2-3 மணி நேரம்.. பல இடங்களில் மின்தடை.. நேற்றிரவு என்ன நடந்தது தமிழ்நாட்டில்? இதுதான் பின்னணி காரணம்!
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று பல மாவட்டங்களில் 2-3 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த மின்தடைக்கான காரணம் என்ன என்று தெரிய வந்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் நேற்று இரவு 8 மணியில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டது. கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை மாவட்டங்களில் 8 மணிக்கு போன மின்சாரம் 10 மணிக்கு பின்பாகவே வந்தது.
டெல்டா மாவட்டங்களில் 10.40 மணிக்கு போன மின்சாரம் 12 மணிக்கே வந்தது. அதேபோல் வட மாவட்டங்களிலும் நேற்று இரவு பல இடங்களில் கடுமையான மின் தடை ஏற்பட்டது.

மக்கள் கொதிப்பு
திடீரென மின்சாரம் இரண்டு - மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோடை காலத்தில், இரவில் வியர்வை சொட்ட சொட்ட மக்கள் பலர் மொட்டை மாடிகளில் நிற்கும் நிலை ஏற்பட்டது. பலர் தமிழ்நாடு மின்துறையின் ஹெல்ப் லைனை அழைத்தும் கூட இந்த பிரச்சனை சரி செய்யப்படவில்லை. இதையடுத்து நெட்டிசன்கள் பலர் ட்விட்டரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை டேக் செய்து.. மின்சார கட் சார்.. என்னாச்சு என்று கேள்வி எழுப்ப தொடங்கினர்.

கேள்வி
இந்த மின் வெட்டு சமயத்தில் சில மாவட்டங்களில் மின்சாரம் 1 மணி நேரம் கட் செய்யப்பட்டு பின்னர் 2 நிமிடம் மின்சாரம் வந்து, பின்னர் மீண்டும் 1 மணி நேரம் கட் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் மத்திய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சனை ஆகும். மத்திய மின் தொகுப்பில் ஏற்பட்ட மின்னழுத்த வேறுபாடே சில இடங்களில் ஏற்பட்ட மின்தடைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் மத்திய மின் தொகுப்பில் இருந்து வர வேண்டிய மின்சாரம் வராமல் போய் உள்ளது.

தமிழ்நாடு மட்டுமா?
ஆனால் இந்த மின் தடை தமிழ்நாட்டில் மட்டும் ஏற்படவில்லை.தெலுங்கானாவில் , ஆந்திர பிரதேசத்திலும், கர்நாடகாவில் சில மாவட்டங்களிலும் மின் தடை ஏற்பட்டுள்ளது. மொத்தமாக தென் இந்தியாவிற்கான மத்திய மின் தொகுப்பு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையே இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 2500 மெகாவாட் பற்றாக்குறை வரை உள்ளது. இதில் திடீரென மத்திய மின் தொகுப்பில் சிக்கல் ஏற்பட்டால் உடனடி தடை ஏற்படும். அப்படிதான் நேற்றும் ஏற்பட்டுள்ளது.

நேற்று மின்தடை
இதையடுத்து உடனடியாக செயல்பட்டு நேற்று மாநில உற்பத்தி மையங்களில் கூடுதல் மின்சாரம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் தனியாரிடமும் அவசர அவசரமாக மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் பின்பே மின்சார தடை நேற்று சரி செய்யப்பட்டது. ஆனால் இதற்கு 2- 3 மணி நேரம் ஆனது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று கொடுத்த விளக்கத்தில், இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.

விளக்கம்
இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்று குறிப்பிட்டார்.

அமைச்சர் பேச்சு
முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டசபையில் குறிப்பிடும் போது, கோடை காலத்தில் மின் தேவை அதிகரித்து வருகிறது. 2021ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 14 ஆயிரம் மெகாவாட் வரை மின் தேவை இருந்தது. தற்போது மின் தேவை 17196 மெகாவாட் மின்சாரமாக உயர்ந்துள்ளது. இதை மக்களுக்கு விநியோகம் செய்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் கோடை காலம் மின் பற்றாக்குறை 2500 மெகாவாட் வரை இருக்கும் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

என்ன சொன்னார்?
இதையடுத்து மின் தட்டுப்பாட்டை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நடுத்தர கால கொள்முதலாக 400 மெகாவாட் மற்றும் 680 மெகாவாட், மத்திய மின் தொகுப்பில் இருந்து 555 மெகாவாட் மின்சாரமும் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இது போக குறுகிய கால கொள்முதலாக ஏப்ரல் மாதத்திற்கு 960 மெகாவாட், மே மாதத்திற்கு 925 மெகாவாட், மின் பரிமாற்றம் மூலம் 260 மெகாவாட் மின்சாரம் பெறப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

மின் தடை பின்னணி
அதன்படி மொத்தமாக ஏப்ரல் மாதத்திற்கு 3047 மெகாவாட், மொத்தமாக மே மாதத்திற்கு 3007 மெகாவாட் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். இப்படிப்பட்ட நிலையில்தான் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய மின்சார தொகுப்பு நேற்று இரவு தடை பட்டு இருக்கிறது. தென் மாநிலங்களுக்கு இந்த தொகுப்பு கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் வழங்குவதில் திடீரென பிரச்சனை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications