ஸ்டாலினுக்கு நேரு கொடுத்த 'உறுதி'! சொல்லி அடிச்ச மாதிரி.. அந்த ஏரியாவை தட்டித் தூக்குவோம்! ஏக குஷி!
சென்னை : கடந்த சட்டமன்றத் தேர்தலில் கே.என்.நேரு 'சொல்லி' அடித்ததைப் போல, இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய அதிமுகவின் கோட்டையை தகர்த்து திமுக வசமாக்குவோம் என முதல்வர் ஸ்டாலினிடம் உறுதி கொடுத்திருக்கிறாராம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் வரை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தை திமுக கோட்டையாக்குவோம் என சூளுரைத்தார் கே.என்.நேரு. அதன்படியே இந்த மாவட்டங்களில் உள்ள 41 தொகுதிகளில் 37ஐக் கைப்பற்றியது திமுக. அதிலும் குறிப்பாக, திருச்சியின் 9 இடங்களிலும் திமுகவே வென்றது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெற்ற மா.செக்கள் கூட்டத்தில் பேசும்போது டெல்டா மாவட்டங்களைப் போல சேலம் இனி திமுக கோட்டையாக மாறும் என முதல்வர் முன்னிலையில் சூளுரைத்திருக்கிறாராம்.
அமைச்சர் பிடிஆர் செய்வது சரியல்ல.. அதிமுக அரசை விட மோசம்.. முதல்வருக்கு அரசு ஊழியர்கள் கடிதம்!

மா.செக்கள் கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. திமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்குப் பிறகு முதல் முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. மூத்த நிர்வாகிகளும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

உறுதி கொடுத்த கே.என்.நேரு
அப்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, கடந்த தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் பெரிய வெற்றியைப் பெற்றதைப் போல் சேலம் உள்ளிட்ட பகுதிகளிலும் இனி வெற்றி பெறுவோம், சேலத்தை திமுக கோட்டையாக மாற்றிக் காட்டுவேன் என முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் உறுதியளித்துள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக கோட்டையாக்குவேன்
கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே கே.என்.நேரு டெல்டாவை திமுக கோட்டையாக்குவோம் என சூளுரைத்திருந்தார். திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவதில் டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்காற்றும், டெல்டா மாவட்டங்களில் 40 தொகுதிகளை திமுக நிச்சயம் கைப்பெற்றும் என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்திருந்தார். அதற்கேற்ப மத்திய மண்டலத்தில் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்பார்வை செய்தார். நேரு சொன்னபடியே, மத்திய மண்டலத்தில் பெருவாரியான தொகுதிகளை திமுக கைப்பற்றியது.

41ல் 37
மத்திய மண்டலம் என்று அழைக்கப்படும் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியில் மொத்தம் 23 தொகுதிகள் உள்ளன. இதில் 22 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல ஒருங்கிணைந்த காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மொத்தமுள்ள 18 தொகுதிகளில் 15 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. அந்தவகையில் மொத்தமுள்ள 41 தொகுதிகளில் 37-ஐ கைப்பற்றியது திமுக.

பொறுப்பு அமைச்சர் நேரு
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக குறைவான தொகுதிகளிலேயே வெற்றி பெற்றது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திமுக 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. சேலம், இன்றளவும் எடப்பாடி பழனிசாமியின் கோட்டை என்றே அதிமுகவினரால் கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் தான் சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவை நியமித்தார் முதல்வர் ஸ்டாலின்.

சொல்லி அடித்த கில்லி
அப்போது முதல் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்திற்குச் சென்று அரசு நிகழ்வுகளில் பங்கேற்பது, கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பது, பொதுக்கூட்டங்களை நடத்துவது என தீவிரமாகப் பணியாற்றி வருகிறார் கே.என்.நேரு. இந்நிலையில் தான் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், டெல்டா வெற்றியைப் போல, சேலத்திலும் வெற்றியைப் பதிவு செய்வோம் என ஸ்டாலினிடமே உறுதி கொடுத்திருக்கிறார் கே.என்.நேரு.

காப்பாற்றுவாரா?
கடந்த முறை சொல்லி அடித்த கே.என்.நேரு, சேலத்தையும் முழுமையாக கைப்பற்றி ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பாரா என்ற பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் எப்போதுமே திமுக கணிசமான இடங்களைக் கைப்பற்றும். ஆனால், சேலம் அப்படி அல்ல, கொங்கு மண்டலம் கடந்த பல ஆண்டுகளாக திமுகவுக்கு எதிராகவே திரும்பி இருக்கிறது. இப்படியான சூழலில், கொடுத்த உறுதியைக் காப்பாற்றுவாரா நேரு என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.