ஆர்எஸ்எஸ் கொள்கைகளை தீ வைத்து கொளுத்துவோம்.. 50 இடங்களில் பேரணிக்கான நோக்கம் என்ன.. சீமான் ஆவேசம்!
சென்னை: ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நேரம் வரும்போது தீ வைத்து கொளுத்துவோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறுகையில், பெருந்தலைவர் காமராஜர் நம் மண்ணிற்கு கிடைத்த கொடை. பெருமிதத்தோடு அவருக்கு எங்களின் புகழ் வணக்கத்தை செலுத்துகிறோம் என்று தெரிவித்தார்.

எல்.முருகன் பேச்சு பற்றி கருத்து
தொடர்ந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தை அழிக்க முடியாது என்று எல்.முருகன் பேசிய கருத்து குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, மாபெரும் பேரரசுகள் எல்லாம் வீழ்ந்த வரலாறு இருக்கிறது. மொகலாய ஆட்சி, ஆங்கிலேய ஆட்சி, மூவேந்தர்களின் ஆட்சி என அனைத்தும் வீழ்ந்துள்ளன. ஒவ்வொருவரும் தான் சார்ந்த இருக்கக் கூடிய இயக்கத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அப்படி ஒரு பேச்சு தான் அது என்று தெரிவித்தார்.

பாஜகவின் கோட்பாடு
தொடர்ந்து, பள்ளி புத்தகத்தில் அம்பேத்கர் மற்றும் அப்துல் கலாமின் வகுப்பு குறித்த விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அது தவறு. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கோட்பாடுகள் தான் அது. அவர்களுக்கு சாதி, மதம் இரு கண்கள். அதனால் தான் தேசியக் கல்விக் கொள்கையையே எதிர்க்கிறோம். அவர்கள் வர்ணாசிரம கோட்பாடுகள் அவசியம் என்று தெரிவிப்பார்கள். ஆனால் நாங்கள் எதிர்க்கிறோம். அவர்களின் கொள்கையை பாடமாக வைத்துள்ளார்கள். ஒரு காலம் வரும், தீ வைத்து கொளுத்துவதற்கு, அப்போது கொளுத்துவோம் என்று தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் பேரணி நோக்கம் என்ன?
தொடர்ந்து ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை காரணமாக தமிழக அரசு தடை விதித்தது. அதனை மீறி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு இப்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்ன நோக்கத்திற்காக ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. மக்கள் பிரச்சினையை முன்வைத்து ஊர்வலம் நடத்தினால் கூட பரவாயில்லை. இப்படி நோக்கம் இல்லாமல் 50 இடங்களுக்கு மேல் ஏன் பேரணி நடத்த வேண்டிய தேவை இருக்கிறது.

யார் பொறுப்பு?
ஒருவேளை விரும்பத்தகாத, அசம்பாதவிங்கள் நடைபெற்றால், யார் பொறுப்பேற்பார்கள். கோடிக்கணக்கான மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு எடுக்கும் முடிவுக்கு எதிராக, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் அரசின் முடிவில் தலையிடக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் எங்களுக்கு தெரியும்
தொடர்ந்து ஆர்எஸ்எஸ் வரலாறு குறித்து சீமான் படிக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் கூறப்பட்ட கருத்து குறித்த கேள்விக்கு, அவர்கள் எங்கள் வரலாற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும். எங்களுக்கு அவர்கள் மன்னிப்பு கேட்ட வரலாறு நன்றாக தெரியும் என்று பதிலடி கொடுத்தார்.












Click it and Unblock the Notifications