அஜித் மீது தவறு இல்லை.. விபத்தின் போது என்ன நடந்தது? காரில் பதிவான வீடியோவை வெளியிட்ட சுரேஷ் சந்திரா
சென்னை: கார் ரேஸில் பங்கேற்றிருந்த போது நடிகர் அஜித்குமார் கார் விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக அஜித்குமாருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. இந்த நிலையில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்தும், விபத்தின் போது அஜித்குமார் காரில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளையும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அஜித்குமார் இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் வெளியானது. இதைத் தொடர்ந்து அவர் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படமும் திரைக்கு வர இருக்கிறது. விடாமுயற்சி படம் போதிய அளவில் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி திரைப்படத்தை கொண்டாட தற்போதே அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 7.03 மணிக்கு குட் பேட் அக்லி படம் தொடர்பான அப்டேட் வெளியாக இருக்கிறது. நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும், ஆரம்பம் முதலே அஜித்குமாருக்கு பைக் ரேஸ், கார் ரேசில் அதிக ஈடுபாடு உண்டு. இதனால் சூட்டிங் தவிர மற்ற நேரங்களில் பைக், கார் ரேஸ்களில் அஜித்குமார் ஈடுபட்டு வருகிறார். மேலும் அஜித்குமார் ரேஸிங் கிளப் ஒன்றை ஆரம்பித்து அதன் பயிற்சியிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார்.
கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற மிச்சலின் 24 ஹெச் கார் ரேசில் இவரது குழு பங்கேற்றது. அஜித்குமாரும் இந்த போட்டியில் பங்கேற்றார். இதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அஜித்குமார் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது. இதில் அஜித்குமார் எந்த வித காயமும் இன்றி அஜித்குமார் உயிர் தப்பினார். ஆனால் அஜித்குமார் கார் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சி வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
பயிற்சியில் ஈடுபடும் போது இவ்வாறு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது இயல்பானது தான் என்றும் அஜித்குமார் நலமுடன் இருப்பதாகவும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற்று வரும் கார் ரேஸில் பங்கேற்றுள்ளார். இவரது ரேஸிங் குழு இதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
நேற்று இந்த போட்டியின் தகுதி சுற்று நடந்தது. இதில் அஜித்குமார் கலந்து கொண்டார். அப்போது அவரது கார் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. முன்னால் சென்றுகொண்டிருந்த கார் மீது மோதியதில் அஜித்குமார் ஓட்டிச்சென்ற கார் பல்டி அடித்து விபத்துக்குள்ளானது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியது. இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் நல் வாய்ப்பாக அஜித்குமார் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார்.
இந்த நிலையில் அஜித்குமார் கார் விபத்துக்குள்ளாகும் போது அவரது காரில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது பதிவாகியிருந்தது. அஜித்குமார் கார் சென்றுகொண்டிருக்கும்போது முன்னால் ஒரு கார் சென்றது. அந்த கார் திடீரென மெதுவாக சென்றதால், அஜித்குமார் கார் அந்த காரில் மோதி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாவது போன்ற வீடியோ பதிவாகி இருந்தது.
சுரேஷ் சந்திரா கூறுகையில், ஸ்பெயின் நாட்டின் வேலன்சியாவில் கார் ரேஸ் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் அஜித்குமாரின் ரேஸ் கிளப்பும் பங்கேற்றது. 5வது சுற்றில் அஜித்குமார் பங்கேற்று இருந்தார். இதில் அவர் 14வது இடத்தை பிடித்தார். நேற்று 6வது சுற்று நடந்தது. இந்த போட்டியில் அஜித்குமார் பங்கேற்று இருந்தார். அப்போது அஜித்குமார் கார் விபத்தில் சிக்கியது.
அஜித்குமார் ஓட்டிச்சென்ற காரில் பதிவாகியிருந்த வீடியோவை பார்க்கும் போது அஜித் மீது எந்த தவறும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. முன்னால் சென்ற கார் திடீரென நின்றதால் அந்த கார் மீது மோதியது. எனினும் அஜித்குமார் காரை திருப்பி இயல்பு நிலைக்கு கொண்டுவந்தார். ஆனால் இரண்டாவதாக குழிக்குள் கார் விழுந்ததால் இரண்டு முறை பல்டி அடித்து கார் விபத்துக்குள்ளானது. அவரது விடாமுயற்சி வலிமை மிக்கது. எந்த வித காயமும் இன்றி வெளியே வந்தார்.
அவரது விடாமுயற்சி வலிமையானது, மீண்டும் அவர் கார் ரேஸில் பங்கேற்பார். அக்கறையுடன் அவருக்கு வாழ்த்து, பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி. அஜித்குமார் நலமுடன் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications