சென்னையில் இன்ஸ்டா ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு சரக்கு ரயிலில் சாகசம்.. விபரீதமான விளையாட்டு
சென்னை : சென்னை தண்டையார்பேட்டையில் சரக்கு ரயில் மீது ஏறி சாகச 'ரீல்ஸ்' வீடியோ எடுக்க முயன்ற இளைஞருக்கு என்ன நடந்தது தெரியுமா? இது தெரிந்தால் பல மாணவர்கள் சாகச ரீல்ஸ் எடுக்க ஆசைப்படவே மாட்டார்கள்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவில் கெத்து காட்டுவதாக நினைத்து பைக்கில் சாகசம் செய்வது, ரயில்களில் சாகசம் செய்வது, பேருந்தில் சாகசம் செய்வது போன்ற செயல்களை செய்கிறார்கள். அப்படி சாகசத்திற்கு ஆசைப்படும் இளைஞர்கள் கடைசியில் சாவைத்தான் சந்திக்கிறார்கள். அவர்களின் குடும்பங்களும் பெரும் பாதிப்பை சந்திக்கின்றன.

மகன் ஆசையாக கேட்கிறானே என்று நினைத்து ரேஸ் பைக் வாங்கி கொடுத்து, ஒரே மகனை இழந்து பல குடும்பங்கள் இன்று தவிக்கின்றன. இதேபோல் தான் தங்கள் பெற்றோரை பற்றி கொஞ்சமும் அக்கறைப்படாமல் சட்டென ரயிலில் சாகத்தில் ஈடுபட்டு இறப்பவர்கள் சென்னையில் அதிகமாக இருக்கிறார்கள்.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் ரயில்களில் செல்லும் போது, ஆபத்தான முறையில் தொங்கியபடி சாகசத்தில் ஈடுபட்டபடி பயணம் செய்வார்கள்.. அதேபோல் சில சமயங்களில் ரயிலின் கூறையில் ஏறி பயணம் செய்வார்கள்.. அப்படி செய்யும் போது மின்சாரம் தாக்கி இறந்துவிடுகிறார்கள். அப்படித்தான் தண்டையார்பேட்டையில் இளைஞர் இறந்து போனார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கவின் சித்தார்த் (வயது 19). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 17ம் தேதி அன்று, தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்க சென்றுள்ளார். பின்னர் வ.உ.சி. நகர் ரயில்வே யார்டுக்கு சென்ற கவின் சித்தார்த், சாகச 'ரீல்ஸ்' வீடியோ எடுக்க ரயில்வே யார்டில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் டேங்க் மீது ஏறியிருக்கிறார்.
அப்போது அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் கை பட்டுள்ளது. இதில் கவின் சித்தார்த மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட கவின் சித்தார்த்துக்கு பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மின்சாரம் தாக்கியதில் முகம் கருகியது.இதையடுத்து அவரது நண்பர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பரிசோதனை செய்ததில் கவின் சித்தார்த் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த ரயில்வே யார்டு நிலையை அலுவலர் அனுராஜ் கவுதா கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் பலியான கல்லூரி மாணவர் கவின் சித்தார்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications