ஷூட்டிங்கில் சாக்கடையில் விழுந்து நடித்த போது அந்த நச்சு தண்ணீர் நுரையீரலை பாதிச்சிருச்சி.. போண்டா மணி
சென்னை: பருவக் காதல் என்ற திரைப்படத்தில் நடித்த போது போண்டாமணி திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். மூச்சுத்திணறலால் மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில் அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காமெடி நடிகர் போண்டாமணி சுந்தரா டிராவல்ஸ் படத்தில் முரளியும் வடிவேலுவும் அவருக்கு மாப்பிள்ளை அலங்காரம் செய்வர். அந்த காமெடியில் போண்டாமணி சிறப்பாக நடித்து சிரிப்பை வரவழைத்தார்.
இது போல் நடிகர் விவேக்குடன் படிக்காதவன் படத்தில் டான் விவேக்குடன் அசிஸ்டென்ட்டாக நடித்திருந்தார். இப்படி மக்களை தனது காமெடியால் சிரிக்க வைத்த போண்டாமணி இன்று பெரும் துயரத்தில் உள்ளார்.

இரு சிறுநீரகங்கள்
அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. மருத்துவர்கள் தினந்தோறும் டயாலிசிஸ் செய்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என கூறியுள்ளனர். இல்லாவிட்டால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனராம். அவரிடம் போதிய பணம் இல்லாததால் பிறர் உதவியை நாடியுள்ளார்.

நடிகர் பெஞ்சமின்
இவரது நிலை குறித்து நடிகர் பெஞ்சமினும் கண்ணீர் வடித்தவாறே அவருக்கு தேவையான உதவிகளை செய்து அவரை பிழைக்க வைக்க வேண்டும் என வீடியோ மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் போண்டாமணி தமிழ் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் பருவக் காதல் என்ற படத்தில் நடித்து கொண்டிருந்த போது சாக்கடையில் விழுவது போன்ற ஒரு சீனை எனக்கு கொடுத்தார்கள்.

நிஜ சாக்கடை
அப்போது நிஜ சாக்கடையில் விழுந்தால் தத்ரூபமாக இருக்கும் என்பதால் நானும் குதித்தேன். அப்போது அந்த சாக்கடை நீர் எனது நுரையீரலை பாதித்தது. இதனால் எனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே விழுந்துவிட்டேன். மேலும் விழுந்த வேகத்தில் காலிலும் அடிபட்டுவிட்டது.

தனியார் மருத்துவமனை
இதையடுத்து என்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நான்தான் என்னால் அங்கு சிகிச்சைக்கு செலவு செய்ய முடியாது என்பதால் அரசு மருத்துவமனையில் சேர்க்க கோரினேன். என்னை செல் முருகன்தான் ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்தார். இங்கு நல்ல சிகிச்சை அளிக்கிறார்கள்.

மூச்சுத்திணறல்
அதற்காக நான் தனியார் மருத்துவமனைகளை குறை சொல்லவில்லை. வசதி இருப்போர் தனியார் மருத்துவமனைக்கு செல்வார்கள். வசதி இல்லாதவர்களுக்கு இந்த மருத்துவமனையில் நல்ல சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவர்களும் நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். முதலில் மூச்சுத்திணறலால் அவ்வப்போது இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து வந்து சென்றேன்.

சிறுநீரகங்களுக்கு டயாலிசிஸ்
நாளடைவில் எனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதனால் தற்போது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நான் தினமும் போய் நடித்தால்தான் வருமானம். நானும் இங்கு படுத்துக் கிடக்கிறேன். இதனால் என் குடும்பத்தினர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நடிகர் சங்கமும், சின்னத்திரை சங்கமும் எனக்கு ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications