"கன்பர்ம்டு".. ராஜ்யசபா எம்பி தேர்தல்.. தமிழகத்தின் 6 பேருமே போட்டியின்றி தேர்வு.. குஷியில் கட்சிகள்
6 தமிழக வேட்பாளர்கள் எப்போது போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று பரிசீலனை நடைபெற்றது.. இதையடுத்து, தமிழகத்தின் 6 பேரும் போட்டியின்றி ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகிறது.
இந்தியாவில் 57 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைகிறது... இதில் திமுக எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, ராஜேஸ்குமார் மற்றும் அதிமுக எம்பிக்களான நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.
அதனால் தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாகும் 57 எம்பிக்கள் இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்பி தேர்தல்
இதன்படி வருகிற 10-ந் தேதி மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. ஒவ்வொரு மாநிலங்களவை எம்.பி தேர்வாவதற்கும் தலா 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதன்படி திமுக 4 இடங்களுக்கும், அதிமுக 2 இடங்களுக்கும் போட்டியிடலாம்... ஆனால், தங்களுக்கும் ஒரு சீட் வேண்டும் என்று கூட்டணியில் இருந்த காங்கிரஸ் திமுகவிடம் கேட்டுக் கொண்டிருந்தது.

கிரிராஜன்
அதன்படி திமுகவும் ஒரு இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டு, தன் சார்பில் வேட்பாளர்களை அறிவித்தது.. அதன்படி, திமுக சார்பில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோர் கடந்த 27-ந் தேதி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்... அதேபோல, அதிமுகவில் 2 இடங்களுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய உச்சக்கட்ட குழப்பமும் - பூசலும் நிலவியது.. இறுதியில், ஓபிஎஸ் - இபிஎஸ் என ஆளுக்கு ஒருவர் ஆதரவாளர்களை நிறுத்த, அதன்படி, சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

ப சிதம்பரம்
ஆனால் ஒரே ஒரு வேட்பாளர் பெயரை அறிவிக்க காங்கிரஸ் படாதபாடு பட்டது.. இறுதியில், ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டார்.. இவர்களை தவிர சுயேச்சையாக பத்மராஜன், அக்னிஸ்ரீ ராமச்சந்திரன், மன்மதன், வேல்முருகன் சோழகனார், தேவராஜன் ஆகிய 5 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று கந்தசாமி, சுந்தரமூர்த்தி என மேலும் 2 பேரும் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து சுயேச்சையாக மொத்தம் 7 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கிடையே வேட்புமனு தாக்கல் நேற்று மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது.

13 பேர் வேட்பு மனு
6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த 6 பேர், சுயேச்சைகள் 7 பேர் என மொத்தம் 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து புதன்கிழமையான இன்று வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. வருகிற 3-ந் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது... இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றது.. அதன்படி, 10 எம்எல்ஏக்களின் முன்மொழிவு கடிதம் இல்லாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தேர்வாகிறார்கள்
அதேபோல, சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேரின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டது.. இதன் மூலம் திமுக அதிமுக, காங்கிரஸ் கட்சியின் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் 6 பேருமே போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.. வேட்புமனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், அன்றைய தினமே தமிழக கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட 6 பேரும் மாநிலங்களவை எம்பிக்களாக தேர்வானது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது.












Click it and Unblock the Notifications