காங்கிரசை ஆதரியுங்கள்.. எடப்பாடிக்கு அட்வைஸ் சொன்ன "டாப்" புள்ளி.. என்னது.. சொந்த மகனே தூதா? ஆஹா!
சென்னை: ராகுல் காந்திக்கு எதிரான விவகாரத்தில் எடப்பாடியோ அல்லது அதிமுக தலைவர்களோ இதுவரை யாரும் கருத்து சொல்லவில்லை. அதிமுகவிற்குள் இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. கர்நாடகாவில் 2019 தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி மோடி என்ற பெயரை பயன்படுத்தி அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்துள்ளார். இனி அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டதாகவும், வயநாடு தொகுதி காலி ஆகிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சுனில்
இந்த நிலையில் ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், காங்கிரசை ஆதரித்து கருத்துச் சொல்லுங்கள் என எடப்பாடியை வலியுறுத்தியுள்ளார் தேர்தல் வியூக வல்லுனர் சுனில். பாஜக உறவை விரும்புவது போல காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் அந்த கட்சியுடன் உறவை துண்டித்துக் கொள்ளும் மனநிலையில்தான் எடப்பாடி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் இருக்கிறார்கள். மேலும், காங்கிரஸுடன் ரகசிய உறவுவை கையாண்டும் வருகிறார் எடப்பாடி. அவர்களுடன் கூட்டணி வைக்க முயன்று கொண்டு இருக்கிறார்.

எடப்பாடி
இப்படிப்பட்ட சூழலில், ராகுலுக்கு எதிரான விவகாரத்தில் எடப்பாடியோ அல்லது அதிமுக தலைவர்களோ இதுவரை யாரும் கருத்து சொல்லவில்லை. காங்கிரசில் இருக்கும் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனிலும், எடப்பாடியின் மகன் மிதுனும் நெருங்கிய நண்பர்கள். மிதுன் மூலமாகவே காங்கிரசிடம் ரகசிய தொடர்பை வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சூழலில், ராகுலுக்கு எதிராக நடந்துள்ள சதியை மிதுனிடம் விளக்கியிருக்கிறார் சுனில். அத்துடன், இந்த சதியை அதிமுக கண்டிக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளார். இதனை தனது தந்தையான எடப்பாடியின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார் மிதுன்.

தம்பிதுரை
இதனை தொடர்ந்து தம்பிதுரையிடம் இதுகுறித்து எடப்பாடி விவாதிக்க, ''பாஜகவுடன் நாம் முரண்பட்டிருக்கிறோம். அந்த வகையில், ராகுலுக்கு எதிரான இந்த சதியை நாம் கண்டிக்க வேண்டும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்க வைத்துள்ள நாம் கண்டிப்பதுதான் சரியானது. ஆனால், திமுகவை எதிர்க்க வேண்டுமெனில் மத்திய அரசின் ஆதரவு நமக்கு வேண்டும். பாஜகவை பகைத்துக் கொள்வதில் என்ன பலன் கிடைக்கப்போகிறது? சட்டம் அதன் கடமையை செய்திருக்கிறது என பொத்தம் பொதுவாக சொல்லி விடுங்கள்''என்று வலியுறுத்தியுள்ளார் தம்பிதுரை. அவரின் கருத்தை சீனியர்களிடம் எடப்பாடி விவாதிக்க, ''இந்த விவகாரத்தில் காங்கிரசை ஆதரிப்பதுதான் சரியாக இருக்க முடியும்.

ஆதரவு
அப்படி ஆதரிப்பதில் நமக்கு அரசியல் ரீதியாக சிக்கல் இருந்தால் கருத்துச் சொல்லாமல் அமைதியாக இருந்து விடலாம். அதை விடுத்து, தம்பிதுரை சொல்வது போல , சட்டம் தனது கடமையை செய்திருக்கிறது என சொன்னால், அது அம்மாவுக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கில் வந்த தீர்ப்பினை நாம் ஆதரித்ததாக கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். ஓபிஎஸ் இதனையே பிடித்துக் கொண்டு அரசியல் செய்வார். அதனால், அமைதியாக இருப்போம். அடுத்த கட்ட நகர்வுகளை வைத்து யோசிப்போம். அவசரம் காட்ட வேண்டாம்'' என்று வலியுறுத்தியுள்ளனர் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உல்லிட்ட சீனியர்கள். இதனால், குழப்பத்திலேயே கடந்த இரண்டு நாட்களையும் கடந்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.












Click it and Unblock the Notifications