தமிழ்நாட்டுக்கும் வடக்குக்கும் என்ன பிரச்சனை? தொடரும் உரசல்? இந்தி நாளிதழில் மனம் திறந்த ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாட்டுக்கும் வடக்குக்கும் என்ன பிரச்சனை? உரசல் இருப்பது போல் தெரிகிறதே என்பன உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு 'தைனிக் ஜாக்ரன்' என்ற இந்தி நாளேட்டுக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அதன் விவரம் வருமாறு;
கேள்வி: தமிழ்நாடு இந்தியாவின் வலிமையான மாநிலங்களில் ஒன்றாக இருந்தும், மொழி, மதம், சில திட்டங்கள் என எப்போதும் வடக்குடன் உரசலில் இருந்து வருவதாகத் தோன்றுவதன் காரணம் என்ன?

பதில்: தமிழ்நாடு வலிமை மிகுந்த மாநிலம் என்பது உண்மை. நாங்கள் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவத் தத்துவத்தை கொண்டவர்கள். எங்கள் தாய்மொழி தமிழ், இந்தியாவின் முதல் செம்மொழித் தகுதியைப் பெற்றது.
தமிழ்நாட்டில் தமிழைத் தாழ்த்தி, இந்தியைத் திணிக்க முயன்றால், அதனை எப்போதும் நாங்கள் எதிர்த்துப் போராடுவோம். அதே நேரத்தில், வடமாநிலங்களும், அவரவர் தாய்மொழியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு.

கேள்வி: உங்கள் கட்சி இந்தி மொழிக்கு எதிரானதா?
பதில்: நாங்கள் இந்தி என்கிற மொழிக்கோ வேறு எந்தவொரு மொழிக்கோ எதிரானவர்கள் அல்ல. எங்கள் கழகத்தை நிறுவிய பேரறிஞர் அண்ணா, இதனை 1962-லேயே நாடாளுமன்ற மாநிலங்களவையில் விளக்கியிருக்கிறார். இந்தித் திணிப்பைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இன்று வங்காளம், மராட்டியம், கர்நாடகம் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளைக் காக்க நினைக்கும் மாநிலங்கள் அனைத்தும் இதே நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒன்றியம். இங்கே அவரவர் தாய்மொழிதான் பண்பாட்டின் உயிர்நாடி. அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பே, தமிழ்நாட்டில் தமிழ் -ஆங்கிலம் என்கிற இரு மொழிக் கொள்கைக்கான சட்டத்தை நிறைவேற்றி நடைமுறைப்படுத்திவிட்டார் பேரறிஞர் அண்ணா. மூன்றாவது மொழி என்கிற சுமை ஏற்றப்படாத காரணத்தால், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக் குறியீடு உலகளாவிய குறியீடுகளுடன் ஒப்பிடக்கூடிய நிலையில் உள்ளது.
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை நிர்ணயித்துள்ள இலக்குகளைத் தமிழ்நாடு ஏற்கனவே கடந்து, இருமொழிக் கொள்கை வாயிலாக பல படிகள் முன்னேறியிருக்கிறது. எனவே, தமிழ்நாட்டிற்கேற்ற தனித்துவமான கல்விக் கொள்கை வகுத்துக் கொண்டிருக்கிறோம்.












Click it and Unblock the Notifications