நாங்க யார் கூட கூட்டணி போகனும் என்பதில் ஸ்டாலினுக்கு என்ன அக்கறை.. வரிந்து கட்டிய அதிமுக
சென்னை: அதிமுக யாருடன் கூட்டணி செல்லவேண்டும் என்பதில் திமுக தலைவராக இருக்கக் கூடிய ஸ்டாலினுக்கு என்ன இவ்வளவு அக்கறை? என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், "ரகசியம் இருக்கிறது" என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு, இப்போது என்ன செய்வது என்றுத் தெரியாதவருக்கு எடப்பாடி பழனிசாமி பற்றியோ, அதிமுக பற்றியோ பேச என்ன அருகதை இருக்கிறது என்றும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
பாஜகவுடன் கூட்டணிக்கு போவதற்கு முன்பு, நீட் விலக்கு செய்தால் தான் கூட்டணி வைப்போம் என்று பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமியால் சொல்ல முடியுமா என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டிறிந்த நிலையில் இதற்கு தற்போது அதிமுக பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஸ்டாலினுக்கு என்ன இவ்வளவு அக்கறை?
அஇஅதிமுக யாருடன் கூட்டணி செல்லவேண்டும், என்ன கோரிக்கை வைக்க வேண்டும் என்பதில் திமுக தலைவராக இருக்கக் கூடிய ஸ்டாலினுக்கு என்ன இவ்வளவு அக்கறை? ஆடு நனைகிறதே என இந்த ஓநாய் அழுவது ஏன்? முதலில், மாநில உரிமைகளைப் பற்றி பேச ஸ்டாலினுக்கோ, திமுகவுக்கோ கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா?
இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்திற்கு பாட்னா சென்ற போது மாநில உரிமைகள் பற்றி ஏதாவது பேசினாரா? அல்லது, இரண்டாவது கூட்டத்திற்காக பெங்களூர் சென்றாரே- அப்போது காவிரி நீர் வராமல் இரண்டாம் போகம் விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் அவதியுற்றதை கருத்திற்கொண்டு, தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமை குறித்து பேசிவிட்டு வந்தாரா?
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமை
அவ்வளவு ஏன், தென் தமிழ்நாடே வெள்ளத்தில் தத்தளித்த போது, தனக்கு வாக்களித்த மக்களைக் காக்க வக்கில்லாமல், இந்தியாவைக் காக்கப் போகிறேன் என்று டெல்லியில் நடைப்பெற்ற இந்தியா கூட்டணியின் கூட்டத்திற்கு சென்றாரே- அப்போதாவது தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் பற்றி எதாவது பேசினாரா? கண்டுகொண்டாரா?
இப்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு தான் இருக்கிறது. "காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை வழங்கினால் மட்டும் தான் காங்கிரஸ் உடன் கூட்டணி" என்று வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா முதல்வர் ஸ்டாலின்?
தமிழ்நாட்டுக்கு மாபெரும் துரோகம்
நீட் தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்திவிட்டு, அதை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடியது எந்தக் கூட்டணி? அந்தக் கூட்டணியில் தானே இன்று வரை இவர்கள் அங்கம் வகித்துக் கொண்டு இருக்கிறார்கள்? இதை விட ஸ்டாலினும் திமுகவும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு செய்யக் கூடிய மாபெரும் துரோகம் என்று ஏதாவது உள்ளதா?
எடப்பாடி பழனிசாமி பற்றியோ, அதிமுக பற்றியோ பேச என்ன அருகதை இருக்கிறது இவருக்கு? "ரகசியம் இருக்கிறது" என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு, இப்போது என்ன செய்வது என்றுத் தெரியாதவர் அரங்கேற்றும் இந்த "ஊட்டி நாடகத்தை" மக்கள் யாரும் நம்பப் போவது இல்லை". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஊட்டியில் பேசிய ஸ்டாலின்
முன்னதாக ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- திமுக ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்ததா.. இல்லை.. கலைஞர் இருக்கும் போது வந்ததா.. அப்போதும் இல்லை. ஏன் ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை. ஆனால் எப்போது எடப்பாடி ஆட்சிக்கு வந்தாரோ அப்போதே நீட் தேர்வும் தமிழகத்தில் வந்துவிட்டது.
எங்களை பற்றி எடப்பாடி கேட்கிறார். நீட் விலக்கு ரகசியம் என்ன என்று. நாங்கள் தெளிவாக சொல்லிவிட்டோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நிச்சயம் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியிருந்தோம். ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு மேடையில் சவால் விடுகிறேன். உங்களுக்கு உண்மையிலேயே தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் மீது அக்கறை இருந்தால், பாஜக கூட்டணிக்கு போவதற்கு முன்னாடி நீட் விலக்கு செய்தால் தான் கூட்டணி வைப்போம் என்று பாஜகவிடம் சொல்ல முடியுமா?" இவ்வாறு கூறியிருந்தார். ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு தான் தற்போது அதிமுக பதில் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications