கோயம்பேடு பஸ் நிலையம் இருந்த இடம் என்ன ஆகும்? புது சட்டசபை? பிரம்மாண்ட ஐடி பார்க்? வருது சர்ப்ரைஸ்!
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கும் பகுதியில் மிகப்பெரிய திட்டம் ஒன்று வரப்போவதாக அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். அது என்ன திட்டம் என்ற கேள்வி பலருக்கும் எழுந்து இருக்கும். இது தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதிலாக, கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய பேருந்து முனையமாக இந்த பேருந்து முனையம் அனைத்து வசதிகளுடன் சிஎம்டிஏ-வால் அமைக்கப்பட்டிருக்கிறது.

எனவே, சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிய பேருந்துகள் இனி எந்தெந்த வகையில் இங்கிருந்து இயங்கும் என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை கோயம்பேட்டிலிருந்து இயங்குகின்ற பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தெற்கு பகுதிக்கு செல்லும்.
எங்கே செல்லும்?: பெங்களூர், கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயங்கும். அதேபோல தென் தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற பேருந்துகள் அத்தனையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் முதல் பேருந்து நாளை காலை 4 மணி அளவிலே கோயம்பேட்டிற்கு வரும். அதற்குப் பிறகு வருகின்ற அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தான் வரும்.
எப்படி இயங்கும்: கோயம்பேட்டிற்கு செல்லாது. எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை முழுமையாக நாளையிலிருந்து கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயங்கும். சாதாரண நாட்களில் 300 புறப்பாடுகளும், வார இறுதி நாட்களில் 360 புறப்பாடுகள் கொண்ட அரசு விரைவு போக்குவரத்து கழகத்தினுடைய பேருந்துகள் அத்தனையும் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும்.
கோயம்பேடு பேருந்து நிலையம் என்ன ஆகும்?: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிரம்மாண்ட திட்டம் ஒன்று வரப்போகிறது. 1 வருடம் அங்கே வெளிமாநில பேருந்துகள் இயங்கும். அதற்கு முன் அங்கே திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடக்கும் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியான தகவலின் படி, கோயம்பேடு பேருந்து நிலையம் இந்த பொங்கலுக்கு கடைசியாக ஒருமுறை மக்களை தங்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப உள்ளது. அடுத்த சில மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக கோயம்பேடு பேருந்து நிலைய பயன்பாடு நிறுத்தப்படும். இங்கே பல்வேறு திட்டங்கள் வர உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டில் குடியிருப்புகள், சில ஐடி நிறுவனங்கள், விளையாட்டு தொடர்பான திட்டங்கள் வர உள்ளன. அங்கே விளையாட்டு அரங்கம், ஹை ரைஸ் கட்டிடம் ஒன்றும் வர உள்ளது. மிக உயரமாக 40 மாடி கட்டிடம் வரலாம்.. அது ஐடி நிறுவனமாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.
அல்லது அங்கே புதிய சட்டசபை கூட பிரம்மாண்டமாக கட்டப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் காலியாகிவிட்டது. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையமும் மூடப்பட உள்ளது.
பாலத்திற்கு கீழ் மாற்றம்: ஏற்கனவே சென்னை கோயம்பேடு பாலத்திற்கு கீழே புதிய பொழுதுபோக்கு அம்சம் ஒன்றை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்று உள்ளது.
சென்னை கத்திப்பாரா பாலத்திற்கு கீழ் urban squre என்ற பொழுது போக்கு அம்சம் உருவாக்கப்பட்டு உள்ளது. புட் கோர்ட், விளையாடும் ஏரியா, நடக்கும் பகுதிகள் என்று இங்கே பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.
நாளுக்கு நாள் இங்கே வரக்கூடிய மக்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது. இதேபோல் கேஎன்கே சாலையிலும் பெரிய மாற்றங்களை செய்ய உள்ளனர். அதேபோல் சென்னை கோயம்பேடு பாலத்திற்கு கீழே புதிய பொழுதுபோக்கு அம்சம் ஒன்றை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது












Click it and Unblock the Notifications