பாட்ஷா படத்தில் ரஜினியின் தம்பியா நடிச்சவர் இப்போ என்ன பண்ணுறார் தெரியுமா?
சென்னை: சொல்லுங்க சொல்லுங்க நீங்க யாரு என்று ரஜினியிடம் கேட்டு தியேட்டரை ஆர்ப்பரிக்க வைத்து இருப்பார் ரஜினியின் தம்பியாக நடித்து இருக்கும் சசிகுமார் என்ற நடிகர். பாட்ஷா படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ரஜினியின் தம்பியாக நடித்து இருக்கும் சசிகுமார் தற்போது என்ன செய்கிறார்? எப்படி உள்ளார் என்பதை பார்க்கலாம்.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் ரஜினியின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படங்களை பட்டியலிட்டால் கண்டிப்பாக இடம் பெறக் கூடிய படமாக பாட்ஷா இருக்கும். கடந்த 1995 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணாவின் எழுத்து, இயக்கத்தில் இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

சொல்லுங்க.. சொல்லுங்க.. நீங்க யாரு?
இந்த படத்தில் ரஜினி ஆட்டோ டிரைவராகவும், பாம்பேவில் கேங்ஸ்டராகவும் பின்னி பெடலெடுத்து இருப்பார். பாட்ஷா படம் என்றதும் மறக்க முடியாத சில சீன்கள் நம் கண்முன்னே வந்து போகும். அதில் ஒரு சீன் என்னவென்றால், மாணிக்கமாக நடித்து இருக்கும் ரஜினியின் தங்கையை ரவுடி கும்பல் அடித்துவிடும். இதனால் கோபம் ஆன ரஜினி, அந்த கும்பலை அடித்து துவைத்துவிடுவார்.
அதுவரை சாதுவாக பார்க்கப்பட்ட ரஜினி, ஆக்ரோஷமாக அடித்து துவைத்து விடுவார். ரஜினியின் தம்பியாகவும் போலீசாகவும் நடித்து இருப்பவர் சசிகுமார்.. சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் இவர், ரஜினியிடம் வந்து "சொல்லுங்க.. சொல்லுங்க.. நீங்க யாரு? உடம்பு முழுக்க சண்ட வெறி ஊறி போனவரால்தான் இப்படி அடிக்க முடியும்" என்று கேட்க தியேட்டர்களில் விசில் பறக்கும்.
விபத்தில் சிக்கினார்
இந்த காட்சியால் தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமான அந்த நடிகர் தெலுங்கு கன்னடம் படங்களில் அதிகம் நடித்து இருந்தவர் ஆவார். அவரது பெயர் சசிகுமார். 90 ஸ்களில் சிறிய அளவிலான கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த சசிகுமாருக்கு பாட்ஷா படம் பெரும் பிரபலத்தை கொடுத்தது.
பல வெற்றி படங்களை கொடுத்து இருந்த சசிகுமார் இடையில் ஒரு விபத்து ஒன்றில் சிக்கினார். அதன்பிறகு அவரது சினிமா வாழ்க்கையில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டன. 1998 ல் விபத்தில் சிக்கிய பிறகு நடைபெற்ற அறுவை சிகிச்சையால் தோற்றம் மாறியது. இதனால், படவாய்ப்புகள் குறைந்து துணை கதாபாத்திரங்களில் தலை காட்டினார்.
கடைசியாக நடித்த படம்

மது போதையில் இந்த விபத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் போகவே, அரசியலுக்கு சென்றார். 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் கர்நாடகாவின் சித்ரதுர்கா தொகுதியில் சசிகுமார் போட்டியிட்டார். அந்த தொகுதியில் வெற்றியும் பெற்று எம்பியானார்.
பிறகு 2006 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இவர் கடைசியாக நடித்த படம் கிருஷ்னம் பிரனயா சக்தி என்ற கன்னட படம் ஆகும். கடந்த ஆண்டு இந்த படம் வெளியான நிலையில் அதன் பிறகு அவரை வேறு படங்களில் பார்க்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications