600 பவுன் தங்கம், 20 கிலோ வெள்ளி, 4 வைர நெக்லஸ்! சீதனத்தை லிஸ்ட் போட்ட மாஜி அதிமுக எம்எல்ஏ மருமகள் !
சென்னை: 600 சவரன் நகையை சீதனமாக கொடுத்த போதும் கூடுதலாக 400 சவரன் வரதட்சணை வேண்டும் என தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாக சோழிங்கநல்லூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தனின் மருமகள் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி. கந்தன். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலிலும் அவர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் இவருடைய மருமகள் ஸ்ருதி பிரியதர்ஷினி, தன்னை வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இதுகுறித்து ஸ்ருதி பிரியதர்ஷினி தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் அம்பத்தூரில் இருக்கிறேன், நான் ஒரு மருத்துவர், எனது மாமனார் கே.பி. கந்தன். இவர் சோழிங்கநல்லூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ. தற்போது அதிமுகவின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். அவருடைய மகன் கே.பி.கே. சதீஷ் குமார்.
சதீஷுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. சதீஷும் அரசியலில்தான் இருக்கிறார். அவர் 182 ஆவது வார்டின் கவுன்சிலராக இருக்கிறார். அது போல் மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். எனது கணவர், மாமனாருக்கு எதிராக ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளிக்க வந்துள்ளேன்.
எனக்கும் சதீஷுக்கும் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி ஐடிசி கிராண்ட் சோழாவில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. எனது தந்தைதான் முழு செலவையும் ஏற்றார். இதையடுத்து இரு மாதங்களில் ஏப்ரல் 25 ஆம் தேதி அடையாறு ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் எங்களுக்கு திருமணம் நடந்தது.
எங்களுக்கு 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. எனது திருமணத்தின் போது 1000 சவரன் நகைகளை கேட்டனர். ஆனால் எங்களால் 600 சவரன் நகைதான் கொடுக்க முடிந்தது. 20 கிலோ வெள்ளி, சதீஷுக்கு ரேடோ வாட்ச், வைர பிரேஸ்லெட், தங்க சங்கிலி, 6 அல்லது 7 வைர மோதிரங்கள் (விலை அதிகமான சாலிட்டர் வைரம்) உள்ளிட்டவை சீராக செய்யப்பட்டது.
அது போல் எனக்கு குழந்தை பிறந்ததும் என் தாய் வீட்டு சீதனமாக 4 வைர நெக்லஸ் கொடுத்தார்கள். அத்துடன் சதீஷுக்கு ரூ 1.75 கோடி மதிப்பிலான சொகுசு கார்களையும் கொடுத்துள்ளோம். இதையெல்லாம் பெற்றுக் கொண்டும் எனக்கு பெண் குழந்தை பிறந்ததை காரணம் காட்டி 3 மாதங்களுக்கு ஒரு முறை 6 மாதங்களுக்கு ஒரு முறை என நகை, பணம் என வரதட்சணை கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
எனது கணவரின் அக்கா கே.பி.கே. இந்துமதியும் எங்களுடன்தான் வசித்து வருகிறார். என்னை மாமனார், கணவர், மாமியார், நாத்தனார் ஆகியோர் கொடுமை செய்ய ஆரம்பித்தனர். குழந்தை பிறப்பதற்கு முன்பு வார்த்தைகளால் கொட்டிய சதீஷ், பெண் குழந்தை பிறந்ததும் கோபம் அதிகமாகி அடிக்க தொடங்கிவிட்டார். இவ்வாறு ஸ்ருதி பிரியதர்ஷினி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications