பிரதமர் மோடி சொன்ன ஸ்வீட் நியூஸ்.. நகர்ப்புறங்களில் வீடு வாங்க வட்டி சலுகை எப்படி இருக்க போகிறது?
சென்னை: நகர்ப்புறங்களில் வீடு வாங்க வட்டி சலுகை அளிக்க போவதாக சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஏற்கனவே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 2.75 லட்சம் ரூபாய் சலுகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் புதிதாக வட்டி சலுகையை மத்திய அரசு வழங்கும் பட்சத்தில் பலரும் நகர்ப்புறங்களில் வீடு வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்று ரியல் எஸ்டேட் துறையினர் கூறுகிறார்கள்.
ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய அளவில் எழுச்சி பெற்றால் மட்டுமே, கட்டுமானம் சார்ந்த தொழில்களில் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை பெற முடியும். நாட்டின் அடித்தட்டு மக்களின் பலரது வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கட்டுமானத்துறையினருக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் அதிகம் பேர் வீடுகள் கட்டிடங்கள் கட்ட வேண்டும்.இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அனைவருக்கும் வீடு என்ற இலக்கும் உள்ளது. கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் வீடு வாங்குவதும் சரி, கட்டுவதும் சரி சவாலான விஷயம் ஆகும். அதிகப்படியான நில மதிப்பு, உயர்ந்துள்ள கட்டுமான செலவுகள், உயர்ந்த பத்திரப்பதிவு செலவுகள் காரணமாக மக்கள் வீடுகள் வாங்குவதற்கு தயங்கும் நிலை இருக்கிறது.
தரவு ஆய்வு நிறுவனமான ப்ராப்ஈக்விட்டி, இந்தியாவில் விற்பனையாகாமல் இருக்கும் வீடுகள் தொடர்பாக அண்மையில் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருந்தது. இந்தியாவின் 9 முக்கிய நகரங்களில் மொத்தம் 5,15,169 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி அந்த எண்ணிக்கை 5,26,914 ஆக இருந்தது. அந்த வகையில், மார்ச்சுடன் முடிந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் - ஜூன் காலாண்டில் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை 2 சதவீதம் குறைந்துள்ள போதிலும், விற்பனை ஆகாத வீடுகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
மும்பையில் உள்ள தானே நகரில் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளில் 1.07 லட்சம் வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. ஹைதராபாத்தில் 99,989 வீடுகளும், புனே நகரில் 75,905 வீடுகளும் , மும்பையில் 60,911 வீடுகளும், பெங்களூரு நகரில் 52,208 வீடுகளும், டெல்லியில் 42,133 வீடுகளும், நவி மும்பையில் 32,997 வீடுகளும், கொல்கத்தாவில் 21,947 வீடுகளும் விற்பனையாகாமல் உள்ளன. இந்தியாவிலேயே சென்னையில் தான் குறைவான அளவில் அதாவது 19,900 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன.
நகர்ப்புறங்களில் மக்கள் வீடுகளை வாங்க வேண்டும் என்றால் அவர்கள் வாங்கும் அளவிற்கு வீட்டின் விலைகள் இருக்க வேண்டும். வேலை நிரந்தரமாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேல் சலுகைகள் இருந்தால் வாங்க விரும்புவார்கள். இதை உணர்ந்து தான் பிரதமர் மோடி பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 2.75 லட்சம் ரூபாய் சலுகை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இந்நிலையில் நகர்ப்புறங்களில் வீடு வாங்க வட்டி சலுகை அளிக்க போவதாக சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், "நகர்ப்புறங்களில் சொந்த வீடு இன்றி, வாடகை வீடுகளில் வசிக்கும் நடுத்தர வகுப்பினருக்காக விரைவில் புதிய திட்டம் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நகர்ப்புறங்களில் சொந்த வீடு கட்டுவதற்காக வங்கி கடனுக்கான வட்டியில் நிவாரணம் அளிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது" என்றார். இதுதவிர கிராமங்களில் 2 கோடி பெண்களை லட்சாதிபதியாக பார்க்க வேண்டும் என்பது எனது கனவு. அதற்காக அவர்களுக்கு பிளம்பிங், எல்.இ.டி. பல்ப் உருவாக்குதல் போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் 'லட்சாதிபதி சகோதரி' திட்டத்தை தொடங்கப் போவதாகவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள படி வட்டி சலுகையை மத்திய அரசு வழங்கினால் பலரும் நகர்ப்புறங்களில் வீடு கட்ட ஆர்வம் காட்ட வாய்ப்பு உள்ளது. முன்னதாக இருந்த பழைய வருமான வரிசலுகையின் படி, வீடு கட்டினால் அதற்கான இஎம்ஐ மற்றும் வட்டிகளை வருமான வரிக்கணக்கில் காண்பிப்பார்கள். புதிய வருமான வரிசலுகையில் அது எதுவும் இல்லை.. எனவே வீடு கட்ட வரிசலுகை அளித்தால் பலரும் வீடு கட்ட ஆர்வம் காட்டுவார்கள் என்று ரியல் எஸ்டேட் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications