சென்னையில் இதுவே முதல்முறை! அதுவும் தி நகரில்.. இனி கவலை வேண்டாம்! சல்லுனு போகலாம்.. வாவ் மாற்றம்
சென்னை: தலைநகர் சென்னையில் அமையவுள்ள முதல் இரும்பு மேம்பாலத்தின் கட்டுமானம் மிக விரைவாக நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கச் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பொது போக்குவரத்தை எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் அதே நேரத்தில்... நெரிசல் மிக்க இடங்களைக் கண்டறிந்து அங்கே மேம்பாலங்களைக் கட்டும் பணிகளும் நடந்து வருகிறது
இரும்பு மேம்பாலம்: இதற்கிடையே சென்னை நகரின் முதல் இரும்பு மேம்பால கட்டுமான பணிகள் இப்போது படுவேகமாக நடந்து வருகிறது. தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் அமையும் இந்த மேம்பாலம் செப்டம்பர் 2024க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகரத்தின் முதல் ஸ்டீல் மேம்பாலமான இது அப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கும் என்றே நம்பப்படுகிறது.
1.2 கி.மீ நீளமுள்ள மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் நிலையில், இதைச் சென்னை ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். மேலும், பணியை விரைந்து முடிக்கும்படியும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். இது குறித்து அவர் கூறுகையில், "சுமார் 40% ஏற்கனவே பணிகள் நிறைவடைந்துள்ளன. பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், முடிந்தவரை 2024ஆம் நடுவில் இதன் கட்டுமானத்தை முடிக்க முயல்வோம்" என்றார்.
எங்கே அமையும்: ரூ. 131 கோடி மதிப்பில் கட்டப்படும் இந்த மேம்பாலம், தெற்கு உஸ்மான் சாலை-புர்கிட் சாலை மற்றும் மேட்லி சாலை சந்திப்பு; தெற்கு உஸ்மான் சாலை-தென் மேற்கு போக் சாலை மற்றும் புதிய போக் சாலை சந்திப்பு; மற்றும் சிஐடி நகர் வடக்கு சாலை டி-ஜங்ஷன் ஆகியவற்றை இணைக்கிறது. இது அண்ணா சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு பனகல் பார்க் சந்திப்பை சில நிமிடங்களில் கடக்க உதவும். உஸ்மான் சாலையில் இருக்கும் டிராபிக்கை தவிர்த்து சில நிமிடங்களில் சென்றுவிடலாம்.
நகரின் முதல் இரும்பு பாலமான அது 8.4 மீ அகலத்தைக் கொண்டிருக்கும்... சிஐடி நகர் மெயின் ரோட்டில் 140 மீட்டரிலும், உஸ்மான் சாலையில் 120 மீட்டரிலும் மேல் ஏறும் சாலை அமைக்கப்படுகிறது. தற்போது 177 கான்கிரீட் பில்லர்களில் 89 பில்லர்கள் கட்டுமான பணிகள் நிறைவைடந்துவிட்டன. மொத்தம் 53 இரும்பு தூண்கள் இங்கே அமையும் நிலையில், அதில் 13 இரும்புத் தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டன.
சென்னை ஆணையர்: திருச்சியில் இருந்து மேம்பாலத்திற்கான இரும்பு தூண்கள் வரவழைக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதன் கட்டுமான பணிகள் படுவேகமாக நடந்து வரும் நிலையில், அடுத்தாண்டு செப். மாதத்திற்குள் இந்த பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை ஆணையரும் இப்போது இதை உறுதி செய்துள்ளார்.

தற்போது, அண்ணா சாலையில் இருந்து தி.நகருக்குள் நுழைய 3 வழிகள் இருக்கிறது. சிஐடி 1வது பிரதான சாலை வழியாகச் செல்ல வேண்டும்.. அல்லது நந்தனம் சந்திப்பில் உள்ள வெங்கடநாராயண சாலை வழியாகச் செல்லலாம்.. இரண்டும் இல்லையென்றால் தேனாம்பேட்டையில் இருந்து தியாகராய சாலை அல்லது விஜயராகவ சாலை வழியாகச் செல்லலாம்.
டிராஃபிக் குறையும்: பீக் ஹவரில் இந்த மூன்று சாலைகளிலும் மிகக் கடுமையான டிராஃபிக் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அண்ணா சாலையில் இருந்து தி நகர் வரை சிஐடி நகர் வழியாக மேம்பாலம் அமைந்தால், தி நகர் மற்றும் அண்ணாசாலை இரண்டிலுமே போக்குவரத்து குறையும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இந்த புதிய மேம்பாலம், வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்துடன் இணைக்கப்படுவதால், அண்ணா சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் பனகல் பூங்காவை சில நிமிடங்களில் அடையலாம்.












Click it and Unblock the Notifications