பத்திரப்பதிவு.. இது லிஸ்ட்லயே இல்லையே.. புதிய வழிகாட்டி மதிப்பு எப்படி இருக்க போகிறது தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் 1-ந் தேதி நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யப்படும் நிலையில், தற்போது பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு திருத்தப்பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்திருக்கிறதாம். புதிய வழிகாட்டி மதிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து அதிகாரிகள் சொன்ன தகவலை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் கடந்த 20 வருடங்களில் ரியல் எஸ்டேட் துறை அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. 90களில் வெறும் 100 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்க முடியாத நிலங்கள், 2000களில் 10000 என்கிற அளவிலும், 2010ல் லட்சம் என்கிற அளவிலும், இப்போது 5லட்சம் முதல் 10 லட்சம் என்கிற அளவிலும் வளர்ந்துள்ளது. சில இடங்களில் கற்பனைக்கூட எட்டாத அளவிற்கு மார்க்கெட் ரேட் எகிறி உள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஐடி துறையின் வளர்ச்சி. அடுத்தாக புதிய பேருந்து நிலையங்கள் அமைத்தது, புதிதாக தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்தது..

இந்த காரணங்கள் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நிலங்களை வாங்கி குவித்தன. இப்படி ரியல் எஸ்டேட்டில் குவிந்த முதலீடுகள் மிக அசாதாரணமானது. சென்னையில் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் இடம் வாங்கி வீடு கட்டிவிட முடியாத அளவிற்கு பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு ரியல் எஸ்டேட் போய்விட்டது.
சென்னை மட்டுமல்ல, கோவை, திருப்பூர், மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் என தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களிலும் ரியல் எஸ்டேட் துறை அசுர வளர்ச்சி அடைந்தது. இதனால் நிலத்தின் வழிகாட்டி மதிப்பும் சரசரவென உயர்ந்தது.. தற்போதைய நிலையில் சென்னையில் இடம் என்பதே துளியும் இல்லை. ஏற்கனவே வாங்கிய வீடுகள் அல்லது இடத்தையே வாங்க முடியும் என்கிற அளவில் இருக்கிறது.
சென்னையை ஒட்டியுள்ள, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் மிகப்பெரிய அளவில் உயரும் வாய்ப்பு இருக்கிறது. இதேபோல் கோவை, திருப்பூரிலும் அடுத்த 20 வருடத்தில் மிகப்பெரிய அளவில் அசுர வளர்ச்சியை ரியல் எஸ்டேட் துறை எட்டும் என்று கூறப்படுகிறது.மற்ற ஊர்களிலும் ரியல் எஸ்டேட் வளரும் என்றே சொல்கிறார்கள். அப்படி வளர வளர நிலத்தின் வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்புக்கு ஏற்ப உயர்த்துவதை அரசு வழக்கமாக வைத்துள்ளது.
தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில், கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் 1-ந் தேதி நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இந்த வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் 5 சதவீத முத்திரை கட்டணம், உள்ளாட்சிகளுக்கு வழங்கப்படும் 2 சதவீத சொத்து வரி கட்டணம் மற்றும் 2 சதவீத பதிவு கட்டணம் என மொத்தம் 9 சதவீதம் கட்டணத்தை , புதிதாக இடம், வீடு, நிலம், அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோர், பத்திரப்பதிவு துறைக்கு செலுத்த வேண்டும்.
ஆனால் இந்த வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக புகார்கள் உள்ளது. அதாவது ஒரே தெருவில் இருக்கும் இடங்களுக்கு வெவ்வெறு வழிகாட்டி மதிப்புகள் இருக்கிறது.. எனவே இந்த வழிகாட்டி மதிப்பில் இருக்கும் குறைகளை களைந்து சீரமைக்க மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் குழுக்கள் செயல்படுகிறது. இந்த குழுவில் பத்திரப்பதிவுத்துறை, வருவாய் துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான இந்த குழுவினர் தற்போது உள்ள வழிகாட்டி மதிப்பை தெருக்கள் வாரியாகவும், சர்வே எண் வாரியாகவும் விரிவாக ஆய்வு செய்து முரண்பாடுகளை களைந்து வருகிறார்ககள். தற்போதைய நிலையில் 38 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் இந்த சீரமைப்பு பணி முடிந்து கலெக்டர்கள் ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மீதமுள்ள மாவட்ட ஆட்சியர்கள் ஒப்புதல் அளித்தபின், பொதுமக்களின் கருத்து கேட்புக்காக அந்த வழிகாட்டி மதிப்பு பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பொதுமக்களின் கருத்துக்கள் கேட்டபின், அதில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசின் பார்வைக்கு அனுப்பப்படும் என்றும் அரசு ஒப்புதல் அளித்தபின் புதிய வழிகாட்டி மதிப்பு அமல்படுத்தப்படும் என்கிறார்கள். இந்த பணிகள் முழுமை பெற இன்னும் 2 மாதங்கள் ஆகக்கூடும் என்கிறார்கள் பத்திரப்பதிவு துறை அதிகாரிகள்.
சரி பத்திரப்பதிவு புதிய வழிகாட்டி மதிப்பு எப்படி இருக்கும்: தமிழகத்தில் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கும் பணி தான் நடப்பதாக கூறும் அதிகாரிகள், அதனை உயர்த்தும் பணி தற்போது நடைபெறவில்லை என விளக்கம் அளித்தனர். ஒவ்வொரு தெருவில் இருக்கும் முரண்பாடான வழிகாட்டி மதிப்புகள் முறைப்படுத்தப்படுகிறது என்றார்கள்.. இதன் காரணமாக சில இடங்களில் வழிகாட்டி மதிப்புகள் குறையும், அதேநேரம் சில இடங்களில் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. பெரிய அளவில் வழிகாட்டி மதிப்பில் உயரவோ குறையவோ வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications