நாஞ்சில் சம்பத் பேசியது என்ன.. தலையில் எறியப்பட்ட இருக்கை.. திமுகவின் ராஜீவ் காந்தி விளக்கம்
சென்னை: நேற்று சென்னை முகப்பேரில் தனியார் யூடியூப் சேனல் சார்பாக ரங்கராஜ் பாண்டே தலைமையில் விவாத மேடை நடந்தது. இந்த விவாத மேடை நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பந்த் சர்ச்சைக்குரிய வகையில் திமுகவினரை பார்த்து அசிங்கமான வார்த்தைகளை பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கொந்தளித்த திமுகவினர் மேடையை நோக்கி பாய்ந்தனர். அப்போது இருக்கையை தூக்கி சிலர் நாஞ்சில் சம்பந்த் மீது எறிந்தனர். இது பெரிய அளவில் பேசுபொருளாகி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞரும் திமுக-கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான ராஜீவ் காந்தி வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "நேற்று சென்னை மதுரவாயலில் தனியார் யூடியூப் சேனல் சர்பாக நடைபெற்ற விவாத அரங்கில் அதிமுகவைச் சேர்ந்த கோவை சத்தியன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பி இடும்பவனம் கார்த்திக் உள்ளிட்டோர் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். தொடர்ந்து தவெகவைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் பழ.செல்வக்குமார் பேசினார்.

அதன்பிறகு தவெகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள் பேச எழுந்தார் நிகழ்வு ஆரம்பிக்கும் போது மக்கள் அரங்குகளில் மாற்றுக் கருத்து தெரிவிப்பதும், கேள்வி எழுப்புவதும், முழக்கம் எழுப்புவதும் ஜனநாயகத்தில் இயல்பான ஒன்றுதான். அப்படித்தான் இன்றும் கூடியிருந்த மக்கள் தங்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்!!
ஆனால், பல ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் நாஞ்சில் சம்பத் அவர்கள் ஆளுங்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் என்ற ஆணவத்தில் தன்னிலை மறந்து, பொதுமக்களை இழிவுபடுத்தும் வகையிலும், பொது அரங்கில் பயன்படுத்தக்கூடாத கொச்சையான வார்த்தைகளையும் பயன்படுத்தி ஆவேசமாக கத்த தொடங்கினார்!!
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரங்கில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள் முழக்கம் எழுப்பினர். உடனடியாக நானும், தம்பி இடும்பவம் கார்த்திக் அவர்களும், கோவை சத்தியன் அவர்களும் நிகழ்ச்சியின் நடுவர் ரங்கராஜ் பாண்டே அவர்களிடம் நாஞ்சில் சம்பத் அவர்கள் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் அவரை தொடர்ந்து பேச அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினோம்.
திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மட்டுமல்லாமல், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களும் கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொண்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இன்று முகப்பேரில் #behindwoods நடத்திய விவாத மேடையை கலவர மேடையாக மாற்ற நினைத்த #நாஞ்சில்சம்பத் . உடனடியாக உடன்பிறப்புகளை சமாதானம் படுத்திய அண்ணன் @rajiv_dmk
— சிலுவை (@SiluvaM_) August 20, 2026
தலை , கால் புரியாமல் ஆணவத்துல ஆடாதீங்க
உங்க அழிவை கொடூரமா இருக்கும் pic.twitter.com/i5JdHdVGql
எங்களது கண்டனத்தை ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி நடுவர் ரங்கராஜ் பாண்டே அவர்கள் நாஞ்சில் சம்பத் அவர்களை தொடர்ந்து பேச அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியளித்ததன் காரணமாக நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.
ஆளுங்கட்சியாக இருக்கிறோம் என்ற ஆணவத்தில் தவெக நிர்வாகிகள் பொது மேடைகளில் அடாவடியாக நடந்து கொள்வதும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் இயல்பாகிவிடக் கூடாது. அதிகார ஆணவத்தில் அராஜகம் செய்த பல கட்சிகளும், ஆட்சிகளும் வரலாற்றில் வீழ்ந்திருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய நாஞ்சில் சம்பத் அவர்களின் பேச்சு அராஜகத்தின் உச்சம்; ஆணவத்தின் உச்சம். பொதுமக்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் பயன்படுத்திய வார்த்தைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேடையிலேயே எனது கண்டனத்தைப் பதிவு செய்தேன். நிகழ்ச்சி நிர்வாகமும் அதனை ஏற்று அவரை தொடர்ந்து பேச அனுமதிக்காமல் எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறோம். ஜனநாயக மேடைகளில் கருத்து மோதல்கள் இருக்கலாம்; ஆனால் கண்ணியத்தையும் நாகரிகத்தையும் இழந்து பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நாஞ்சில் சம்பத்தின் இன்றைய பேச்சை வன்மையாகக் கண்டிக்கதக்கது!!" இவ்வாறு ராஜீவ் காந்தி தனது எக்ஸ்தள பக்கத்தில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
