குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை.. எழும்பூர் மருத்துவமனையில் பிரியதர்ஷினிக்கு என்ன நடந்தது?
சென்னை: சென்னை குரோம்பேட்டை சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 10-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் பிரியதர்ஷினிக்கு நடந்த சம்பவம் உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் டாக்டர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 32 வயதாகும் விவேக் சுதன் என்பவருடைய இவருடைய மனைவி பிரியதர்ஷினிக்கு 27 வயது ஆகிறது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், ஒரு வயதில் ஒரு மகனும் உள்ளனர். பிரியதர்ஷினி குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 10-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து நீண்ட நேரமாகியும் பிரியதர்ஷினி சுயநினைவு இழந்த நிலையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் டாக்டர்களிடம் கூறினார்கள். தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
எனினும் உடல்நிலை மோசடைந்த காரணத்தால், மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கடந்த 12-ந் தேதி பிரியதர்ஷினி மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அவரது உறவினர்களை கோபத்தில் ஆழ்த்தியது. எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை டாக்டர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் தான் பிரியதர்ஷினி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினார்கள். அத்துடன், கவனக்குறைவாக சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை பிரியதர்ஷினியின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் கூறி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பிரியதர்ஷினியின் கணவர் விவேக் சுதனிடம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் சாந்தாராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பவம் தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து, உடலைப் பெற்றுக்கொள்ள விவேக் சுதன் சம்மதித்தார். இதுதொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்திலும் விவேக் சுதன் புகார் அளித்துள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று (புதன்கிழமை) பிரேதப் பரிசோதனைக்கு பிறகு பிரியதர்ஷினியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
பிரியதர்ஷினி விஷயத்தில் என்ன நடந்திருக்கலாம்
பிரியதர்ஷினி விஷயத்தில் மருத்துவர்கள் கூறிய சில தகவல்களை பார்ப்போம். பொதுவாக குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்பது ஒரு பாதுகாப்பான மற்றும் எளிமையான சிகிச்சை முறையாக தான். ஆனாலும், அரிதான சில சந்தர்ப்பங்களில் இது உயிரிழப்பு வரை கொண்டு செல்ல வாய்ப்பு இருக்கிறது
பெரும்பாலான அறுவை சிகிச்சைகளில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முதன்மையான காரணம் 'அனஸ்தீசியா' எனப்படும் மயக்க மருந்துதான். சிலருக்கு மயக்க மருந்து கொடுத்தவுடன் இதயத் துடிப்பு அல்லது சுவாசத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம். மயக்க மருந்தினால் ஏற்படும் ஒவ்வாமை அல்லது மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைவதால் 'கோமா' நிலைக்குச் சென்று உயிரிழக்க நேரிடலாம்.
அடுத்ததாக அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் உள்ள ரத்த நாளங்கள் எதிர்பாராத விதமாக சேதமடைந்தால், அது தீவிரமான உட்புற ரத்தக்கசிவை உண்டாக்கும். இது உடனடியாகக் கண்டறியப்படாவிட்டால், ரத்த அழுத்தம் குறைந்து 'ஹைப்போவோலமிக் ஷாக்' ஏற்பட்டு உயிரிழப்பு நிகழும் அபாயம் உள்ளது.
அதேபோல் லேப்ராஸ்கோபி முறையில் சிகிச்சை செய்யும்போது, அறுவை சிகிச்சை கருவிகள் தவறுதலாக குடல் அல்லது சிறுநீர்ப்பை போன்ற மற்ற உறுப்புகளைத் துளைக்க வாய்ப்புள்ளது. இது தொற்று பாதிப்பை உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. அதேபோல் அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் மன அழுத்தம் அல்லது உடல்ரீதியான மாற்றங்களால் திடீரென இதயத் துடிப்பு நின்று போகலாம். குறிப்பாக ஏற்கனவே இதயக் கோளாறுகள் அல்லது சுவாசப் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இந்த அபாயம் அதிகம் ஆகும்.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடம் அல்லது மருத்துவ உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்படாமல் இருந்தால், உடலில் தீவிரமான ரத்தத் தொற்று ஏற்படலாம். இது சில நாட்களில் உடல் உறுப்புகளைச் செயலிழக்கச் செய்யும். பிரியதர்ஷினி வழக்கில், அறுவை சிகிச்சை முடிந்து நீண்ட நேரமாகியும் அவர் சுயநினைவுக்கு வரவில்லை என்பது மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் பாதிப்பையே அதிகம் சுட்டிக்காட்டுகிறது. இதனால்தான் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றிப் போயிருக்கிறது என மருத்துவர்கள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications