ரயில் பயணம் ஜாலி தான்.. ஆனா இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க! அப்புறம் கம்பி எண்ண வேண்டி இருக்கும்
சென்னை: ரயில் பயணங்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும். ஆனால், அங்கே சில குறிப்பிட்ட விஷயங்களை செய்தால் அது உங்களுக்கு ஜெயில் தண்டனையை கூட வாங்கி தந்துவிடும். அது ஏன் எனத் தெரியுமா.. வாங்கப் பார்க்கலாம்.
உலகிலேயே மிகவும் விரிவான ஒரு ரயில் நெட்வோர்க்கை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியன் ரயில்வே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நமது இந்தியன் ரயில்வேயை பல கோடி பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு நகரங்களையும் சுற்றுலா தளங்களையும் இணைக்கும் வகையில் ரயில் அமைப்பு நமக்கு இருக்கிறது. விலை குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் பொதுமக்கள் அதிகம் ரயில்களையே வழங்குவார்.

ரயில்கள்: மேலும், சாலை விபத்துடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு ஆண்டும் ரயில் விபத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவு. எனவே, இதைப் பாதுகாப்பான போக்குவரத்து முறை என்றும் கூடச் சொல்லலாம். உள்ளே ஒவ்வொரு பெட்டியிலும் கூட பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கும். குறிப்பாக ரயில் பெட்டிகளில் எமர்ஜென்சி கதவு இருக்கும். அதேபோல உடனடியாக ரயிலை நிறுத்த அபாய சங்கிலியும் கொடுத்திருப்பார்கள்.
அவசரமான மற்றும் ஆபத்தான காலங்களில் இதைப் பயன்படுத்தி நாம் ரயிலை நிறுத்தலாம். அதேநேரம் சில நேரங்களில் தேவையில்லாமல் கூட இந்த அபாய சங்கிலியைப் பயன்படுத்தி ரயிலை நிறுத்துவார்கள். இப்படிச் செய்தால் என்ன தண்டனை.. எவ்வள மாதம் சிறை.. எவ்வளவு அபராதம் என்பது குறித்துப் பார்க்கலாம். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை இதுபோன்ற ஒரு சம்பவம் தான் சென்னையை நோக்கி வந்த ரயிலில் நடந்ததது.
அபாய சங்கிலி: அதாவது தினசரி ஹைதராபாத்- சென்னை இடையே 3 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. காச்சிகுடா எக்ஸ்பிரஸ், சார்மினார் எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் என 3 ரயில்கள் இயக்கப்படும். அதில் ஹைதராபாத்-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸில் செவ்வாய்க்கிழமை அதிகாலை காலை சுமார் 4 மணியளவில் முன்பதிவில்லா ரயில் பெட்டியில் பயணித்த பயணி ஒருவர் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்துள்ளார்.
அதுவும் சூலூர் மற்றும் அக்கம்பேட்டை இடையே உள்ள கலிங்க ஆற்றுப் பாலத்தின் மேல் ரயில் வரும் போது அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்ததால் ரயில் பாதி வழியிலேயே நின்றுவிட்டது. அது குறுகிய பாலம் என்பதால் இஞ்சினில் இருந்த ஓட்டுநரால் அபாய சங்கிலி பிடித்து இழுக்கப்பட்ட குறிப்பிட்ட பெட்டியை அடைய முடியவில்லை. இதனால் ரயில் மேற்கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
என்ன தண்டனை: இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார், அருகே இருந்த ஜேசிபி இயந்திரத்தைக் குறிப்பிட்ட பெட்டியின் அருகே கொண்டு வந்து நிறுத்தினர். அதில் ஏறிக் குறிப்பிட்ட பெட்டிக்குள் சென்று ரயில் ஓட்டுநர் அபாய சங்கிலியைச் சரி செய்தார். போலீசார் விரைந்து செயல்பட்டதால் ரயில் அதிக தாமதம் இல்லாமல் அங்கிருந்து கிளம்பியது. இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள ரயில்வே நிர்வாகம், மக்கள் தேவையில்லாமல் அபாய சங்கிலியை இழுக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
அபாய சங்கிலியை தவறாகப் பயன்படுத்துவது ரயில்வே விதிகளின்படி குற்றமாகும். அவசர தேவையின்றி அந்த அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தால் ரயில்வே சட்டத்தின் 141வது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட நபர் தண்டிக்கப்படுவார். அதன்படி அவருக்கு ரூ.500 அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications