தொடர்ந்து உயரும் கேஸ் சிலிண்டர் விலை.. காரணமே இதுதான்! ஓப்பனாக போட்டுடைத்த மத்திய அமைச்சர்
சென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே எல்பிஜி சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் எல்பிஜி சிலிண்டர்களின் பயன்பாடு மிக அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் எல்பிஜி இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே எல்பிஜி சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகக் கடுமையாகப் பாதித்து உள்ளது.

கேஸ் சிலிண்டர்
இந்த கேஸ் சிலிண்டர் விலையேற்றம் காரணமாக ஏழை மக்கள் மீண்டும் விறகு அடுப்புகளை நோக்கிச் செல்ல தொடங்கி உள்ளனர். கேஸ் சிலிண்டர்கள் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் சென்னை வந்துள்ள மத்திய இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி கேஸ் சிலிண்டர் விலையேற்றம் தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

மத்திய அமைச்சர்
சென்னை நெசப்பாக்கத்தில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையத்தை இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி தொடங்கி வைத்தார். மேலும், பிரதமரின் உஜ்வாலா திட்ட பயாணாளிகளுக்கும் அவர் கேஸ் சிலிண்டர்கள் இணைப்புகளை வழங்கினார், அப்போது பேசிய அவர், "உஜ்வாலா திட்டத்தைத் தமிழ்நாட்டை மனதில் வைத்துத் தான் செயல்படுத்தி வருகிறோம்.

தமிழகம்
தமிழகத்தில் மட்டும் 19 லட்சம் புதிய கேஸ் சிலிண்டர்களை வழங்கி உள்ளோம். தமிழகத்தில் மட்டுமே எங்களால் உஜ்பாலா திட்டத்தில் 100% இலக்கை எட்ட முடிந்தது. இந்தத் திட்டத்தை அனைத்து தரப்பு ஏழை மக்களுக்கும் எடுத்துச் செல்லும் வரையும் இந்த பயணம் தொடரும். இஎஸ்ஐ மருத்துவமனைகள் தமிழகத்தில் சிறப்பாக உள்ளன. மேலும் பல இடங்களில் இஎஸ்ஐ மருத்துவமனைகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம்.

சிஎன்ஜி
தமிழ்நாட்டிற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். எண்ணூரில் இருந்து தூத்துக்குடி வரையில் கேஸ் பைப் லைன் கொண்டு செல்லும் திட்டம் முடியும் தருவாயில் உள்ளது. இதன் மூலம் தமிழக மக்கள் பெரியளவில் பயன் பெற உள்ளனர். அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு எனப்படும் சிஎன்ஜி பயன்பாடு மாசுபாட்டைக் குறைக்கும். சிஎன்ஜிக்கான தேவை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் சிஎன்ஜி வசதி ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

விழிப்புணர்வு தேவை
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சிஎன்ஜி எரிவாயு தொடர்பான விழிப்புணர்வை நாம் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். பெட்ரோல் விலையை ஒப்பிட்டால் சிஎன்ஜி எரிவாயு விலை குறைவுதான். அதிக மக்கள் இதைப் பயன்படுத்தத் தொடங்கினால் காற்று மாசும் கூட குறையும். உஜ்வாலா திட்டத்தில் இணைப்புகளையும் அதிகம் வழங்கி வருகிறோம்" என்றார்.

கேஸ் சிலிண்டர் விலையேற்றம்
அப்போது சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்பாகச் செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர், "சர்வதேச சந்தையில் கேஸ் விலையில் ஏற்ற இறக்கம் உள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றமே இந்தியாவிலும் கேஸ் சிலிணடர் விலை அதிகரிக்கக் காரணமாக உள்ளது. விலையைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று அவர் பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications