"பயமா.. எனக்கா.." ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி குறித்து வந்து விழுந்த கேள்வி.. சட்டென பதிலளித்த சசிகலா
சென்னை: இன்று எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், பல்வேறு விஷயங்கள் குறித்தும் கருத்து தெரிவித்தார். மேலும், அதிமுக ஒருங்கிணைந்து இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுகவில் இப்போது உட்கட்சி குழப்பம் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் தன்னை பொதுச்செயலாளர் என்று ஒரு பக்கம் செயல்பட்டு வருகிறார்.
அதேநேரம் மற்றொரு பக்கம் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தனியாகச் செயல்பட்டு வருகிறார். இருவருமே விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்பதால்.. அதிமுக தொடர்ந்து தனித்தனியாகவே இயங்கி வருகிறது.

அதிமுக
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், அதன் விசாரணை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படி அதிமுக இரண்டு பிரிவுகளா பிரிந்து இருப்பதால்.. தொண்டர்கள் சோகத்தில் உள்ளனர். இன்று அதிமுக நிறுவனத் தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இன்றும் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் தனித்தனியாகவே எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

எம்ஜிஆர் பிறந்த நாள்
அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று பலரும் கூறி வரும் நிலையில், இது குறித்து இன்று சசிகலா கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இன்று அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சசிகலா சென்னை தியாகராய நகரில் இருக்கும் தனது இல்லத்தில், எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது தான் அவர் பல விஷயங்கள் குறித்தும் தெளிவாகப் பேசினார்.

சசிகலா
செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது.. எப்போதும் ஆளுநர் உரை தயாரிக்கப்பட்ட உடன் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும்.. அதில் திருத்தம் எதாவது இருந்தால்.. அவர்களை அதைக் குறிப்பிட்டு அனுப்புவார்கள்.. அதை மாற்றிய பிறகு மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்ப வேண்டும். அதையும் அவர்கள் பார்த்த பிறகே அது புத்தகமாக அச்சிடப்படும். ஆனால், இப்போது திமுக அரசு என்ன செய்தார்கள் எனத் தெரியவில்லை. எத்தனை முறை ஆளுநர் மாளிகை திருத்தங்களைச் செய்து அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை..

ஆளுநர் விவகாரம்
எனவே, அது குறித்து முழுமையாகத் தெரியாமல்.. எதுவும் சொல்ல முடியாது... அதேநேரம் ஆளுநர் பதவியில் இருக்கும் ஒருவரை எப்படி நடத்த வேண்டும் ன்ற அணுகுமுறை இருக்கிறது. தமிழ்நாடு அரசு அந்த மாண்புகளைக் கடைப்பிடித்த ஆளுநரை நடத்த வேண்டும்.. சும்மா ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக மக்களுக்கு எது நல்லதோ அதை யோசித்துச் செயல்படுத்த வேண்டும்.

பொங்கல் பரிசு
பொங்கலுக்குப் பரிசை அறிவித்த போதே.. அதில் இவர்களைக் கரும்பைச் சேர்க்கவில்லை... எதிர்க்கட்சிகளை இந்த விவகாரத்தை எடுத்து விமர்சித்தன. போராட்டங்களையும் அறிவித்தன. அதன் பின்னரே கரும்பு வழங்குவோம் என்று அறிவித்தார்கள். ஜெயலலிதா எப்போதும் தான் சொன்னதை எப்படியாவது செய்துவிடுவார்.. ஜெயலலிதா இருந்த வரை அனைத்து வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்றப்பட்டே வந்தது.

ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி
மக்களை ஒருபோதும் அதிமுக ஏமாற்றியதே இல்லை.. வரும் காலங்களிலாவது திமுக ஒழுங்காகச் செயல்பட வேண்டும்.. வரும் மக்களவை தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக ஒருங்கிணைந்து இருக்க வேண்டியது முக்கியம்.. நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்தி, அந்த வெற்றியை எம்ஜிஆருக்கு சமர்ப்பிக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றுபட்ட அணியாக இருந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும்" என்றார். எடப்பாடி, ஓபிஎஸை சந்திப்பீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "எங்கள் கட்சிக்காரரைச் சந்திப்பதில் எனக்கு என்ன பயம்.. விரைவில் மக்களவை தேர்தல் வர உள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி என இருவரையும் சந்திக்கும் திட்டம் உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications