குரூப் 4 தேர்வு பாஸாக சொன்ன அண்ணாமலை.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரியாக்சன் என்ன தெரியுமா?
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குரூப் 4 தேர்வில் பாஸானால் அரசியலை விட்டே செல்கிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். இதுபற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இன்று கேள்வி கேட்டப்பட்ட நிலையில் அவரது ரியாக்சன் பேசும் பொருளாகி உள்ளது.
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் எனக்கூறியும், ஆளுநர் ஆர்என் ரவியை கண்டித்தும் கடந்த 20ம் தேதி தமிழகத்தில் மதுரையை தவிர்த்து பிற அனைத்து இடங்களிலும் திமுகவினர் உண்ணாவிரதம் நடத்தினர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். உண்ணவிரத போராட்டத்தின் இறுதியில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் மத்திய பாஜக அரசையும், ஆளுநர் ஆர்என் ரவியையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இந்த வேளையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நீட் தேர்வுக்கு எதிராக போராடினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும், தகுதி நீக்கம் செய்வார்கள் என்று அதிமுகவினர் சொன்னார்கள். எங்களுக்கு எதிராக அதிமுகவினர் புகார் கூட கொடுத்தனர். அமைச்சர் பதவி போனால் கூட பரவாயில்லை நீட்டை எதிர்த்து நான் போராடுவேன்.
சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் ஒரு மாணவியின் தந்தை அம்மாசியப்பன் நீட் தேர்வு விலக்கு குறித்து எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் ஐ வில் நெவர் என்கிறார். நான் கேட்கிறேன். கு ஆர் யூ?. முதல்வர் சொல்லும் வேலையை மத்திய அரசிடம் கொடுப்பதுதான் உங்கள் வேலை. நீங்கள் ஒரு தபால்காரர். நீங்கள் ஆர் என் ரவி அல்ல, ஆர் எஸ் எஸ் ரவி. ஆளுநருக்கு நான் சவால் விடுகிறேன்.
நீங்கள் உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தில் ஏதோ ஒரு தொகுதியில் தேர்தலில் நிற்க முடிவு செய்யுங்கள். அங்கே எங்கள் கட்சியின் கடைக்கோடி தொண்டரை நிற்க வைக்கிறோம். உங்களால் வெற்றி பெற முடியும் என்றால் அப்போது மக்களை சந்தியுங்கள். உங்கள் சித்தாந்தங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் போய்ச் சொல்லுங்கள். நீங்கள் வென்றதும் வாருங்கள், அதன் பிறகு நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன். தமிழ்நாட்டு மக்களை பற்றி உங்களுக்கு தெரியாது'' என காட்டமாக விமர்சனம் செய்தார்.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்தார். இதுதொடர்பாக அவர், ‛‛நீட் விவகாரத்தில் திமுக இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர். இதனால் உதயநிதி என்னென்னமோ பேசி வருகிறார். வாய் போன போக்கில் மனம் போன போக்கில் பேசி உதயநிதி ஸ்டாலின் சிக்கலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியை தேர்தலில் போட்டியிட சொல்லும் உதயநிதி ஸ்டாலின், எம்எல்ஏ பதவியை துறந்துவிட்டு யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறுவாரா? அல்லது டிஎன்பிஎஸ்சி, சிவில் சர்வீஸ் தேர்வு, குரூப் 4 தேர்வுகளில் ஆவது வெற்றி பெறுவாரா? எம்எல்ஏ பதவி, அமைச்சர் பதவியை விட்டுவிட்டு யுபிஎஸ்சி தேர்வில் நின்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெறட்டும். நான் என்னுடைய அரசியல் பதவியை விட்டு வெளியேறுகிறேன்'' என்றார்.
இந்நிலையில் தான் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛குரூர் 4 தேர்வில் வெற்றி பெற்றால் அரசியலை விட்டே விலகுவதாக அண்ணாமலை கூறியுள்ளாரே?'' என்ற கேள்வியை கேட்டார். இதை கேட்ட உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருந்த சேரில் இருந்து உடனடியாக எழுந்து வேகமாக சென்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையதளங்களில் பரவி வருகிறது.
இதுபற்றி திமுகவினர் கூறும்போது, ‛‛பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை என்பதற்கான அடையாளம் இதுதான். இதனால் தான் அவர் எழுந்து சென்றார்''என்றனர். ஆனால் பாஜகவினரோ, ‛‛அண்ணாமலை கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அமைச்சர் உதயநிதி கிளம்பி சென்றுள்ளார்'' என தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications