கிளாம்பாக்கம் போறீங்களா? இதுதான் கடைசி.. நிறைவடையுது பணிகள்.. யாரந்த நிறுவனம்? குஷியில் சென்னைவாசிகள்
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு எப்போது திறக்கப்படும் என்ற ஆர்வம் சென்னைவாசிகளுக்கு பெருகிவரும் நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
பல்லாவரம், குரோம்பேட்டை, சிட்லப்பாக்கம், தாம்பரம், முடிச்சூர், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம் பகுதியின் போக்குவரத்து நெரிசல் குறைய வேண்டும் என்பதற்காகவும், பயணிகளின் வசதிக்காகவும், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு கட்டப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம்: ரூ.400 கோடி செலவில், 40 ஏக்கர் பரப்பளவில், சகல வசதிகளுடன் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.. கடந்த வருடமே இந்த பஸ் ஸ்டாண்டு திறந்திருக்க வேண்டும்.. ஆனால், போதுமான வடிகால் வசதிகள் இல்லாததாலும், மழைநீர் பஸ் ஸ்டாண்டு வாசலிலேயே தேங்கியதாலும், வடிகால்வசதி பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறும் மழைநீர், சுமார் 180 அடிநீளமுள்ள ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் ஏரி, வண்டலூர் ஏரிகளுக்கும் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளும் நடந்துள்ளன..
பண்டிகை: எப்படியும் பொங்கல் பண்டிகைக்கு முன்பே திறக்க திட்டமிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் உறுதி தந்துள்ளனர். இது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகத்தில், ஆலோசனை கூட்டங்களும் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அவ்வப்போது நடந்தபடியே உள்ளன.
இந்த டிசம்பர் 10 அல்லது 14ம் தேதி, பஸ் ஸ்டாண்டு திறப்பு விழாவை நடத்தலாம் என்று முதலில் ஆலோசிக்கப்பட்டது.. திறப்பு விழா நடத்தப்படுவதற்கான இடம், விழா மேடை, அழைப்பிதழ், போன்ற விஷயங்களை இறுதி செய்யும் பணிகளும் முடுக்கிவிடப்பட்ட நிலையில்தான், சென்னையை புயல் உலுக்கி போட்டுவிட்டது.
இதனால், பஸ் ஸ்டாண்டை சுற்றி மழைநீர் முற்றிலும் சூழ்ந்து கொண்டது.. எனினும், பொங்கலுக்குள் பஸ் ஸ்டாண்டை திறப்பதில் அதிகாரிகள் மும்முரமாகி வருகிறார்கள்.
சோதனை ஓட்டம்: கடந்த வாரம் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.. அரசு விரைவு பஸ்கள், மாநகர பஸ்கள் என சுமார் 100 பஸ்கள் அனைத்தும் வெளியில் இருந்து புறப்பட்டு பஸ் நிலையத்திற்குள் வந்தன.. பஸ்கள் உள்ளே வந்து பிறகு வெளியே செல்லும் போது ஏற்படும் இடையூறுகள் மற்றும் போக்குவரத்து நெரிசல், தேவையான கூடுதல் வசதிகள் குறித்து டிரைவர், கண்டக்டர்களிடம் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
இப்போது விஷயம் என்னவென்றால், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை பராமரிக்கும் பணியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்திருந்தது.. இதற்காக டெண்டர் கோரப்பட்ட நிறுவனங்களின் தகுதிகள் ஆய்வு செய்யப்பட்டது..!!
ஒப்பந்தம்: இந்நிலையில், பிவிஜி இந்தியா என்ற நிறுவனம்தான், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பராமரிக்கும் பணிக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறதாம்.. 15 வருடங்களுக்கு இந்த பேருந்து நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை ஏற்க போகிறதாம். இதற்காக இந்த நிறுவனம், ரூ.30 கோடிக்கு வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று சி.எம்.டி.ஏ. உத்தரவிட்டிருக்கிறது.
இதற்கான ஒப்பந்த பணிகள் முடிந்தவுடன், கிளாம்பாக்கம் பஸ் நிலைய பணிகள் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க, தனி அலுவலர்களை நியமிக்கவும், சிஎம்டிஏ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications