மகளிர் உரிமைத் தொகை.. விரிவாக்கத்திற்கு விண்ணப்பித்து உள்ளீர்களா? காத்திருக்கும் தீபாவளி பரிசு
சென்னை: கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்த அனைவருக்கும் பணம் வழங்கப்படும் என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்கத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக அது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், கடந்த ஒரு மாத காலமாக விண்ணப்பங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் விண்ணப்பித்தவர்களுக்கான முதல் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் படிப்படியாக ஆய்வு செய்யப்படுகின்றன. தீபாவளி பரிசாக இவர்களுக்கு அக்டோபர் 15ம் தேதி முதல் கட்டமாக பணம் அனுப்பப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.

மகளிர் உரிமை தொகை
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் தொடங்கி 45 நாட்கள் நிறைவடைகின்றன. எனவே, முதல் நாளில் அல்லது முகாம் தொடங்கிய முதல் வாரத்தில் விண்ணப்பித்தவர்கள் ஆகஸ்ட் 28 முதல் பதில்களைப் பெற வேண்டும். ஆனால் இவர்களுக்கான பதில்கள் அனுப்பப்படவில்லை. எனவே இவர்கள் பெரும்பாலும் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு முன்பாக பதில்களாய் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம்.
உங்களுடன் ஸ்டாலின் - மகளிர் உரிமைத் தொகை திட்டம்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகள் மற்றும் தகுதியற்றவர்கள் குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்களில் சுமார் 25 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில், மகளிர் உரிமைத் திட்ட நிதி உதவி கோரி 15 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
பெறப்பட்ட அனைத்து மனுக்களும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மனுக்கள் மீதான செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. அடுத்த 45 நாட்களுக்குள் இந்த மனுக்களுக்குத் தீர்வு காணப்படும் என அரசு அறிவித்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் தகவல்
காஞ்சிபுரத்தில் இன்று ஒரு நாள் பயணமாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திமுக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன் ஒரு பகுதியில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 17 துறைகளைச் சேர்ந்த 4997 பயனாளிகளுக்கு ரூ.253 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கலைஞர் உரிமைத்தொகை திட்டம்
விழாவில், 3846 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதோடு, புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களும் திறந்து வைக்கப்பட்டன. மேலும், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "ஒன்றிய பாஜக அரசின் அடையாளம் அடக்குமுறை; அதிமுகவின் அடையாளம் அடிமைத்தனம்; ஆனால், திமுக அரசுதான் சமூக நீதிக்கான அரசு" என்று குறிப்பிட்டார்.
திமுக அரசின் முக்கிய திட்டங்களான மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகள் செல்லம் திட்டம், மற்றும் காலை உணவு திட்டம் ஆகியவற்றின் சாதனைகளை அவர் பட்டியலிட்டார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன்பெறுவதாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 73 ஆயிரம் பெண்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் மனு அளித்த பெண்களுக்கு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கலைஞர் உரிமைத்தொகை திட்டம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார். இறுதியாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications