செங்கல்பட்டு தாம்பரத்தில் என்னாச்சு? 6 வழிப்பாதை மேம்பாலம் வராதா? கிளாம்பாக்கத்தில் விழுந்த கேள்வி?
சென்னை: வண்டலூர் சந்திப்பு முதல் காட்டாங்கொளத்தூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனிடையே தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 6 வழிப்பாதையாக மேம்பாலப் பணி விரைவில் தொடங்க உள்ளதாக வெளியான அறிவிப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக வண்டலூர் சந்திப்பு முதல் காட்டாங்கொளத்தூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருந்ததாவது:

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் கடந்த 30.12.2023 அன்று திறந்து வைக்கப்பட்டு, தற்போது முழு வீச்சில் இயங்கி வருகிறது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை முழுமையாக மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற வகையில், தேவையான வசதிகள் ஏற்கெனவே ஏற்படுத்தி தரப்பட்டுள்ள நிலையில், பஸ் நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிகளின் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், இனிமையான பயண அனுபவத்தை வழங்கும் பொருட்டு, பல்வேறு கூடுதல் பணிகளும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மாநகர பஸ் நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி சாலையை கடந்து சென்னை மார்க்கமாக செல்லும் மாநகர பஸ்கள் அனைத்தும் தற்போது அயனஞ்சேரி சந்திப்பு வரை சென்று யு வடிவ வளைவில் திரும்பி, சென்னை நோக்கி சென்று வருகின்றன.
இதனால் தேவையற்ற கால விரயமும், போக்குவரத்து நெரிசலும் அங்கு ஏற்படுவதை கருத்தில் கொண்டு, இதற்கு நிரந்தர தீர்வாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு எதிரில் ஜி.எஸ்.டி சாலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக வண்டலூர் சந்திப்பு முதல் காட்டாங்கொளத்தூர் வரை முதற்கட்டமாக ஒரு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தற்போது விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இந்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இதற்கு தற்காலிக தீர்வாக சென்னை நோக்கி செல்லும் மாநகர பஸ்களை எளிதில் கையாளும் வகையில் தற்போதைய கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு எதிரில் சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாநகர பஸ்கள் மாநகர பஸ் நிலையத்திற்கு எதிரிலேயே ஜி.எஸ்.டி. சாலையை கடந்து எளிதாக சென்னை செல்ல இயலும். மேலும், கடுமையான போக்குவரத்து நெரிசலின் போது செங்கல்பட்டில் இருந்து கிளாம்பாக்கத்தை நோக்கி வரும் பஸ்கள் வண்டலூர் சந்திப்பு வரை சென்று திரும்புவதை தவிர்த்து புதிதாக அமைக்கப்படும் மேற்கண்ட பணிகளின் மூலம் எளிதாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை சென்றடையவும் வசதிகள் ஏற்படுத்தப்படும்" இவ்வாறு சிஎம்டிஏவின் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

முன்னதாக கடந்த ஆண்டு வெளியான தகவலின் படி, தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 27 கி.மீட்டர் தூரத்துக்கு உயர்த்தப்பட்ட வழித் தடத்தில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை நிறைவடைந்து உள்ளதாகவும் ரூ.3,523 கோடியில் இந்த பணி நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது. இதில் 6 வழித்தடங்கள் அமைய உள்ளதாகவும், பெருங்களத்தூரில் மேம்பாலம் தொடங்கி பரனூர் சுங்கசாவடியை தாண்டி இந்த பாலம் முடிவடையும் என்றும். இதற்கான பணியை அடுத்த சில மாதங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்க உள்ளதாகவும், கடந்த ஆண்டு ஜூனில் தகவல் வெளியாகி இருந்தது.
இப்போது வண்டலூர் சந்திப்பு முதல் காட்டாங்கொளத்தூர் வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் எனசிஎம்டிஏ அறிவித்திருக்கிறது. இந்த சூழலில் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 27 கி.மீட்டர் தூரத்துக்கு அமையும் உயர் மட்ட பாலம் தான் வண்டலூர் சந்திப்பு முதல் காட்டாங்கொளத்தூர் மாறி உள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இதுபற்றி சிஎம்டிஏ விளக்கம் அளித்தால் தான் முழுவிவரம் தெரியவர வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications