சேமிப்பை விடுங்க! தமிழ் சமூகமே ஆபத்தில் இருக்கு.. எச்சரிக்கும் ஆனந்த் சீனிவாசன்! அடுத்து சொன்ன பகீர்
சென்னை: தமிழ்நாடு, கேரளா படுவேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்த இரு மாநிலங்களும் வரும் காலத்தில் என்ன பிரச்சினையை எதிர்கொள்ளும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் இருக்கும் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் ஆனந்த் சீனிவாசன்.. கடன் இல்லாமல் வாழ்க்கையை நடத்தவும்.. பொதுமக்கள் சேமிக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை இவர் தொடர்ந்து விளக்கி வருகிறார்.

குறிப்பாக, 40 ஆயிரம் சம்பாதித்தால் மட்டுமே சென்னையில் உள்ள இளைஞர்கள் திருமணம் செய்யலாம் என்று கூறி டிரெண்டானவர் இவர். இதற்கிடையே வரும் காலத்தில் தமிழகம் என்ன பிரச்சினை எதிர்கொள்ளும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மக்கள் தொகை விவகாரத்தில் ஜப்பானுக்குத் தான் பெரிய பிரச்சினை இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால், எனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தைத் தரும் வகையில் ஜப்பானை விட தென் கொரியாவில் மக்கள் தொகை பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. அது என்ன காட்டுகிறது என்றால் ஜப்பானை விடத் தென் கொரியா வேகமாக மறைந்து போகும். இந்த இரண்டுமே இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வளர்ந்த நாடுகள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
எனக்கு இப்போது ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது எந்தவொரு நாடும் வேகமாக வளர்ந்த அதன் மனித வளக்குறியீடு வேகமாக அதிகரித்தால்.. மக்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை நிறுத்திவிடுகிறார்கள். இதனால் பிறகு மக்கள்தொகை படுவேகமாக குறையத் தொடங்குகிறது.
உலக நாடுகள்: அதேபோல சீனாவிலும் மக்கள் தொகை குறையத் தொடங்கியுள்ளது. மக்கள்தொகை குறையும் விகிதத்தை எடுத்துப் பார்த்தால் ஜப்பானை விடச் சீனாவில் மக்கள் தொகை குறைவது வேகமாக இருக்கிறது. மக்கள் தொகை குறைவது என்ற இந்த பிரச்சினை அங்குத் தொட்டு, இங்குத் தொட்டு இப்போது ஆசியாவுக்கும் வந்துவிட்டது.
தமிழகம்: தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் கூட இதே பிரச்சினை வர வாய்ப்பு இருக்கிறது. வல்லுநர்களும் கூட இதையே தான் சொல்கிறார்கள். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு இதுவே பிரச்சினையாக இருக்கும். எனது காலணியில் கூட இப்போது எந்த வீட்டிலும் குழந்தைகளே இல்லை. எந்தவொரு வீதியிலும் குழந்தைகளே இல்லாத அல்லது குறைவாகவே குழந்தைகள் இருக்கிறார்கள்.
அதேநேரம் எனது வீட்டில் வேலை செய்யும் நபர் வீடு இருக்கும் பகுதிக்குச் சென்றேன். அங்கே குழந்தைகள் விளையாடிக் கொண்டு தான் இருந்தார்கள். எனக்கு என்ன சந்தேகம் என்றால்.. மக்கள் அதிகம் பணத்தைச் சம்பாதிக்கச் சம்பாதிக்க அவர்கள் குறைவாகவே குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
என்ன காரணம்: அதாவது வருமானம் குறைவாக இருக்கும் குடும்பங்களில் குழந்தைகள் சொத்தாகக் கருதப்படுவார்கள். வேலை செய்து பணத்தைச் சம்பாதிக்க அதிக பேர் என அர்த்தம். அதேநேரம் வருமானம் அதிகரிக்கும் போது குழந்தைகளால் செலவு தான் ஏற்படும் என்றே கருதுகிறார்கள். பணக்காரர்கள் யாரும் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கப் போவதில்லை. குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற அச்சத்திலேயே பலரும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள்.
தமிழ்நாட்டில் பொதுமக்கள் குழந்தைகளை அதிகம் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் தமிழ்ச் சமூகமே மிகப் பெரிய ஆபத்தில் இருக்கிறது. கொரியா, சீனா, ஜப்பானில் என்ன நடக்கிறதோ.. அதுவே தமிழ்நாட்டிலும் நடக்கும்.. இதுவே முக்கியமான பிரச்சினையாக இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications