அவர் அப்படி இவர் இப்படி.. கமலுக்கும், ரஜினிக்கும் இடையிலான வித்தியாசம் இதுதான்!
சென்னை: அரசியல் கட்சி தொடங்கியது முதல் சமீபத்திய குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் வரை எல்லாவற்றிலும் ரஜினியும் கமலும் வேறுபாடுகிறார்கள். கமல் ஹாசன் முடிவு எடுப்பதில் வேகமாகவும், தெளிவாகவும் இருக்கிறார். ஆனால் ரஜினியின் நிலைப்பாடு என்பது குழப்பம் நிறைந்ததாக இருக்கிறது. அவர் இதுவரை எதிலும் இதுவரை தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
நடிகர் கமல் ஹாசன், அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவராக உருமாறி கிட்டத்தட்ட ஆண்டுகள் இரண்டு உருண்டோடிவிட்டது. கிட்டத்தட்ட அதே சமயத்தில் தான் ரஜினியும் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். ஆனால் ரஜினி அரசியலுக்கு இதுவரை வரவில்லை.
ஆனால் கமல் ஹாசன் தனது 50 ஆண்டு சினிமா வாழ்க்கை சரித்தரத்தில் எந்த இடத்திலும் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததே இல்லை. ஏன் அவர் வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவும் இல்லை. அவர் நடிகராக மட்டுமே இருந்தார். எந்த இடத்திலும் அரசியல்வாதி போல்பேசியது இல்லை.

தெளிவற்ற நிலைப்பாடு
ஆனால் ரஜினி 1996ல் இருந்து அரசியல் பேசி வருகிறார்.ரஜினியின் அரசியல் வருகையை ஜெயலலிதாவிற்கு எதிராக அவர் பேசியதில் இருந்து தொடங்கியது. அப்போது அவர் அரசியலில் நுழைந்திருந்தால் நிலைமையே வேறாக இருந்திருக்கலாம். ஆனால் 1996 முதல் 2017 வரை அரசியலுக்கு வருவது குறித்து தெளிவான நிலைப்பாட்டை எந்த இடத்திலும் அறிவித்தது இல்லை.

அரசியல் வருகையை
ஜெயலலிதா கருணாநிதி மறைந்த பின்னரே ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார். அதுவரை எல்லாம் மேல இருக்குறவன் முடிவு செய்ய வேண்டும் என்று கடவளை கைகாட்டி வந்தார். ஆனால் தீடீரென ஒரு நாள் கல்லூரி விழா ஒன்றில் பேசிய ரஜினி. இனி நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்தார். அப்படி அவர் அறிவித்து ஆண்டுகள் இரண்டு முழுமையாக உருண்டோடிவிட்டது. இன்னமும் கட்சியின் பெயரை கூட அறிவிக்கவில்லை.

தெளிவான நிலைப்பாடு
ஆனால் கமல் மக்கள் நீதிமய்யம் கட்சியை ஆரம்பித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்கினார். குறிப்பிட்ட அளவு வாக்குகளையும் கைப்பற்றினார். பகுதி நேர அரசியல்வாதியாகவே நான் செயல்படுவேன் என்றும் கமல் அறிவித்தார். அதன்படி அனைத்து மக்கள் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். சரி என்றால் சரி, தவறு என்றால் என்று அனைத்து அன்றாட நிகழ்வுகள் குறித்த விவகாரங்களிலும் மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் தனது விருப்பம் மற்றும் எதிர்ப்புகளை பொதுவெளியில் பதிவு செய்து முழுமையாக அரசியல்வாதியாகவே கமல் மாறிவிட்டார்.

நிலைப்பாடு
ஆனால் ரஜினி இந்த விஷயத்தில் இன்னமும் உறுதியான நிலைப்பாட்டில் இல்லை. அரசியல் கட்சி ஆரம்பிக்காவிட்டாலும் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டதால் அவரது நிலைப்பாடு என்ன என்று ஒவ்வொரு விஷயத்திலும் ஊடகங்களே அவரை நெருக்கி கேட்டு பதிலை பெற்று வருகின்றன. ஆனால் ஒருசில விஷயங்களை தவிர பெரும்பாலான விஷயங்களில் ரஜினியின் பதில்கள் எல்லாம் கழுவுற மீனில் நழுவற மீன் என்பது போலவே இருக்கிறது.

முஸ்லிம்களுக்காக
உதாரணமாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கமல் ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதை எதிர்த்து வழக்கும் தொடர்ந்துள்ளார். ஆனால் ரஜினி ஆதரவும் தெரிவிக்கவில்லை, எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக அவர் இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறாது எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்கிறார். அதன்பின்னர் முஸ்லிம் அமைப்பினரை அழைத்து தன்னுடைய நிலைப்பாடு என்ன என்றும் முஸ்லிம்களுக்கு ஒன்று என்றால் நான் முதல் ஆளாக வருவேன் என்றும் விளக்கம் அளிக்கிறார்.

மில்லியன் கேள்வி
ரஜினி அரசியல் கட்சி தொடங்கி அத்தனை விஷயத்திலும் தனது ஒவ்வொரு நிலைப்பாட்டிற்கும் தனக்கு தெரிந்தவர்களுடன் நன்கு ஆலோசித்து முடிவு எடுக்க விரும்புகிறார், ஆனால் அதற்கு நிறைய தாமதம் ஏற்படுகிறது. அத்துடன் தான் எடுக்கும் முடிவு ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ அல்லது எந்த தரப்புக்கும் பாதகமாகவோ சாதகமாகவோ இருக்கக்கூடாது என்று நினைப்பதாக தெரிகிறது. ஆனால் இந்த நிலைப்பாடு அரசியல் களத்தில் சரியாக வருமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ரஜினி சொல்வதில்லை
கமல்ஹாசன் யாரிடம் ஆலோசனை கேட்டாலும் முடிவை உடனே அறிவிக்கிறார். அது யாருக்கு எதிராக இருந்தாலும் கவலைப்படுவதில்லை. இப்படி கமல் எடுத்த முடிவுகள் பலவற்றை சொல்லலாம். ரஜினி நேற்று அரசியல் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்த போது ஒரு விஷயத்தில் ஏமாற்றம் உள்ளது என்றார். எந்த விஷயம் என்பதை பொதுவெளியில் சொல்லாமல் விவாதத்திற்கு வழிவகுத்தார்.

காலத்தை கடத்துகிறார்
அதேபோல் அரசியல் கட்சி எப்போது ஆரம்பிக்கபோகிறார். கட்சியின் கொள்கை என்ன, அவரது நிலைப்பாடு என்ன என்பது குறித்து எந்த பதிலும் சொல்லவில்லை. அரசியல் கட்சி விவகாரத்திலும், பொதுவான விவகாரங்களிலும் தனக்கு நெருக்கமான பலரிடம் ஆலோசனை பெற்ற ரஜினி, தனது அரசியல் குறித்து மனதிற்குள்ளே வைத்துக்கொண்டு இன்னமும் எந்த பதிலும் சொல்லாமல் காலத்தை கடத்துவது புரியாத புதிர் தான்.












Click it and Unblock the Notifications