ரொம்ப அபூர்வமாக நடக்கும் நிகழ்வு! பைபர்ஜோய் புயல் என்ன செய்யும்? தமிழ்நாடு வானிலை எப்படி இருக்கும்?
சென்னை: அரபிக்கடலில் உருவாகி வரும் பைபர்ஜோய் புயல் குறித்து சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு முக்கியமான தகவல்களை வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக சென்னை ரெயின்ஸ் வெளியிட்டுள்ள கணிப்பில், தென்மேற்கு பருவமழையின் போது அரபிக்கடலில் புயல் உருவாவது மிக மிக அபூர்வமான விஷயம். வெப்பமண்டல மேற்கு காற்று, மேல் நிலை காற்று ஆகியவையால் புயல் உருவாவதற்கான சூழ்நிலை இருக்காது. இதனால் ஜூன் முதல் செப்டம்பர் வரை அரபிக்கடலில் பெரிதாக புயல் உருவாகாது. இதுவரை கடந்த பல வருடங்களில் தென்மேற்கு பருவமழையின் போது உருவான 191 புயல்களில் ஜூன் - செப்டம்பரில் 151 வங்கக்கடலில் மட்டும் புயல்கள் உருவாக்கி உள்ளன.

அதில் 40 மட்டுமே அரபிக்கடலில் உருவாகி உள்ளது. இதில் ஜூன் மாதத்தில் 2/3 புயல்கள் அரபிக்கடலில் ஏற்பட்டு உள்ளன. அதாவது 27 புயல்கள் ஜூன் மாதத்தில் ஏற்பட்டு உள்ளன. இதில் கடந்த 30 வருடங்களில் ஜூன் மாதத்தில் அரபிக்கடலில் 9 புயல்கள் மட்டுமே ஏற்பட்டு உள்ளன. மீதம் உள்ள 18 புயல்கள் அதற்கு முந்தைய 100 வருடங்களில் ஏற்பட்டதாகும் .
அதனால் தற்போது அரபிக்கடலில் ஏற்படும் புயல் 5 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே ஏற்படும் மிகவும் அபூர்வமான நிகழ்வு ஆகும். தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதை இந்திய வானிலை மையம் இன்று உறுதி செய்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக வலுவடையும் என்று எதிர்பார்க்கிறது. 2020 ஆம் ஆண்டில், ஜூன் மாதத்தில் நிசர்கா என்ற கடுமையான சூறாவளியை நாம் ஏற்கனவே பார்த்தோம். அது அந்த வருடம் மே 31 அன்று உருவானது.
இதற்கு முன் நானாக், அசோபா மற்றும் வாயு ஆகிய சூறாவளிகள் ஜூன் முதல் வார இறுதியில் உருவாகி, இரண்டாவது வாரத்தில் அதன் சுழற்சியை நிறைவு செய்தன. 2007-ம் ஆண்டு சூப்பர் சைக்ளோனிக் புயல் கோனு, அரபிக்கடலில் ஜூன் மாதத்தில் ஏற்பட்ட மிக வலிமையான புயல் ஆகும். தற்போதைய காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறும் பட்சத்தில், அதற்கு பைபர்ஜோய் என்று பெயரிடப்படும். இது வங்கதேசம் வழங்கிய பெயர், கோனு புயல் அளவிற்கு இந்த புயல் வலுவாக இருக்காது,
இது தீவிர புயலாக உருவெடுத்தாலும் கரையை கடக்கும் முன் இது வலிமை இழக்கும். கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கான நேரம் இன்னும் வரவில்லை. ஜூன் 4 ஆம் தேதியில் பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்து இருந்தது. அந்த காலமும் கடந்துவிட்டது. இப்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால் இந்த சூழ்நிலையில் பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிக்குமா அல்லது புயல் முடியும் வரை காத்திருக்குமா என்று தெரியவில்லை.
இதற்கு முன் வடகிழக்கு பருவமழை அறிவிப்புகள் இதேபோல் புயல்கள் காரணமாக வங்கக்கடலில் தாமதமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. நேற்று தமிழ்நாட்டின் மேல் நிலவிய காற்று நிலைத்தன்மை காரணமாக மழை பெய்தது. முக்கியமாக கடலோர மாவட்டங்களில் வெயிலில் இருந்து பெரிய அளவில் விடுதலையை இந்த மழை கொடுத்தது.
ஆனால் சென்னை நகரில் பரவலாக மழை பெய்யாத நிலையில், சென்னையின் புறநகர் பகுதிகளில் பிற்பகல் நேரத்தில் நல்ல மழை பெய்தது. மேற்கிலிருந்து வரும் காற்றினால் இந்த மழைப்பொழிவு வெப்பநிலையை பெரிதாக குறைக்கவில்லை. இன்று மீண்டும் ஒருமுறை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பதைக் காணலாம். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 40 / 41°C ஆக இருக்கும்.
வரும் நாட்களில் சென்னையின் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் சில மணிநேரங்களுக்கு வெப்பநிலை 41 / 42 டிகிரி செல்சியஸ் வரை ஏற்படுவதைக் காணலாம். அடுத்த ஒரு வாரம் இப்படி சூழ்நிலை நிலவும் என்று சென்னை ரெயின்ஸ் கூறி உள்ளது.


Click it and Unblock the Notifications
