சிவி சண்முகம் தேர்தல் முடிந்ததுமே டெல்லியில் 2 நாள் தங்கிய ரகசிய பின்னணி? எடப்பாடி பழனிசாமிக்கு செக்
சென்னை: தமிழக சட்டமன்றத்தின் அதிரடி வாக்கெடுப்புக்குப் பிறகு அதிமுகவில் உருவாகியுள்ள கொறடா அதிகாரப் போட்டி மற்றும் சி.வி.சண்முகத்தின் டெல்லி பயணத்தின் பின்னணியில் அரங்கேறும் பரபரப்பான அரசியல் நகர்வுகள் நடப்பதாக தெரிகிறது.. இவைகளை பற்றியும், சபாநாயகர் எடுக்கப் போகும் முடிவு மற்றும் எடப்பாடி பழனிசாமியின் அடுத்தகட்ட ஆக்ஷன் பிளான் என்ன என்பதை பற்றியும், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் ஒரு பேட்டியில் விரிவாகவே சொல்லி உள்ளார்.
ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ள ஆர்கே ராதாகிருஷ்ணன், "நடந்து முடிந்துள்ள வாக்கெடுப்பில் அதிமுகவின் 25 எம்.எல்.ஏக்கள் கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாகவும்.. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 எம்.எல்.ஏக்கள் எதிராகவும் வாக்களித்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது..

எடப்பாடி பழனிசாமி
தங்களது அனுமதியின்றி மாற்றி வாக்கு செலுத்தியதாக இரு தரப்பினரும் சபாநாயகரிடமும் ஆளுநரின் செயலாளரிடமும் அடுத்தடுத்து முறையிட்டுள்ளனர்.. கொறடா நியமனம் குறித்து எஸ்பி வேலுமணி தரப்பு சொல்லும் வாதங்கள் முற்றிலும் தவறானவை என்று சுட்டிக்காட்டிய ராதாகிருஷ்ணன், சட்டமன்றக் குழுவைத் தேர்ந்தெடுக்கும் வரை கட்சி என்ற அமைப்புக்குத்தான் முழு அதிகாரமும் இருக்கிறது என்கிறார்.
2023 சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படியும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை விட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சிதான் இறுதியானது என்பதால், இபிஎஸ் தரப்பு நியமித்த கொறடாவின் உத்தரவே சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.
சபாநாயகர் முடிவு என்ன
"சட்டமன்றக் கட்சி இன்னும் அமைக்கப்படவில்லை, அதனால் தங்களுக்குத்தான் கொறடாவை நியமிக்கும் அதிகாரம் உள்ளது என்றும் எஸ்பி வேலுமணி பிரஸ்மீட்டில் சொல்வது முற்றிலும் தவறானது, பொய்யானது.. கட்சியின் பொதுச்செயலாளருக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.. எனவே, பொதுச்செயலாளர் எடுக்கும் முடிவுதான் கட்சியின் கொள்கை மற்றும் சட்ட நுணுக்கங்களின்படி இறுதியானது.. இதில் எஸ்பி வேலுமணியோ, சிவி சண்முகமோ புதிய விளக்கங்களைக் கொடுப்பது சட்டப்படி செல்லாது.
2023ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பார்த்தால் கூட, கட்சிதான் எல்லாவற்றையும் விட முதன்மையானதாக இருக்குமே தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் கிடையாது.. எனவே, எடப்பாடி பழனிசாமி நியமிக்கும் கொறடாவின் உத்தரவே சட்டப்படி இறுதியானது..
கட்சித்தாவல் தடைச்சட்டம்
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இபிஎஸ் தரப்பு முறையிட்டுள்ளது.. இதில் சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்விக்கு பின்னால் ஒரு பழைய பஞ்சாயத்து இருக்கிறது.. கடந்த தேர்தலில் எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெக வேட்பாளர் மற்றும் டம்மி வேட்பாளரின் மனுக்கள் ஆஃப் செய்யப்பட்டன.
தமிழகத்தின் 233 தொகுதிகளில் 10 முன்மொழிபவர்களை வைத்து சரியாக மனுத்தாக்கல் செய்த ஒரு கட்சி, எடப்பாடி என்ற ஒரே ஒரு தொகுதியில் மட்டும் செய்யவில்லை என்று சொல்வது அப்பட்டமான போங்கு. அதை ஏற்கவும் முடியாது.. அந்த ரிட்டர்னிங் ஆபீசரைத்தான் தேர்தல் ஆணையம் முதலில் கேள்வி கேட்டிருக்க வேண்டும்.. ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை தவெக இன்னும் எதிர்க் கட்சியாகவே இருப்பதால் அவர்கள் இதைப்பற்றிக் கேள்வி கேட்கவில்லை. அந்த அதிகாரியும் வீட்டுக்குக் கிளம்பிவிட்டார்.
எடப்பாடி பழனிசாமிக்கு செக்?
இந்த பழைய பஞ்சாயத்து மற்றும் ஈகோ காரணமாகத்தான் எடப்பாடி பழனிசாமியை விஜய் இன்னும் நேரில் சென்று சந்திக்கவில்லை. தற்போது இபிஎஸ் தரப்பு கோரியுள்ள கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கையை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சட்டப்படி எடுத்துதான் ஆக வேண்டும்.. சபாநாயகரே இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர் என்றாலும் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் இபிஎஸ் தரப்புக்குச் சாதகமாக உள்ளன..
இருந்தாலும் நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வர 2016 ராதாபுரம் தொகுதி வழக்கு போல 10 ஆண்டுகள் கூட ஆகலாம், 2017ம் ஆண்டில் தினகரன் ஆதரவாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது.. இபிஎஸ் டெல்லியுடன் முழுமையாக ஒத்துழைத்ததால் தப்பித்தார்.. எனவே, இப்போதைய சூழலில் இபிஎஸ் குழு மற்றும் சி.வி.சண்முகம் குழு ஆகிய இரண்டுமே டெல்லியைச் சார்ந்துதான் உள்ளன..
சிவி சண்முகம் 2 நாள் டெல்லி பயணம்
அதிலும் தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே சி.வி.சண்முகம் டெல்லிக்குச் சென்று அங்கு 2 நாட்கள் தங்கிவிட்டுத்தான் சென்னை திரும்பினார் என்பதுதான் நிஜமான உண்மை.. அவர் டெல்லியில் யாரைச் சந்தித்தார், யாருடைய சம்மதத்தோடு இந்த உட்கட்சிப் போர்க்கொடியைத் தூக்கியுள்ளார் என்ற விவரங்கள் அனைத்தும் மிகத் தெளிவாக தெரிகின்றன.
டெல்லியில் உள்ள அதிகார மையத்தின் ஏதோ ஒரு வலுவான ஆதரவு அல்லது பின்னணி அப்பட்டமாக இருப்பதால்தான் சி.வி.சண்முகம் தரப்பு தற்போதைய சூழலில் இவ்வளவு துணிச்சலாக இபிஎஸ்-க்கு எதிராக ஆட்டம் காட்டி வருகிறது..
சபாநாயகர் முன்னால் 2023 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மிகத் தெளிவாக இருந்தாலும், அவர் முடிவெடுக்கும் போது சில முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது.. நாம் வெளியிலிருந்து எவ்வளவுதான் பேசினாலும், ஒரு சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட வேண்டும் என்று சட்டம் சொன்னாலும்.. பிராக்டிகலாக நடைமுறையில் அது சாத்தியமில்லை.
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தன்னுடைய கட்சித் தலைவரான விஜய் வழிகாட்டுதலையும், அதே நேரத்தில் டெல்லி மேலிடத்தின் அனுமதியைப் பெற்றுத்தான் சி.வி.சண்முகம் இந்த நகர்வைச் செய்துள்ளார் என்ற அரசியல் பின்னணியையும் மனதில் வைத்தே காய்களை நகர்த்துவார்.. இந்த யதார்த்தமான உண்மைகளை சபாநாயகர் கண்டிப்பாகக் கருத்தில்கொள்வார் என்பதுதான் தற்போதைய கள நிலவரம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications