"ஓபிஎஸ் எனது பழைய நண்பர்.." அதிமுக தீர்ப்பு வந்தவுடன் பட்டுனு சொன்ன டிடிவி தினகரன்!
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு குறித்து டிடிவி தினகரன் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனிடையே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி கூடியது. அதற்கு முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்ட நிலையில், அதில் ஓபிஎஸ் கலந்து கொள்ளாமல் தவிர்த்திருந்தார்.
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்ற கோஷம் வலுத்திருந்த போது இந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் தான் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வானார்.

சுப்ரீம் கோர்ட்
அதேபோல ஓபிஎஸ் பொருளாளர் பதவி உள்பட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஓபிஎஸ் மட்டுமின்றி, அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கத் தீர்மானம் இந்த பொதுக்குழுவில் தான் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருக்கும் தனது அனுமதியில்லாமல் பொதுக்குழுவைக் கூட்டியதால் அந்த பொதுக்குழுக் கூட்டமே செல்லாது என்பதை வலியுறுத்தி ஓபிஎஸ் தரப்பு முதலில் ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தது.

எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு
இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் ஜூலை 11 அதிமுக பொதுக் குழுக் கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர் வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில், இன்று அவர்கள் தீர்ப்பளித்தனர்.

டிடிவி தினகரன்
சென்னை ஐகோர்ட் ஜூலை 11 அதிமுக பொதுக் குழுக் கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்த நிலையில், அதையே உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பை எடப்பாடி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்துப் பேசுகையில், "ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் இன்னும் எங்களுடன் தான் இருக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் அதிமுக உண்மையான அதிமுகவே இல்லை.

எங்களுக்கு தொடர்பு இல்லை
ஆட்சி அதிகாரம் இருந்ததால்.. அன்று எல்லாம் அவர்களிடம் சென்றார்கள். இப்போது பணபலம் காரணமாகவே அந்த கட்சி நடந்து கொண்டிருக்கிறது. வரும் காலத்தில் அமமுக கட்சி தான் ஜெயலலிதாவின் கொள்கைகளைச் சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும்.. இந்தப் பணிகளில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம்.. இந்த தீர்ப்பிற்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

ஓபிஎஸ் பழைய நண்பர்
தென்னை மரத்திற்குத் தேள் கொட்டினால்.. அது பனைமரத்திற்கு எந்தவொரு பாதிப்பையும் தராது... ஓபிஎஸ் எனது பழைய நண்பர். 3 முறை முதல்வராக இருந்தவர். இப்போது ஒரு கட்சியில் ஒருங்கிணைப்பாளராகப் போராடிக் கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார். பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என்றும் வழக்கு தொடர்ந்துள்ளார். ஒரு தீர்ப்பு அவருக்கு எதிராக வந்துவிட்டதால்.. அவர் என்னுடன் சேர வேண்டும் என்று கூறும் அளவுக்கான ஆள் நானில்லை" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications