"சம்பவம்" இருக்கு போலயே.. திமுகவுக்கு நாள் குறிச்சாச்சு.. பாஜக தலைவர் அதிரடி.. அடுத்து இதுதானா?
ஊழல் துறைகளின் லிஸ்ட்டை 5-ம் தேதி அண்ணாமலை அம்பலப்படுத்துவாராம்
சென்னை: தமிழகத்தில் ஊழல் புரிந்த அமைச்சர்களின் லிஸ்ட்டை வரும் 5-ம் தேதி வெளியிடப்போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரதமர் மோடியின் 8 வருட சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார். பிறகு கூட்டத்தில் அண்ணாமலை பேசியபோது சொன்னதாவது:
"8 வருடங்கள் முடிந்து விட்டது. ஆனால், எந்த ஒரு அமைச்சர் மீதாவது ஊழல் புகார் சொல்ல முடியுமா? முடியாது... 2019ம் ஆண்டில் நம் பிரதமர் மோடி, வீடு வீட்டுக்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்தினார். இத்திட்டம் கொண்டு வந்த பிறகு கடந்த 3 வருடங்களில் 17 சதவீதமாக இருந்த தமிழ்நாடு இப்போது 37 சதவீதமாக உள்ளது.

பிரதமர் மோடி
நீங்கள் 70 வருடங்களாக செய்த சாதனையை, நம் பிரதமர் ஒரே ஒரு திட்டத்தின் மூலம் 20 சதவீதம் உயர்த்தி இருக்கிறார்.. 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவதற்குள் அதை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதற்கு வேலை செய்து வருகிறோம்... இந்த 8 வருடங்களில் நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. 70 ஆண்டுகளில் ஆட்சி செய்தவர்கள் 5.5 கோடி கழிப்பறையில் மட்டும் கட்டி உள்ளனர். ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் மொத்தமாக 16.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 56 லட்சம் கழிப்பறைகளை ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு கட்டியுள்ளது.

கயல்விழி
தாராபுரத்தை சேர்ந்த தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜ் ஒரு பொம்மை போல செயல்படுகிறார். ஆக்கப்பூர்வமான எந்த விஷயங்களிலும் தலையிடுவதில்லை. அவரது கணவர் செல்வராஜ் அவரை வழி நடத்துகிறார்.. மாநில திமுக அரசு அவற்றை தங்களது திட்டமாக ஸ்டிக்கர் ஒட்டி வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றது. ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இவற்றை முன்னிறுத்தி திமுக ஆட்சி நடத்தி வருகிறது.

குண்டர்கள்
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 25-க்கும் மேற்பட்ட படுகொலைகள் சென்னையில் நடைபெற்றன.. தினமும், இரவும் பகலும், பொதுவிடங்கள் என்றும் பார்க்காமல், இப்படி குற்றச் செயல்களை வெளிப்படையாக செய்து வருகின்றனர்... இவர்கள் பெரும்பாலானோர் திமுகவின் குண்டர்கள்தான்.. சென்னையில் எப்போதாவது இப்படியெல்லாம் நடந்து இருக்கிறதா? சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்வது?

ஊழல் அமைச்சர்கள்
திமுக அமைச்சர்கள் சிலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் குறித்த பட்டியலை வரும் 5-ம் தேதி மதுரையில் வெளியிட உள்ளோம். திமுக தலைமையிலான அரசு மக்களை சுரண்டி எவ்வாறு செயல்படுகிறது என்பதை வரும் 5ம் தேதிக்கு மேல் தமிழக மக்களே கண்கூடாக பார்ப்பார்கள்.. 15 ம் தேதி ஆளுநரிடம் 700 பக்க திமுக ஊழல் குறித்த புத்தகம் வழங்கப்பட உள்ளது.. வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்றத்திற்கு பாஜக. சார்பில் 150 எம்எல்ஏக்கள் கட்டாயம் செல்வார்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மாநில முதல்வர் ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழகத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்தும் விதமாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தது வேடிக்கையாக இருந்தது. அவர்களது ஆட்சியிலேயே கச்சதீவை கொடுத்துவிட்டு பின்பு, பிரதமரிடம் மீட்டுத்தாருங்கள் என்று சொல்வது எவ்வகையில் நியாயம்? பாஜகவினர் வேண்டுமென்று இலங்கை தமிழர்களை புறக்கணித்தனர் என்று பொய்யான குற்றச்சாட்டை கூறி தமிழகத்தில் பாஜகவின் மீது வன்மத்தை கக்கி வருகின்றனர்" என்றார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications