"நீங்க முஸ்லிமா.." அடுத்து நொடி நடந்த விஷயம்! மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்தது இதுதான்! நமீதா பரபர
சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்ற போது தன்னை அனுமதிக்கவில்லை என்று வீடியோ வெளியிட்டு நடிகையும் பாஜக பிரமுகருமான நமீதா குற்றஞ்சாட்டியிருந்தார்.. இதையடுத்து இந்த விவகாரத்தில் கோயில் நிர்வாகம் விளக்கமளித்திருந்த நிலையில், மாலை செய்தியாளர்களிடம் பேசிய நமீதா இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
நடிகையும் பாஜக பிரமுகருமான நமீதா இன்று உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சுவாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளார். நமீதா தனது கணவருடன் கோயிலுக்குச் சென்றுள்ளார்.

மீனாட்சி அம்மன் கோயில்: அப்போது அங்கிருந்த அதிகாரிகள் அவரை கோயிலில் அனுமதிக்கவில்லை என்று நமீதா வீடியோ ஒன்றை வெளியிட்டுக் குற்றஞ்சாட்டியிருந்தார். இருப்பினும், அதிகாரிகள் வேறு ஒரு விளக்கத்தைக் கொடுத்திருந்தனர். அதாவது, பொதுவாகவே மாஸ்க் அணிந்து வருபவர்களிடம் இதுபோல கேட்பது நடைமுறை என்றும் மாஸ்க் அணிந்து வந்ததாலேயே அவரிடம் சில கேள்விகளைக் கேட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகு அவரை உள்ளே அனுமதித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
என்ன நடந்தது: இதற்கிடையே மாலை செய்தியாளர்களிடம் பேசிய நமீதா கோயிலில் என்ன நடந்தது என்பதை விளக்கியுள்ளார். மேலும், இதை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நான் வருவது இது ஐந்தாவது முறை. கோயிலுக்குச் செல்வது எனது தனிப்பட்ட ஆன்மீக பயணம் என்பதால் பொதுவாக இதை நான் ஊடகங்களுக்குச் சொல்ல மாட்டேன்.
சென்னையில் உள்ள கோயிலுக்குச் செல்லும் போதும் சரி, திருப்பதி செல்லும் போதும் சரி யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்பதால் நான் தனிப்பட்ட முறையில் சென்று வந்துவிடுவேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் இன்று அப்படி தான் தனிப்பட்ட முறையில் தரிசனத்திற்காக வந்தேன். அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்தது. அங்கிருந்த சிலர் பேசியது மோசமாக இருந்தது. முதலில் சுமார் 15 நிமிடங்கள் அங்கே என்னைக் காக்க வைத்தனர்.
முஸ்லிமா: அதன் பிறகு அங்கே இருந்த பெண் அதிகாரி ஒருவர் என்னிடம் வந்து நீங்கள் முஸ்லிமா இல்லை இந்துவா என்று எல்லாம் கேட்டார்கள். நான் இந்து தான் ஏன் இந்த கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று திரும்பக் கேட்டேன். இல்லை இல்லை ஒரு சிறு குழப்பம் எனச் சொல்லி அங்கிருந்து போய்விட்டார். மீண்டும் கொஞ்ச நேரம் என்னை அங்கேயே காக்க வைத்தனர்.
எவ்வளவு நேரம் தான் காத்திருக்க முடியும் என்று எனது கணவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் நேரடியாகச் சென்று பேசினார். அதன் பிறகு என்னை அழைத்துச் சென்று அவர்களே தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தனர். நானும் அங்கிருந்த அதிகாரிகளுக்குச் சென்று நன்றி சொன்னேன். நாங்கள் பத்திரமாக அங்கிருந்து திரும்புவதையும் அவர்கள் உறுதி செய்தனர்.
மீண்டும் நடக்கக்கூடாது: இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்கக்கூடாது என்பதற்காகவே நான் இதைச் சொல்கிறேன். அம்மனை வழிபட உலகெங்கும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். அவர்களிடம் முறையாக நடந்து கொள்ள வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்தால் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் இதுதான் தமிழ்நாட்டின் கலாச்சாரம் என்றே தவறாக நினைத்துக் கொள்வார்கள். எனவே, மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications