வட மாநிலத் தொழிலாளர்களுக்கு நன்றி கூற விழா! 5,000 பேருக்கு மட்டன் பிரியாணி! அன்று அசத்திய கருணாநிதி!
கருணாநிதி வட மாநிலத் தொழிலாளர்களுக்கு மட்டன் பிரியாணி விருந்து கொடுத்த பிளாஷ்பேக்.
சென்னை: தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் தொடர்பான சர்ச்சை இப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது அவர்களுக்கு தனியாக ஒரு நன்றி அறிவிப்பு விழாவே நடத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
அதுமட்டுமல்ல சென்னையின் பிரபல உணவகமான மவுண்ட் ரோடு புஹாரியில் ஆர்டர் கொடுத்து 5,000 வட மாநிலத் தொழிலாளர்களுக்கு மட்டன் பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் கருணாநிதி.
இதற்கு காரணம் தாம் பார்த்து பார்த்து கட்டிய புதிய தலைமைச் செயலகம் கட்டுமானப் பணிகளில் வட மாநிலத் தொழிலாளர்கள் உழைப்பையும், பங்களிப்பையும் கவனித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற கருணாநிதியின் எண்ணமே ஆகும்.

தலைமைச் செயலகம்
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் கருணாநிதியால் பார்த்து பார்த்து கட்டி முடிக்கப்பட்ட தலைமைச் செயலகம் கட்டுமானப் பணிகளில் 5,000 வட மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். 2 ஆண்டுகளாக இரவு பகலாக நடைபெற்ற இந்த கட்டுமானப் பணிகளை அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி நாளொன்றுக்கு ஒரு முறையாவது நேரில் சென்று பார்த்துவிடுவார். அவ்வாறு அவர் ஆய்வுக்கு செல்லும் போதெல்லாம் அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்த வட மாநிலத் தொழிலாளர்களை அவர் கவனிக்கத் தவறவில்லை.

இந்தியில் மொழிபெயர்ப்பு
எல்லாவற்றையும் பார்த்த கருணாநிதி புதிய தலைமைச் செயலகம் திறப்பு விழா முடிந்தவுடன் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த வட மாநிலத் தொழிலாளர்களை ஊக்குவிக்க ஒரு தனி விழாவை நடத்தினார். ஆடல், பாடல், கச்சேரி என களை கட்டிய அந்த விழாவில் தாமும் பங்கேற்று பேசிய கருணாநிதி, தனது உரையை பங்கஜ் பன்சால் ஐ.ஏ.எஸ். மூலம் வட மாநிலத் தொழிலாளர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் இந்தியில் மொழி பெயர்க்க வைத்தார்.

வட மாநிலத் தொழிலாளர்கள்
இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் வீறு கொண்டு எழுந்த தமிழ்நாட்டில் முதல்முறையாக பார்வையாளர்களுக்காக தனது உரை இந்தியில் மொழி பெயர்க்கப்படுவதாக கூறி கருணாநிதி சிரித்தார். வட மாநிலத் தொழிலாளர்களுக்காக கருணாநிதி தனது உரையை இந்தியில் அன்று மொழி பெயர்க்க வைத்திருக்கிறார் என்றால் அந்த தொழிலாளிகள் மீது அவர் வைத்துள்ள அபிப்பிராயம் என்ன என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மட்டன் பிரியாணி
இதுமட்டுமல்ல 2 ஆண்டுகளாக தலைமைச் செயலகம் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட 5,000 வட மாநிலத் தொழிலாளர்களுக்கு மட்டன் பிரியாணி விருந்தும் கொடுத்தார் கருணாநிதி. இதனிடையே இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முன்னாள் பொதுப்பணித்துறை செயலாளர் ராமசுந்தரம் அளித்த பேட்டியில், வட மாநிலத் தொழிலாளர்களுக்காக சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு இணையாக ஒரு கலை விழாவுக்கு கருணாநிதி ஏற்பாடு செய்யக் கூறியதாகவும் அதுமட்டுமின்றி தடபுடல் விருந்துக்கும் அவர் ஏற்பாடு செய்யக் கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

ருசிகர பிளாஷ்பேக்
தட புடல் விருந்து, கலை விழாவை கண்டு திகைத்துப் போய் வட மாநிலத் தொழிலாளர்கள் வாயே திறக்காமல் இறுக்கமாக இருந்ததாகவும் அதன் பின்னர் அமிதாப் பச்சன் பாடல் ஒன்றை போட்டு அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் ஆடத் தொடங்கியதும் மெதுவாக வட மாநிலத் தொழிலாளர்களும் கொண்டாட்ட மன நிலைக்கு வந்து ஆடத் தொடங்கியதாக தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications