வைகோ அடுத்த மூவ் என்ன? விஜய் கொடுத்த பக்கா ஸ்கெட்ச்.. யாரந்த 2 பேர்? மிரண்ட அறிவாலயம்.. பின்னணி என்ன
சென்னை: வைகோ அடுத்து என்ன செய்ய போகிறார் என்றே தெரியவில்லை.. தமிழக அரசியல் களம் ஏற்கனவே செம சூடாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்யை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்துப் பேசியதுமே, அதற்கு மேல் அரசியல் களம் தகதகக்க ஆரம்பித்து விட்டது. இந்த சந்திப்புக்கு என்ன காரணம்? மதிமுகவுக்குள் நடப்பது என்ன?
வைகோ - விஜய் சந்திப்பு சும்மா ஏனோதானோ சந்திப்பு கிடையாது.. கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் இந்த ஆலோசனைக் கூட்டம் நீடித்திருக்கிறது. "தவெக அரசு அமைந்த பிறகு கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை; மிகவும் ஆரோக்கியமான நிர்வாகம் நடக்கிறது" என விஜய்க்கு சர்டிபிகேட் கொடுத்துவிட்டுத்தான் வைகோ தனது பேட்டியைத் தொடங்கினார்.

வைகோவுக்கு டெல்லி பதவி
இந்த சந்திப்புக்கு வைகோ கையில் எடுத்த முக்கிய அஸ்திரம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம். வேதாந்தா நிறுவனம் தங்களின் ஸ்டெர்லைட் ஆலையை 'கிரீன் காப்பர்' (பசுமை தாமிரம்) என்ற புதிய பெயரில் மீண்டும் இயக்கத் திட்டமிட்டு வருவதாகவும், பிரதமர் மோடிகூட சமீபத்தில் தாமிர இறக்குமதி குறித்துப் பேசியுள்ளார் என்றும் வைகோ சுட்டிக்காட்டினார்.
ஸ்டெர்லைட் அதிபர்கள் எப்படியாவது முதல்வர் விஜய்யைச் சந்திக்க அனுமதி பெற முயல்வார்கள், அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி தந்துவிடக் கூடாது என்று ஒரு விரிவான அறிக்கையை விஜய்யிடம் கொடுத்துள்ளார். "பிரதமர் மோடிக்கு விருப்பமிருந்தால் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் அதை அமைத்துக் கொள்ளட்டும், தமிழகத்தில் இடம் கொடுக்கக் கூடாது" என்று வைகோ ஆவேசமாகப் பேசியுள்ளார்.
தவெக கூட்டணியில் மதிமுக?
அடுத்ததாக, வைகோவின் 30 ஆண்டு கால நாடாளுமன்ற உரைகள் 6 தொகுப்புகளாகப் புத்தகமாக தயாராகி உள்ளதாம்.. வரும் ஆகஸ்ட் 4ம் தேதி டெல்லியில் நடக்கும் இதன் வெளியீட்டு விழாவில், முதல் பிரதியை முதல்வர் விஜய்தான் பெற வேண்டும் என வைகோ விடுத்த அழைப்பை விஜய் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டுள்ளார். அதேபோல டெல்லிக்குத் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை அழைக்கவும் வைகோ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது,
இதற்கு நடுவில்தான், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வைகோவை நியமிக்க முதல்வர் விஜய் பக்கா ஸ்கெட்ச் போட்டுள்ளதாக மதிமுக வட்டாரங்கள் கிசுகிசுக்க துவங்கி உள்ளன..
தமிழகத்தின் உரிமைகளை, முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலுவாகச் சேர்க்கவும், மாநிலத்திற்கான நிதியைத் தட்டிகேட்டுப் பெறவும் வைகோ போன்ற ஒரு மூத்த நாடாளுமன்றவாதிதான் சரியான ஆள் என விஜய் கணக்கு போட்டுள்ளார். அமைச்சருக்கு இணையான அந்தஸ்து கொண்ட இந்த டெல்லி பிரதிநிதி பதவி, இப்போதைக்கு 1 வருட காலம் என்றாலும் தவெக ஆட்சி இருக்கும் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக மதிமுக வட்டாரங்கள் ரகசியம் உடைத்துள்ளன.
இந்த ஒரு பதவியின் மூலம், வைகோவுக்குப் பெரிய மரியாதையைக் கொடுத்துத் தன் பக்கம் இழுக்க விஜய் பக்கா ஸ்கெட்ச் போட்டுள்ளாராம்.
திமுக கூட்டணியும், உதயசூரியன் சின்னமும்
ஆக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவது இப்போது கிட்டத்தட்ட நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது. 9 ஆண்டுகளாக திமுகவுடன் பயணித்த போதிலும், கடந்த தேர்தல்களில் பெரும்பாலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட மதிமுக நிர்பந்திக்கப்பட்டது.
இதனால் தங்களின் தனித்துவ அடையாளம் முற்றிலும் காணாமல் போவதாகக் கட்சிக்குள் நீண்டகாலமாகக் குமுறல்களும், மன வருத்தங்களும் இருக்கத்தான் செய்தன.. அதுமட்டுமல்ல, 2024 மக்களவை தேர்தலில் துரை வைகோ திருச்சி தொகுதியில் தனிச் சின்னத்தில் நின்றதைத் தவிர, மற்ற இடங்களில் இந்த சின்னப் பிரச்சனை மதிமுகவை நிறையவே சோதித்தது. இந்த அதிருப்திதான் இப்போது தவெகவை நோக்கி மதிமுகவை நகர்த்தியுள்ளது என்று சொல்லலாம்.
அந்த 2 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா?
இப்போது மொத்த தமிழகத்தின் பார்வையும் கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ செந்தில்நாதன் ஆகிய 2 பேர் மீதுதான் உள்ளது. மதிமுகவை சேர்ந்த இவர்கள் 2 பேருமே திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்றவர்கள்.
சமீபத்தில் தவெக அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் சட்டமன்றத்தில் வந்தபோது, திமுகவின் கொறடா உத்தரவை மீறி, அரசுக்கு எதிராக வாக்களிக்காமல் அவையைப் புறக்கணித்துத் தங்களின் தவெக விசுவாசத்தை எக்கச்சக்கமாகவே காட்டினார்கள்.. இது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது நினைவிருக்கலாம்.
இப்போது வரும் 27ம் தேதி நடைபெறவிருக்கும் மதிமுகவின் முக்கிய பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு, இந்த ணு எம்.எல்.ஏ-க்களும் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன. அதாவது ராஜினாமா செய்துவிட்டு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெக கூட்டணியில் மதிமுகவின் சொந்தத் தனிச் சின்னத்தில் இவர்கள் மறுபடியும் களம் காண்பார்கள் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
உடையும் திமுக கூட்டணி
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு மெகா கூட்டணியாகத் தேர்தலைச் சந்தித்தது திமுக. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்தப் பெரிய கூட்டணியில் இருந்து பல முக்கியக் கட்சிகள் ஏற்கனவே எஸ்கேப் ஆகிவிட்டன.
சில கட்சிகள் வெளிப்படையாகவும், சில மறைமுகமாகவும் தவெக அரசுக்கு ஆதரவளித்து வருகின்றன. அந்த லிஸ்ட்டில் இப்போது மதிமுகவும் அதிகாரப்பூர்வமாக இணையப் போகிறது... வைகோ செய்தியாளர்களிடம், "இதுகுறித்த இறுதி முடிவு பொதுக்குழுவில் அறிவிக்கப்படும்" என்று லேசான புன்னகையுடன் நழுவினாலும், ஜூன் 27 பொதுக்குழுவுக்கு பிறகு தமிழக அரசியலில் ஒரு பெரிய பூகம்பம் வெடிக்கப் போவது மட்டும் நிஜம்... பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications