தபால் பாஸ்புக் தொலைந்துவிட்டதா? புதிய பாஸ்புக் பெறுவது எப்படி... எல்லா ஊரிலும் வாங்க முடியமா?
சென்னை: தபால் பாஸ்புக் தொலைந்து போன நிலையில், போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்ட் நம்பர் தெரிந்தால் புதிய பாஸ்புக் வாங்குவது சேமிப்புப் பழக்கத்தில் இன்றும் சாமானிய மக்களின் முதல் தேர்வாக இருப்பது தபால் நிலையங்கள் தான். ஆனால், எதிர்பாராத விதமாக உங்கள் தபால் நிலைய சேமிப்பு கணக்கு பாஸ்புக் தொலைந்துவிட்டால், பதற்றமடையத் தேவையில்லை. உங்களிடம் கணக்கு எண் (Account Number) மற்றும் ஏடிஎம் கார்டு இருந்தால், மிக எளிதாகப் புதிய பாஸ்புக்கை பெற்றுவிடலாம்.
தபால் நிலைய சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் பாஸ்புக்கை தொலைத்துவிட்டால் என்ன செய்ய வேண்டும், தபால் பாஸ்புக் தொலைந்துவிட்டால் எங்கேயும் வாங்க முடியமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. உண்மையில் எல்லா இடத்திலும் போய் வாங்கிவிட முடியாது.

எந்தத் தபால் நிலையத்திற்குச் செல்ல வேண்டும்?
பாஸ்புக் தொலைந்துவிட்டால், நீங்கள் எந்தத் தபால் நிலையத்திலும் புதிய பாஸ்புக் உடனடியாகப் பெற்றுவிட முடியாது. நீங்கள் கணக்கைத் தொடங்கிய தாய் தபால் நிலையத்திற்கு தான் செல்ல வேண்டும். அங்குதான் உங்கள் கையொப்பம் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்படும் என்பதால், அங்கேயே புதிய பாஸ்புக் வழங்கப்படும்.
புதிய பாஸ்புக் பெற வேண்டிய நடைமுறைகள்
விண்ணப்பப் படிவம் பெற வேண்டும்.. உங்கள் தபால் நிலையத்திற்குச் சென்று NC-29 என்ற படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். இது நகல் பாஸ்புக் பெறுவதற்கான சிறப்பு விண்ணப்பமாகும்.
அடையாளச் சான்றுகள் தர வேண்டும்.. விண்ணப்பத்துடன் உங்கள் ஆதார் கார்டு நகல், கணக்கு எண் மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைக்க வேண்டும்.
கட்டணம் எவ்வளவு.. பாஸ்புக் தொலைந்ததற்காக அரசாங்கம் நிர்ணயித்துள்ள சிறிய அபராதக் கட்டணத்தைச் (தோராயமாக ₹50 + GST) செலுத்த வேண்டும். இதற்கான ரசீதை மறக்காமல் பெற்றுக்கொள்ளுங்கள்.
சரிபார்ப்பு எப்படி இருக்கும்.. அதிகாரிகள் உங்கள் கணக்கு விவரங்களையும், ஏடிஎம் கார்டு தகவல்களையும் கணினியில் சரிபார்த்து, உங்கள் கையொப்பம் ஒத்துப்போகும் பட்சத்தில் புதிய பாஸ்புக்கை வழங்குவார்கள்.
உங்களிடம் ஏடிஎம் கார்டு இருந்தால் என்ன லாபம்
பாஸ்புக் இல்லாத பட்சத்தில், உங்களிடம் இருக்கும் ஏடிஎம் கார்டு ஒரு முக்கிய அடையாளமாகச் செயல்படும். இதன் மூலம் உங்கள் கணக்கு செயல்பாட்டில் இருப்பதை எளிதாக உறுதிப்படுத்த முடியும். மேலும், பாஸ்புக் வரும் வரை அவசரத் தேவைகளுக்கு ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
முக்கியக் குறிப்பு
பாஸ்புக் தொலைந்தது தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட தபால் நிலைய அதிகாரியிடம் ஒரு கடிதம் மூலம் தகவல் தெரிவிப்பது நல்லது. இதன் மூலம் உங்கள் கணக்கில் முறையற்ற பரிமாற்றங்கள் நடப்பதைத் தவிர்க்க முடியும். கணினிமயமாக்கப்பட்ட இன்றைய காலத்தில், உங்கள் கணக்கு எண் மட்டும் தெரிந்தால் போதும், இழந்த பாஸ்புக்கை மீட்பது மிக எளிது. எனவே, உடனே உங்கள் தாய் தபால் நிலையத்தை அணுகி புதிய பாஸ்புக்கைப் பெற்று, உங்கள் சேமிப்பைத் தொடர முடியும்.












Click it and Unblock the Notifications