கன்னியாகுமரியில் நண்பன் கண் முன்னே.. இப்படியா ஆகணும்.. தயவு செய்து யாரும் இப்படி செய்யாதீங்க
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவில் பின்புறம் ஓடும் தோவாளை கால்வாயில் நண்பருடன் குளிப்பதற்காக சென்றுள்ளார் சாமிநாதன். சாமிநாதன் கால்வாயில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமான சம்பவம் சாமிநாதனுக்கு கண் இமைக்கும் நேரத்தில் நடந்தது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும், காவிரி டெல்டா பகுதிகளிலும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் குளித்து பலர் காணாமல் போயிருக்கிறார்கள். இதேபோல் தமிழ்நாடு முழுக்க திடீரென பெய்யும் மழையால் காட்டாற்று வெள்ளம் உருவாகிறது. இந்த வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கீழபுத்தேரி காலாங்கரை தெருவைச் சேர்ந்த 34 வயதாகும் சாமிநாதன் என்பவர் நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பிளம்பிங் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சாமிநாதன் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான மணிகண்டன் என்பவருடன் தாழக்குடி அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவில் பின்புறம் ஓடும் தோவாளை கால்வாயில் குளிப்பதற்காக சென்றிருக்கிறார். ஆற்றின் கால்வாயில் தற்போது தண்ணீர் அதிகளவில் செல்கிறது.
வெள்ளம் பாய்ந்தோடும் கால்வாயில். தனது நண்பருடன் சாமிநாதன் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சாமிநாதன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டார்.". தன் கண்முன்னே நண்பர் தண்ணீரில் அடித்துச் செல்வதை கண்ட மணிகண்டன் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டதுடன், உடனே அவரை காப்பாற்ற முயன்றார். எவ்வளவோ முயற்சித்தும் அவரால் காப்பாற்ற முடியவில்லை. சிறிதுநேரத்தில் சாமிநாதன் தண்ணீரில் மூழ்கி மாயமானார்.
செய்வதறியாது தவித்த மணிகண்டன், பின்னர் இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கால்வாயில் சிறிதுநேரம் தேடினர். அதற்குள் இருள் சூழ்ந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலையில் சாமிநாதனின் உறவினர்கள் அப்பகுதியில் சென்று தேடினர். அப்போது சாமிநாதன் குளித்த இடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் அவர் தண்ணீருக்குள் மூழ்கி பிணமாக கிடப்பது தெரிந்தது.
உடனே உறவினர்கள் அவரது உடலை கரைக்கு கொண்டு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சாமிநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கால்வாயில் குளித்தபோது நண்பர் கண்முன்னே தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications