மத்திய கைலாஷ் - சென்னை ஐஐடி சாலையில் மோசமான நெரிசலுக்கு என்ன காரணம்? தீர்வு என்ன
சென்னை: சென்னையில் மத்திய கைலாஷிலிருந்து கிண்டி நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள் ஐஐடி மேம்பாலம் அருகே பெரும் சிரமத்தை எதிர்கொள்வது தொடர்கதையாக இருக்கிறது. எவ்வளவு தான் பாதை அகலமாக இருந்தாலும் வாகன நெரிசல் மோசமாகவே இருக்கிறது. போதிய கண்காணிப்பு மற்றும் சீரற்ற போக்குவரத்து நிர்வாகம் காரணமாகவே இந்த 1.5 கி.மீ இடைப்பட்ட பகுதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவது தொடர்கதையாக இருப்பதாக ஓஎம்ஆர் குடியிருப்புவாசிகள் கூறுகிறார்கள். கிண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள், திடீரென ஐஐடி மேம்பாலத்தை அடைவதற்காக இடதுபறத்தில் இருந்து வலதுபுறத்திற்கு மாற முயலும்போது கடுமையான நெரிசல் ஏற்படுகிறது என்கிறார்கள்.
சென்னை ராஜீவ் காந்தி சாலையில் உள்ள மத்திய கைலாஷ் முதல் சென்னை ஐஐடி வரையிலான சர்தார் படேல் சாலை, அகலமான பாதைகள் மற்றும் மேம்பாலம் இருக்கிறது. அப்படி இருந்தும் நாள் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக இருக்கிறது. இங்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் 11,000 வாகனங்கள் கடப்பதாக கூறப்படுகிறது. அப்படி கடக்கும் வாகனங்கள் அடிக்கடி மாற்றப்படும் போக்குவரத்து விதிகள், மற்றும் கடைசி நேரத்தில் லேன் மாற்றி செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

மத்திய கைலாஷிலிருந்து கிண்டி நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள் ஐஐடி மேம்பாலம் அருகே கடைசி நேரத்தில் லேன் மாற்றி செல்வதால் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இந்த மேம்பாலம் சில நேரங்களில் ஒருவழிப் பாதையாகவும், சில நேரங்களில் இருவழிப் பாதையாகவும் இயக்கப்படுவதும் குழப்பங்களுக்கு காரணமாக இருக்கிறதாம்.
குறிப்பாக ஐஐடி சந்திப்பில் கோட்டூர்புரம் நோக்கி வலதுபுறம் திரும்ப காத்திருக்கும் வாகனங்களின் வரிசை, கிண்டி நோக்கி நேராகச் செல்லும் பிரதான சாலையையும் மறித்து நிற்கின்றன. அதேபோல அண்ணா பல்கலைக்கழகம் அருகே கிண்டியிலிருந்து வரும் வாகனங்கள் ஐஐடி மேம்பாலத்தை அடைய இடதுபுறத்தில் இருந்து வலதுபுறத்திற்கு மாற முயலும்போது, நேராக வரும் வாகனங்களோடு மோதும் சூழல் ஏற்படுகிறது.
போதிய காவலர்கள் இல்லாதது: போக்குவரத்துப் போலிசார் குறிப்பிட்ட ஒரு சந்திப்பில் மட்டுமே நிற்காமல், நெரிசல் அதிகமுள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த பிரச்சனை பற்றி கருத்து தெரிவித்த காவல் அதிகாரி ஒருவர்,மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்தைச் சீரமைக்க 4 முதல் 5 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள், புகார்கள் வரும்போது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
நகர்ப்புற திட்டமிடல் நிபுணர் சுரேஷ் மேனன் கூறுகையில், "ஐஐடி மேம்பாலத்திற்கு அடியில் உள்ள சிக்னலை நீக்கிவிட்டு, பாதசாரிகள் சாலையைக் கடக்க 3 நிமிடத்திற்கு ஒருமுறை 20 வினாடிகள் மட்டும் சிக்னலை இயக்கலாம். ராஜ்பவனிலிருந்து மத்திய கைலாஷ் நோக்கி வரும் வாகனங்கள் மேம்பாலத்தின் இரண்டு வழிகளையும் பயன்படுத்த அனுமதிக்கலாம். அதேபோல், மத்திய கைலாஷிலிருந்து ராஜ்பவன் செல்லும் வாகனங்கள் ஐஐடி சிக்னலில் நிற்காமல் நேராகச் செல்லவும், கோட்டூர்புரம் செல்பவர்களுக்கு 'ஃப்ரீ ரைட்' கொடுக்கவும் நடவடிக்கை எடுத்தால் நெரிசல் கணிசமாகக் குறையும்" என்றார்.
இன்னும் தெளிவாக சொல்வது என்றால் , மத்திய கைலாஷில் இருந்து வரும் வாகனங்கள் ஐஐடி சந்திப்பில் நேரடியாக வலதுபுறம் திரும்புவதற்குப் பதிலாக, சிக்னலைக் கடந்து நேராகச் சென்று அண்ணா பல்கலைக்கழகம்/காந்தி மண்டபம் அருகே செல்லும் வகையில் பிரத்யேக யூடர்ன் அமைக்க வேண்டும். அதன் மூலம் யு-டர்ன் எடுத்து, பின்னர் இடதுபுறமாக ப்ரி லெப்ட் எடுத்து கோட்டூர்புரம் சாலைக்குள் இணையலாம்.
கோட்டூர்புரத்தில் இருந்து கிண்டி செல்ல
கோட்டூர்புரத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஐஐடி சந்திப்பைக் கடந்து வலதுபுறம் திரும்ப முயற்சி செய்யக்கூடாது. இடதுபுறமாகத் திரும்பி மத்திய கைலாஷ் நோக்கிச் சிறிது தூரம் சென்று, மத்திய கைலாஷ் சிக்னலுக்கு முன்பாகவே உள்ள யு-டர்னைப் பயன்படுத்தி கிண்டி நோக்கிய பாதையில் எளிதாக இணைய அனுமதிக்கலாம்.
ஐஐடி சிக்னலில் 'ஃப்ரீ ரைட்' எப்படி அமைக்க முடியும்
ஐஐடி சந்திப்பில் நேராகச் செல்லும் வாகனங்களுக்கே முன்னுரிமை அளித்து சிக்னலை நீக்கும்போது, கோட்டூர்புரத்தில் இருந்து வரும் வாகனங்கள் இடதுபுறம் (மத்திய கைலாஷ் நோக்கி) திரும்புவதற்கு மட்டும் 'Free Left' கொடுக்க வேண்டும். இதனால், சிக்னலில் எந்த வாகனமும் வலதுபுறம் திருப்பக் காத்து நிற்க வேண்டிய அவசியம் இருக்காது; சர்தார் படேல் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிற்காமல் தடையின்றி இயங்கும் என்பது கருத்தாக உள்ளது. ஆனால் இன்னொரு நடைமுறை சவால்களும் உள்ளது. அதுபற்றியும் பார்ப்போம்.
சவால்கள் என்ன
அண்ணா பல்கலைக்கழகப் பகுதியின் சாலை அகலம் மிக குறைவு. காந்தி மண்டபம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக நுழைவுவாயில் பகுதிகள் ஏற்கனவே மிகவும் குறுகலாகவே இருக்கிறது. எனவே அங்கு மத்திய கைலாஷில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் யு-டர்ன் எடுக்க வைத்தால், ஒரே இடத்தில் பெரிய அளவில் வாகனங்கள் தேங்கிப் போக்குவரத்து முற்றிலும் முடங்க அதிக வாய்ப்பு உள்ளது.
கவர்னர் மாளிகை சந்திப்பில் உள்ள பிரச்சனையை கவனிக்க வேண்டியுள்ளது. கவர்னர் மாளிகை பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் ஏற்கனவே சர்தார் படேல் சாலையில் இணையும் போது கடுமையான நெரிசல் எப்போதுமே ஏற்படுகிறது. இந்த யு-டர்ன் திட்டத்தால், அப்பகுதியில் மேலும் வாகன எண்ணிக்கை அதிகரித்து நெரிசல் சங்கிலித் தொடராக மாறும் அபாயமும் இருக்கிறது.
சுரங்கப்பாதை
மத்திய கைலாஷில் இருந்து நேராக அதிவேகத்தில் வரும் வாகனங்களும், யு-டர்ன் எடுத்து மீண்டும் மத்திய கைலாஷ்/கோட்டூர்புரம் செல்ல முயலும் வாகனங்களும் ஒரே பாதையில் குறுக்கிடும்போது விபத்து அபாயமும் அதிகமாகவே இருக்கிறது. இப்போது உள்ள சூழலில் உண்மையான தீர்வு என்ன...
வெறும் 'யு-டர்ன்' முறையை மட்டும் நம்பாமல், ஐஐடி சந்திப்பில் கோட்டூர்புரம் நோக்கித் திரும்புவதற்கோ அல்லது நேராகச் செல்லும் வாகனங்களுக்கோ ஒரு சிறிய சுரங்கப்பாதை அமைப்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் அல்லது ஐஐடி மேம்பாலத்தை மேலும் நீட்டித்து அல்லது அதிலிருந்து ஒரு பிரத்யேக கிளைப் பாதையை கோட்டூர்புரம் நோக்கி இறங்கும் வகையில் அமைப்பது தீர்வாக அமையும். அதேபோல் அடையாறு பாலம் வழியாக வரும் வாகனங்களை முன்கூட்டியே எல்.பி.ரோடு அல்லது கஸ்தூரிபாய் நகர் உள்சாலைகள் வழியாகக் கோட்டூர்புரத்திற்குத் திருப்பி விடுவது ஓரளவு கைகொடுக்கும் என்கிறார்கள் வாகன ஓட்டிகள்.


Click it and Unblock the Notifications
