விடுதலை.. வியாபார நோக்கத்திற்காக இப்படியா? வெற்றிமாறனை டேக் செய்து தடா பெரியசாமி ஆவேசம்
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடித்துள்ள படம் விடுதலை. இந்த படத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே என்று படக்குழு கூறினாலும் தமிழ்நாட்டில் 1980களில் நடந்த உண்மை சம்பவத்தை ஒத்திருப்பதாக கூறப்படுகிறது. விடுதலை படம் குறித்து தமிழ்நாடு பாஜக SC அணி தலைவர் தடா பெரியசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விடுதலை படத்தில் அரியலூர் மருதையாற்று ரயில் பால தகர்ப்பும் அதைத் தொடர்ந்து விடுதலைப் படையினர் தேடப்படுவது போன்றவற்றை ஒத்திருக்கும் காட்சிகள் இந்த முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன. இது தவிர, 1992ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22-23ஆம் தேதி வாச்சாத்தியில் காவல்துறை நடத்திய வன்முறைச் சம்பவத்தின் சாயலில் ஒரு நிகழ்வும் விடுதலை படத்தில் காட்டப்படுகிறது.
இந்நிலையில் தடா பெரியசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: நண்பர்கள் பலர் தொலைபேசியில் விடுதலை திரைப்படம் பாருங்கள் அதில் நீங்கள் தூக்குத் தண்டனை பெற்ற அரியலூர் மருதையாற்று பாலம் வெடிகுண்டு சம்பவம் இடம்பெற்று இருப்பதாக கூறினார்கள். அதன் அடிப்படையில் நேற்று வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்துள்ள விடுதலை திரைப்படத்தை பார்த்தேன்.

உண்மை சம்பவம்
திரைப்படம் தொடங்கும் போது கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே என்று சொல்வது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பொதுவாக ஒரு கதை எழுதப்படும் போது உண்மை சம்பவங்களின் நெகிழ்ச்சி தான், கற்பனையாக தோன்றி கதையாக வடிவமைக்கப்படுகிறது.

தமிழ்நாடு விடுதலைபடை
வெற்றிமாறன் ஒட்டு மொத்தமாக இது கற்பனை கதை என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. தமிழரசன், புலவர் கலியபெருமாள், தர்மலிங்கம், சுந்தரம் மற்றும் என்னை போன்ற பல போராளிகள் தியாகம் செய்த வரலாற்றை, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக புரட்சிகர இயக்கம் நடத்திய தியாகத்தை வியாபார நோக்கத்திற்காக கற்பனை கதை என்று சொல்வது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தங்களுடைய வியாபார நோக்கத்திற்காக அன்று தமிழ்நாடு விடுதலைப் படை முன்வைத்த அரசியல் சித்தாந்த கருத்துக்களை மூடி மறைத்து உண்மை வரலாற்றை சிதைக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.

கல்லூரி மாணவர்கள்
இதில் திருமாவளவன், சீமான் போன்றவர்களை படம் பார்க்க வைத்து அவர்களை ஏதோ போராளிகள் போன்று காட்ட நினைப்பதும் நகைப்புக்குரியது. அத்தகைய காலங்களில் திருமாவளவன் மற்றும் சீமான் போன்றவர்கள் அரசியல் களத்திலேயே இல்லை. அப்பொழுது அவர்கள் கல்லூரி மாணவர்கள்.

உண்மை வரலாறு
அசுரன் திரைப்படத்தில் பஞ்சமி நிலம் தொடர்பான கருத்துக்களால் இயக்குனர் வெற்றிமாறனை பலரும் பாராட்டினார்கள். அதேபோன்று விடுதலை திரைப்படத்தில் மக்களின் உரிமைகளுக்காக போராடிய இயக்கத்தின் வரலாற்றை திரைப்படமாக்கும் போது கவனமாக கையாள வேண்டும். இல்லையென்றால் அது மக்களிடத்திலே குழப்பத்தையும் இயக்கத் தோழர்கள் மீதும் தவறான புரிதலையும் ஏற்படுத்தி விடும். விடுதலை இரண்டாம் பாகத்தில் தெளிவான உண்மை வரலாற்றை பதிவு செய்து படமாக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விடுதலை
அரியலூர் மருதையாற்றுப்பால வெடிகுண்டு வழக்கில் 1 ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும், 2 ஆண்டுகள் தூக்குத் தண்டனையில் சிறையில் இருந்து பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தால் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டேன். பிறகு மற்றொரு குண்டு வெடிப்பில் "தடா" சட்டத்தில் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தேன். அதில் உச்ச நீதிமன்றம் வரை சென்று அந்த வழக்கிலிருந்து விடுதலையானேன். ஆக எனது வாழ்க்கையில் 6 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளேன்" இவ்வாறு தடா பெரியாமி தனது பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications