கடல்லயே இல்லையாம்? முரல் மீன்கள், நண்டு, இறால்கள்.. சென்னை காசிமேடு கரைக்கு வராமலே "மறைந்த" வஞ்சிரம்
சென்னை: மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்ததையடுத்து, மீன்களின் வரத்து குறைந்துள்ளது.. இதனால் அசைவ பிரியர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகி உள்ளார்கள்.
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜுன் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆழ் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மீன் பிடி தடைக்காலம் மொத்தம் 61 நாட்கள் நடைமுறையில் இருக்கும்... இந்த தடைக்காலம் அமலில் வந்ததினத்தன்றே, காசிமேட்டில் மீன்கள் விலை குறைந்திருந்தது.. அதாவது, ரூ.1300 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் தற்போது ரூ.800-க்கு விற்கப்பட்டது.. கடம்பா ரூ.200 வரை விலை குறைத்து விற்கப்பட்டது. இப்படி மீன்கள் விலை குறைந்திருந்தாலும், அதை வாங்குவதற்கு ஆட்கள் இல்லை.
வஞ்சிரம்: வஞ்சிரம் - ரூ.800, வவ்வால் - ரூ.700, வெள்ளை வவ்வால் - ரூ.1200, சங்கரா - ரூ.300, கடமா - ரூ.100, நெத்திலி - ரூ.300, நண்டு - ரூ.300, இறால் பெரியது (டைகர்) - ரூ.1200, இறால் சிறியது - ரூ.600 என்று விற்பனையானது..
ஆனால், இனிமேல்தான் இந்த ஒன்றரை மாதத்துக்கு மீன்விலை அதிகரிக்க போவதாகவும், மீன்களுக்கும் கடும் கிராக்கி ஏற்பட போவதாகவும் மீன்வியாபாரிகள் கூறியிருந்தனர்.
படகுகள்: இதனால், மீனவர்கள் விசைப் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். கட்டுமரம், பைபர் படகுகள், வள்ளம் உள்ளிட்ட நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள், கடலோர பகுதியில் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.. மீன் மார்க்கெட்டுக்கு குறைந்த ஆழத்தில் பிடிக்கப்படும் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வருவதால் மீன்களின் வரத்து குறைந்து மீன்களின் விலை அதிகரித்துள்ளது.
இதனால், சென்னை காசிமேட்டுக்கு மீன் வாங்க சென்ற மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்... கவளை, நெத்திலி, சங்கரா ஆகிய மீன்கள் மட்டுமே கிடைத்தன. வஞ்சிரம், வவ்வால் உள்ளிட்ட பெரிய வகை மீன்கள் கிடைக்கவில்லை... அதேசமயம் கேரளா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்கள் மீன் மார்க்கெட்டுகளில் வழக்கம் போல விற்பனை செய்யப்பட்டன.
கலக்கம்: அதாவது, ஒரு கிலோ இறால் ரூ.350-லிருந்து ரூ.450-க்கும், கலிங்க முரல் கிலோ ரூ.350-லிருந்து ரூ.500-க்கும், வாடுமுரல் ரூ.260-லிருந்து ரூ.350-க்கும், நண்டு ரூ.350-லிருந்து ரூ.550-க்கும், செங்கனி மீன் ரூ.450- லிருந்து ரூ.550-க்கும், காளை மீன் ரூ.550-லிருந்து ரூ.700-க்கும், கொடுவா மீன் ரூ.550-லிருந்து ரூ.700- க்கும், ஜிலேபி மீன் ரூ.30-லிருந்து ரூ.70-க்கும் விலை உயர்ந்துள்ளது. ஒரே வாரத்தில் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மீன்பிரியர்கள் இப்பவே கலங்கி போய் கிடக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications