெக-விடம் மத்திய அரசு போன்ற விசாரணை அமைப்புகளின் அதிகாரம் இல்லை. ஆனால், முதலமைச்சர் என்ற மாநில அதிகார பலம், தமிழகத்தின் மிக பலம் வாய்ந்த 'கொங்கு பெல்ட்' மற்றும் வட மாவட்டங்களில் அதிமுக-வுக்குள் இருக்கும் தலைமைத்துவ அதிருப்தி ஆகியவற்றை தவெக மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. அதோடு கடுமையான பொருளாதார பலமும் உள்ளது.
பாஜக-வின் 'ஆபரேஷன் தாமரை' என்பது தேசிய அளவில் பலப்பரீட்சை நடத்திப் பழகிய ஒரு பழுத்த அரசியல் உத்தி. ஆனால், ஆட்சிக்கு வந்த 15 நாட்களிலேயே விஜய் தரப்பு 'ஆபரேஷன் விசில்' மூலம் அதே பாணியை அரங்கேற்றியிருப்பது திராவிட அரசியல் கட்சிகளை மிரள வைத்துள்ளது. "அரசியல் நாகரிகம் பேசுபவர்கள் செய்யும் காரியமா இது?" என்று ஸ்டாலினும், இபிஎஸ்ஸும் கொந்தளிப்பது, விஜய்யின் இந்த வேகம் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் அரசியல் அதிர்ச்சியை உணர்த்துகிறது.
வரவிருக்கும் தொகுதிகளின் மறுதேர்தலில் தவெக இந்த வியூகத்தின்படி தனிப் பெரும்பான்மை பெற்றுவிட்டால், 'ஆபரேஷன் விசில்' தமிழக அரசியல் வரலாற்றின் மிக வெற்றிகரமான பவர் பிளே-யாகக் கருதப்படும். இல்லையெனில், அது தவெக-வின் நம்பகத்தன்மைக்கு விழுந்த முதல் அடியாக மாறும்.
-
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
விஜய்க்கு விஷால் கொடுத்த வித்தியாசமான பரிசு.. கையில் கவனிச்சீங்களா? இது பலருக்கு பாடம் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
அந்த குழந்தையே நீங்க தான் சார்.. தவெக கூட்டணி.. துரை வைகோ கொடுத்த ஹின்ட்












Click it and Unblock the Notifications