இது மட்டும் நடந்துடுச்சுனா நிம்மதியாக ஓய்வெடுக்கப் போவேன்.. பொதுக்குழுவில் ராமதாஸ் பேசியது என்ன?
சென்னை: நான் ஊதியத்திற்காக வேலை செய்பவன் அல்ல. ஊமை ஜனங்களுக்காக வேலை செய்கிறேன். என்னால் ஓய்வெடுத்து ஒதுங்கி இருக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள், கூட்டணி அமைக்க, கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. வட மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற பாமக, எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்குமா அல்லது தனித்து போட்டியிடுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் பாமக அங்கம் வகித்தது. 2019 எம்.பி தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் 2024 மக்களவைத் தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக பாமக தீர்மானித்தது. வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என்று பாமக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பொதுக்குழு வழங்கியுள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "பாரத ரத்னா விருது கொடுத்தாலும், வேறு எந்த விருது கொடுத்தாலும், நான் அதை வாங்க மறுப்பேன். அதை விட சிறந்த விருது, பாமக சொந்தங்களின் மனதில் நான் வாழ்வது தான். கூட்டணி குறித்து சரியான முடிவெடுப்போம். பாமகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன்.
குறிப்பிட்ட வயதில் ஓய்வு என்பது ஊதியத்தற்கு வேலை செய்பவர்களுக்குத்தான். நான் ஊதியத்திற்காக வேலை செய்பவன் அல்ல, ஊமை ஜனங்களுக்காக வேலை செய்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள ஊமை ஜனங்கள் எல்லாம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேறி விட்டால் நிம்மதியாக ஓய்வெடுக்கச் செல்வேன். இன்றைய சூழலில் என்னால் ஓய்வெடுத்து ஒதுங்கி இருக்க முடியாது." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications