திமுக, அதிமுக தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றியது எப்போது! அந்த "மூன்று" நாட்கள் ரொம்பவே முக்கியம்!
சென்னை: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் எந்தளவுக்கு நன்கொடை கொடுத்துள்ள என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது.
கடந்த 2019 முதல் பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றன. இருப்பினும், உச்ச நீதிமன்ற இந்த தேர்தல் பத்திர முறையே முறைகேடானது என்று சொல்லி ரத்து செய்துவிட்டது. மேலும், நன்கொடை விவகாரங்களையும் வெளியிட உத்தரவிட்டது.

அதன்படி தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள் குறித்த நன்கொடையை வெளியிட்டு இருந்தன. அதில் எந்த நிறுவனம் எவ்வளவு நன்கொடையை வழங்கியுள்ளன.. எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை போய் உள்ளது என்பது குறித்த தகவல்கள் உள்ளன.
தேர்தல் பத்திரங்கள்: கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடை குறித்த தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே இடம்பெற்றுப் பெற்றுள்ளன. அதில் திமுக ரூ.639 கோடி நன்கொடை பெற்றுள்ள நிலையில், அதிமுக வெறும் ரூ.6.05 கோடி மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளன.
தேர்தல் பத்திரங்கள் முறையில் நன்கொடை தர விரும்புவோர் பாரத ஸ்டேட் வங்கியில் இந்த தேர்தல் பத்திரங்களை வாங்க வேண்டும். அதை அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட நாட்களில் வங்கியில் கொடுத்து பணமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே விதியாகும். திமுக அதிமுக எப்போது தங்கள் தேர்தல் பத்திரங்களைப் பணமாக மாற்றிக் கொண்டுள்ளன என்பது குறித்த தகவல்களும் இப்போது வெளியாகியுள்ளது.
எப்போது: அதன்படி கடந்த 2019 ஏப்ரலில், அந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, இரண்டு நாட்களில், அதிமுக தனக்கு வந்த 6.05 கோடி ரூபாய் நன்கொடை பணமாக மாற்றியுள்ளது. அதேபோல திமுகவும் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு ரூ.7 கோடியும், லோக்சபா தேர்தலுக்கு சில நாட்களுக்குப் பிறகு ரூ.2 கோடியையும் பணமாக மாற்றியுள்ளது.
அதிமுகவுக்குத் தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தமாகக் கிடைத்த நன்கொடையே அவ்வளவு தான் என்பதால் அதன் பிறகு அவர்கள் தேர்தல் பத்திரங்களை அதன் பிறகு பயன்படுத்தவே இல்லை. அதேநேரம் திமுகவைப் பொறுத்தவரை அக்டோபர் 2020 முதல் ஜனவரி 2024 வரை 12 வெவ்வேறு தேதிகளில் மொத்தம் ரூ.630 கோடியைப் பணமாக மாற்றியுள்ளது.
அந்த 3 நாட்கள்: குறிப்பாக 2021 சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு நாளுக்குப் பிறகு அதாவது, 2021 ஏப்ரல் 7ஆம் தேதி அதிகபட்சமாக ரூ. 103 கோடியைப் பணமாக மாற்றியுள்ளது. அதேபோல 2022இல் ஜனவரி 11 மற்றும் ஏப்ரல் 11 ஆகிய தேதிகளில் ஒரு நாளில் ரூ.100 கோடியைப் பணமாக்க மாற்றியுள்ளது
திமுக கடைசியாகக் கடந்த 2024 ஜனவரி 23ஆம் தேதி ரூ. 20 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களைப் பணமாக மாற்றியது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ஒட்டுமொத்தமாக அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடையில் சுமார் 5.05% திமுகவுக்குப் போய் இருக்கிறது. அதேநேரம் முழு நன்கொடையில் சுமார் 50% அப்படியே பாஜகவுக்குப் போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications